நயம்படபேசு





சிற(ரி)ப்பு பட்டிமன்றம்!


மத்தியானம் வரை தூங்கிவிட்டு, சுதந்திர தின சிறப்புப் பட்டிமன்றம் பார்க்காமல் விட்ட சோம்பல் சிங்கங்களுக்கு மட்டும்!

தலைப்பு:
பணிவிலும் அடக்கத்திலும் சிறந்தவர் மக்குமோகன்சிங்கா?
பணிவுசெல்வமா?
நடுவர்: சாலமன் பாப்பையா
‘மக்குமோகனே’ அணியில்:
டீயாரு, சாந்திமதி, சவுண்டமணி
‘பணிவுசெல்வமே’ அணியில்:
சங்குதானம், கேப்டன், வண்டுமுருகன்


பாப்பையா: அன்புப் பெரியோர்களே, அருமைத் தாய்மார்களே, அழகு குழந்தைகளே...

சங்குதானம்: ஆமா, அப்படியே ஆசை அப்பாடக்கர்களே, அறிவு அம்மாடக்கர்களே, மங்கூஸ் மண்டையனுங்களேனு நீங்க சொல்றதுக்குள்ள டைம் முடிஞ்சிடும்.
பாப்பையா: புடிச்சுட்டான்ல... சங்குதானம் கண்டுபுடிச்சுட்டான்ல... ஹெஹெஹெ, மொதல்ல நீயே பேச வாய்யா!

சங்குதானம்: ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒரு ஃபீலிங், ஆனா நம்ம பணிவுசெல்வம் சாருக்கு மட்டும் ஒரே ஃபீலிங். அது எப்பவுமே பணிவு ஃபீலிங். நடுவர் அவர்களே... எட்டு கிரவுண்ட்ல இருக்கிற தோட்டத்து வீட்டுல, இவர் எல்லா இடத்துக்கும் குனிஞ்சுக்கிட்டே போறதப் பார்த்து, மம்மியே ‘யாருடா ஈமு கோழிய வூட்டுக்குள்ள விட்டது’ன்னு கேட்டாங்கன்னா பாருங்களேன்...

பணிவுன்னா அப்படி ஒரு பணிவு, குனிவுனா அப்படி ஒரு குனிவு. ஊருல பத்து, பதினஞ்சு தடவ குனிஞ்சு பணிந்தவனெல்லாம் இடுப்பு வலிக்குதுன்னு அழுவறான். ஆனா ஒரு தடவ குனிஞ்சு ஒம்போது மணிநேரம் அப்படியே இருந்தாலும், ஏதோ சரவணபவன்ல ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட மாதிரி சந்தோஷத்த காட்டுற திருப்தியான முகம் இவருக்கு மட்டும்தான் வரும். டுடே, சத்யம் தியேட்டர் கூல் பிளேஸ் கஜகஜா... டுமாரோ ஹாட் பிளேஸ் மகாபலிபுரம் கஜகஜா... பட், இவருக்கு சேம் ஃபீலிங் நடுவர் அவர்களே!

பாப்பையா: பிச்சுட்டாருல்ல... சங்குதானம் பிச்சுட்டாருல! மக்குமோகன்சிங் பக்கத்த தூக்கி நிறுத்த வாங்க சவுண்டமணி சார்!

சவுண்டமணி: நடுவர் அவர்களே, இருட்டுல நமக்கு கண்ணு தெரியுமா?

பாப்பையா: தெரியாது!

சவுண்டமணி: பொறந்த குழந்தைக்கு பேசத் தெரியுமா?

பாப்பையா: தெரியாது!

சவுண்டமணி: அட, கரன்ட் எப்போ போவும் வரும்னாவது தெரியுமா?

பாப்பையா: தெரியாது! எப்படி... எல்லாமே கரெக்டா சொன்னேனாய்யா?

சவுண்டமணி: ம்ம்ம், மூணு கேள்விக்கு தெரியாதுன்னு பதில் சொன்ன நீங்களே இப்படி பெருமையா முகத்தை வச்சுருக்கீங்களே... இதுவரைக்கும் கோடிக்கணக்கான கேள்விக்கு தெரியாதுன்னு பதில் சொல்லிட்டு எவ்வளவு அடக்கமா இருக்கார் எங்க மக்குமோகன். கவனிங்கய்யா கவனிங்க. ஆல் லேடிஸ் அண்ட் கேர்ள்ஸ் கவனிங்க!

பாப்பையா: ஆஹா, சபாஷ்யா!

சங்குதானம்: மெட்ரோ வாட்டர்ல இவரு என்ன குவாட்டரா கலந்துவுட்டாரு? இதுக்கு என்ன சபாஷு?

சவுண்டமணி: வாய மூடுறா விளக்கெண்ண டப்பா. நடுவர் அவர்களே, ‘டைம்ஸ்’ பத்திரிக்கை துப்பில்லன்னு துப்பினப்பவும், அதுக்கு இந்த பெட்ரோமாக்ஸ் மண்டயனுங்க ‘டைம்ஸ் ஆப் இந்தியா’வ கொளுத்துனப்பவும், ஒரே மாதிரி எக்ஸ்பிரஷன் காட்டுன அடக்க சிகாமணி எங்க மக்கு. அவரப் போயி அடக்கமில்லாதவர்னு... நாராயணா, இந்தக் கொசுத் தொல்லை...

பாப்பையா: செதச்சுட்டாருல்ல... சவுண்டு ரவுண்டு கட்டி அடிச்சுட்டாருல்ல... வாங்க கேப்டன், உங்க அணிய நீங்கதான் காப்பாத்தணும்!

கேப்டன்: தமிழ்நாட்டு மக்கள் தொகை 72138958. அதுல மம்மிய பார்த்து பம்மிப் பணியறவங்க 21548 பேரு. அதுல 45 டிகிரில குனிஞ்சு பணியறவங்க 21120 பேரு; 25 டிகிரில குனிஞ்சு பணியறவங்க 427 பேரு; ஆனா பெட்ஷீட் விரிச்சு படுக்காத குறையா 10 டிகிரில பணிந்து மரியாதை தர்ற ஒரே ஆளு எங்க பணிவுசெல்வம் அண்ணன்தான். வருஷத்துல மொத்தம் இருக்கிறது 365 நாளு, அதுல மொத்தம் இருக்கிறது 8760 நிமிஷம், அதுல நாம முழிச்சு இருக்கிறது 4380 நிமிஷம், அதுல 4379 நிமிஷத்த இப்படி 10 டிகிரில பணிஞ்சு குனிஞ்சு அடக்கத்துக்கு செலவிடுற ஒரே சிங்கம், எங்க அண்ணன் பணிவு செல்வம்தான். ஆங்!

பாப்பையா: ஏ கலக்கிட்டாருல்ல... கேப்டன் விளக்கிட்டாருல்ல. அப்பத்தா சாந்திமதி, வாங்க!
சாந்திமதி: ராசா, என்ன பெத்த சிங்கு... உலகத்துலயே உன் உருவ பொம்மையைதானய்யா இந்த பாவிப் பயலுக அதிகமா எரிச்சிருக்காங்க. நீ ஒத்த வார்த்த சொல்லலியே! எங்கிட்டு இருந்துய்யா உனக்கு அம்புட்டு வீம்பு வந்துச்சு? எஞ்சாமி... பொன்னய்யன் வீட்டுல நம்ம அப்பாரு வட திருடி அடி வாங்கினப்போ கூட அழுதாரே சிங்கு. டெல்லிக்கு ராசாவ இருந்தாலும், எல்லோருக்கும் கூசாவா இருந்தியே அய்யா... உன் பொறுமை எந்த சிறுக்கிக்கு வரும் அய்யா... எந்த சிறுக்கிக்கு வரும்? தட்டித்தட்டி பெருக்கினாலும், எட்டி எட்டி விளக்கினாலும் நீதான்யா பொறுமைசாலி.

பாப்பையா: அப்பத்தா குப்ப லாரி மாதிரி ஒப்பாரி வச்சிட்டுப் போனாலும், சரியான பாயின்ட்ட சொல்லி இருக்கு. ஹா ஹா, வாங்கய்யா வண்டுமுருகன்...

வண்டுமுருகன்: ஹும்... உங்களையெல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு...

சாந்திமதி: என்ன பெத்த ராசா, மேட்டருக்கு வாப்பா!

வண்டுமுருகன்: ஏ அப்பத்தா, என்ன இது சின்னப்புள்ளத்தனமா! அந்தா இருக்கிற டெல்லிய தூக்கி, இங்கன வச்சுப் பாரு... மக்குமோகன் ‘மக்’க காணோம், பக்கெட்ட காணோம்னு ஓடியே போயிருவாரு. முதுக குனிஞ்சு, கண்ண வெறிச்சு, கைய குவிச்சு, வாய சிரிச்ச மாதிரி வச்சுக்கிட்டு காலை 8 டூ நைட் 8 மணி வரை டூட்டி பார்க்கிறாரு எங்கண்ணன். எத்தன திட்டு வாங்கியும் அழுதது கிடையாது, விட்டு ஓடினது கிடையாது, அடி வாங்கினாலும் சத்தம் வராது! இசை எங்கிருந்து வருது தெரியுமா? பெருசா பேசறீங்க... பேச்சு!

பாப்பையா: வண்டு கலக்கிட்டாருல்ல... இப்போ மக்குமோகன் சிங் பக்கம் கொஞ்சம் கீழதான் இருக்கு. வாங்க டீயாரு... வாங்க!

டீயாரு: சோனியா தங்கச்சி, மக்கு எப்பவும் உன் கட்சி... மக்குமோகன் மனசு தண்ணீரு, அவரு அடக்கம் மணக்கும் பன்னீரு... மூஞ்சில ஊத்தினாலும் வென்னீரு, அவரு கண்ணுல வராது கண்ணீரு... அன்னையிடம் வாங்காத கொட்டா? அன்னா ஹசாரேவிடம் வாங்காத திட்டா? அடக்கத்தில புத்தரையும் மிஞ்சிடுவாறு கொஞ்சம் விட்டா. ஏ டண்டணக்கா, ஏ டனக்குனக்கா! பாவத்திலும் பாவம் எங்க சிங்குதான்... எவ்வளவு அடிச்சாலும் தாங்குற கிங்குதான்.

சங்குதானம்: இவர நம்புனா இந்தியாவுக்கு சங்குதான்!

பாப்பையா: ரெண்டு பக்கமும் நல்லாத்தான் பேசினாங்க. அவங்கவங்க தரப்பு நியாயத்த சொன்னாங்க. என் தீர்ப்பு என்னன்னா, அடக்கமும் பணிவும் உருவானவர் மக்குமோகன்... உருவமே அடக்கமும் பணிவுமானவர் பணிவுசெல்வம். எப்பூடி?
(பேசுவோம்...)