வந்தாச்சு




இதழ்களம்
கவிதைகளுக்குக் களம் அமைத்துத் தரும் இதழ். வடிவத்தில் எளிமையாக இருந்தாலும், படைப்புகளில் கனம். ஜனகப்பிரியாவின் ‘நிறம் மாறிய நெருப்பு’ கவிதை, வாழ்க்கையின் உள்ளீட்டுப் பொருளை இலகுமொழியில் சொல்லிச் செல்கிறது. கண்மணிராசாவின் ‘வண்ண வெயில்’ கவிதையில் குழந்தைமை தவழ்கிறது. வெள்ளாமையற்றுப் போன சம்சாரியின் மனம் பிறழ்ந்த வாழ்க்கையை வலி தடவி காட்சிப்படுத்துகிறார் முதனை அ.உ.வீரமணி. பல கவிதைகள் கருத்தை ஈர்க்கின்றன. அதேநேரம், சில கவிதைகளில் வாசகனை மிரட்டும் அதீத இருண்மை.

(ஆசிரியர்: பெரியார்குமார், தனி இதழ்: ரூ.10/-, முகவரி: 53, ஏ.கே.டி.ஆர். காய்கனி சந்தை, ராசபாளையம்-626117, பேச: 99769 04384.)

இசை கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்


வெங்கி இயக்கத்தில் பானி கல்யாண் இசையமைத் திருக்கும் இப்படத்தில் 7 பாடல்கள். இதில் ஒன்று டான்ஸ் மிக்ஸ். ‘காதலே...’வில் ஆங்கில வாடை எட்டிப் பார்க்காத சுத்த தமிழில் முழுப் பாடலையும் நனைத்திருக்கிறார் கவிஞர் அறிவுமதி. சித்ரா வெங்கி எழுதியுள்ள ‘உயிர் உயிர் தோழா...’ என்ற நம்பிக்கையூட்டும் பாடல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தடதடக்கிறது. ‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்...’ - டைட்டில் பாடலில் கட்டுக்குள் வராமல் அலையும் ஒலியலைகளுக்கு கடிவாளம் போட்டிருக்கலாம் இசையமைப்பாளர். ‘அடி தாஹிரா...’ பாடலில், நட்பின் வாசனையை காதலுடன் நுகரவைக்கிறது பழநிபாரதியின் வரிகள். ‘ஆண் வாசம் பெண் வாசம் கலந்திடத்தான் ஒரு பூங்காற்று வீசாதோ...’ என்ற கவிஞரின் ஏக்கம் காற்றின் செவிகளில் விழட்டும்.

புத்தகம் நல்லவன் வெல்வது எப்படி? - பவான் சவுத்ரி

உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட ‘When You Are Sinking Become A Submarine’ ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு. ஆளுமைத்திறனை மேம்படுத்தி வாழ்வின் உச்சத்தை அடைவதற்கான சூத்திரங்களை உள்ளடக்கிய நூல். மனித மனச் செயல்பாடுகளை நுணுக்கமாக ஆராய்ந்து, மதிநுட்பம், படைப்பாற்றல் மூலம் வெற்றிபெறும் வல்லமையை உதாரணங்களோடு விளக்கும் இந்த நூலின் ஆசிரியர் பவான் சவுத்ரி சமூகம், அரசியல், ஆளுமை, வெற்றி தொடர்பாக புகழ்பெற்ற பல நூல்களை எழுதியவர். நேர்மையற்றவர்களின் செயல்பாடுகள், அவற்றின் விளைவு, நேர்மையாளர் எதிர்கொள்ளும் சவால்கள், நிறுவனங்களில் ஏற்படும் பிரச்னைகள், வெற்றியில் அன்பு, ஒழுக்கம், நன்றி உணர்வு, பற்று ஆகியவற்றின் பங்கு என வரலாறுகளையும், அனுபவங்களையும் உதாரணமாக்கி அழகான நடையில் எழுதியிருக்கிறார் பவான். தனித்துவமிக்க தன்னம்பிக்கை நூல். (விலை: ரூ.150/-, வெளியீடு: Wisdom Village Publications Pvt Ltd, 649, 04U, Udyog Vihar, Phase V, Gurgaon, Haryana122001. பேச: 91 9810800469.)  

வலை pronunciator

நமக்கு சுத்தமாகத் தெரியாத ஒரு வேற்று மொழியில் ஓரளவு பேசி சமாளித்துவிட பயிற்சியளிக்கும் இணையதளம், www.pronunciator.com. இந்தத் தளத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் என 60 உலக மொழிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுக்கிடையே தமிழையும் பார்க்கப் பெருமையாகவே இருக்கிறது. கற்றுக் கொள்ளும் மொழியாக தமிழைத் தேர்ந்தெடுத்து, கற்க விழையும் மொழியாக மற்ற 59 மொழிகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். ஜெர்மன் மொழியைத் தேர்ந்தெடுத்தோம் என்று வையுங்கள்... முதலில் அடிப்படை சொற்கள் சிலவற்றை ஒரு இனிய குரல் ஜெர்மன் மொழியில் உச்சரிக்கிறது. மெல்ல மெல்ல அந்த எளிய சொற்கள் வினைச்சொற்களாகி, வாக்கியங்களாகி, பெரிய உரையாடல்கள் வரை விரிகின்றன. இத்தனை மொழிகளுக்கும் ஒரே பயிற்சிக் களமாக இருப்பது இந்தத் தளத்தின் ப்ளஸ். ஆரம்பத்தில் சில பயிற்சி
களை இலவசமாகக் கொடுத்துவிட்டு மேலும் தொடர பணம் கட்டச் சொல்வது மைனஸ்!