செல்போன் டவரால் கேன்சர் ஆபத்து?





‘‘என் முப்பது வயது மகன் கேன்சரால் இறந்ததற்குக் காரணம் செல்போன் டவரும் அதிலிருந்து வந்த கதிர்வீச்சும்தான்! என் மகனைப் போல் வேறு யாரும் பாதிக்கப்படக் கூடாது. செல்போன் டவர்களின் மிதமிஞ்சிய சக்தியைக் கட்டுப்படுத்த வேண்டும்’’ - டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராம்நாத் கார்க் என்பவர் தொடுத்திருக்கும் கண்ணீர் வழக்கு இது. இந்த வழக்கைத் தொடர்ந்து நீதிமன்றமும் தொலைத் தொடர்புத் துறையும் அடுத்தடுத்து அதிரடியில் இறங்கியுள்ளன...

*  வரும் செப்டம்பர் மாதத்துக்குள் செல்போன் டவர்களிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவை பத்தில் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும்.

*  ஒரு செல்போன் டவர் இருக்கும் இடத்திலிருந்து 1 கி.மீ. சுற்றளவுக்குள் இன்னொரு டவர் அமைக்கக் கூடாது.

*  இனி செல்போன் டவர் அமைக்க கட்டிட உரிமையாளர் மட்டுமல்லாது, உள்ளாட்சியிடமும் அனுமதி பெறவேண்டும். செல்போன் டவரின் கதிர்வீச்சை அளந்து பார்த்த பிறகே அவர்கள் அனுமதி தரவேண்டும்.

இப்படி வரிசையாக கட்டளைகள் வர, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் களத்தில் இறங்கி கதிர்வீச்சு பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்துகிறது. ‘அப்போ நிஜமாவே செல்போன் டவர் ஆபத்தானதுதானா?’ என இந்தியாவே அரண்டு கிடக்கிறது இப்போது!

‘‘உங்க வீட்டு மாடியில செல்போன் டவர் வச்சுக்க பர்மிஷன் கொடுத்தா போதும். மாசம் 25,000 வாடகை தர்றோம்’’ - நம்மில் பலரிடமும் பேசும் அதே பேரத்தைத்தான் டெல்லியில் ராம்நாத் குடும்பத்தினரிடமும் பேசியிருக்கிறது ஒரு செல்போன் நிறுவனம். ‘‘‘பணத்துக்கு ஆசைப்பட்டு இப்போது மகனையே இழந்து நிற்கிறேன்’’ என்று கதறுகிறார் ராம்நாத்.

தன் மகனை இழந்தது மட்டுமில்லாமல், தங்கள் குடும்பத்தினர் எல்லோருக்குமே சமீபகாலமாக உடல் எடை கூடியிருப்பதாகவும், அடிக்கடி பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் குறிப்பிடும் ராம்நாத், இதற்கெல்லாம் காரணமாகக் காட்டுவது, வீட்டு மாடியில் பொருத்தப்பட்டிருக்கும் செல்போன் டவரைத்தான்.

உண்மையிலேயே செல்போன் டவர் இப்படிப்பட்ட நேரடி, உடனடி பாதிப்புகளை உண்டாக்குமா?

‘‘செல்போன் டவர் பாதிப்புகளை உருவாக்கும் என்று தெரிந்துதான் இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டமே ஒரு டவர் அமைக்க பல விதிமுறைகளை வைத்திருக்கிறது. ஆனால், நடைமுறையில் அவை பின்பற்றப்படுவதில்லை. நம் நாட்டில் ஒரு உயிர் போன பின்தான் எல்லா விதிகளும் நினைவுக்கு வருகின்றன’’ என்று காட்டமாக ஆரம்பித்தார் சென்னையில் இயங்கும் கன்ஸ்யூமர் ஆக்ஷன் க்ரூப்பைச் சேர்ந்த சரோஜா.

‘‘இந்திய சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி, செல்போன் போன்ற மின்காந்த அலைகளைப் பரப்பும் டவர்களை மருத்துவமனைகள், பள்ளிகளுக்கு அருகில் அமைப்பதோ, குறுகலான சந்துகளில் அமைப்பதோ கூடாது. அதே போல, ஒரு கட்டிடத்தின் மேற்பரப்பில் 3 மீட்டர் உயரத்துக்கு அடித்தளம் அமைத்து, அதில் இருந்துதான் டவரை எழுப்ப வேண்டும். இன்னொரு கட்டிடத்தை நோக்கி டவரின் ஆன்டெனாக்கள் இருக்கக் கூடாது. 2006ல் இந்த விதிகளை இன்னும் கடுமையாக்கி, மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு நூறு மீட்டர் தள்ளியே செல்போன் டவர் அமைக்க வேண்டும் என்ற விதி போடப்பட்டது. இந்த விதிகளோடு உள்ளாட்சி நிர்வாகத்தின் அனுமதியும் வேண்டும். இந்த சட்டதிட்டங்கள் எல்லாம் மொபைல் கம்பெனிகளுக்குத் தெரியுமா என்றே தெரியவில்லை. இந்த விதிமுறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால் இப்படி ஒரு வழக்கு போடுவதற்கான தேவையே வந்திருக்காது!’’ என்றார் சரோஜா.

செல்போன் கதிர்வீச்சுக்கும் கேன்சருக்கும் எந்த வகையில் தொடர்பு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் புற்றுநோய் சிறப்பு மருத்துவரான ராஜேந்திரனிடம் கேட்டோம்.

‘‘ரேடியோ கேட்கும்போதும் டி.வி பார்க்கும்போதும் வெளியாகும் கதிர்வீச்சுதான் செல்போன் டவரிலிருந்தும், செல்போன்களிலிருந்தும் வெளியாகிறது. கதிர்வீச்சில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று ‘ஐயோனைஸ்டு’ கதிர்வீச்சு. மற்றது ‘நான்-ஐயோனைஸ்டு’. ஐயோனைஸ்ட் கதிர்வீச்சு உடலை ஊடுருவிச் செல்லக் கூடியது. அணுகுண்டிலிருந்து வெளிவருவதும் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுவதும் இந்த ஐயோனைஸ்டு கதிர்வீச்சுதான்.



நான்- ஐயோனைஸ்டு கதிர்வீச்சு என்பது உடலைத் துளைத்துச் செல்லாது. உடலின் மேல்மட்டத்தையே தாக்கக்கூடியது. இதுதான் செல்போன் டவர்களிலிருந்து வெளியாகிறது. ‘நான்- ஐயோனைஸ்டு’ கதிர்வீச்சால் உடனடி பாதிப்புகள் உண்டாகாது. ஆனால் தொடர்ந்து ஒருவர் அந்த கதிர்வீச்சால் தாக்கப்படும்போது உடல்ரீதியான பாதிப்புகள் உண்டாகலாம். நம் நாட்டில் செல்போன் வந்து அதிகபட்சம் பதினைந்து வருடங்கள்தான் இருக்கும். செல்போன் டவர் கதிர்வீச்சின் பாதிப்புகளை அளவிட இன்னும் காலம் பிடிக்கும்.

செல்போன் டவர்களை விட செல்போன்கள்தான் நம்மை அதிக நேரம் பாதிக்கின்றன. எனவே, செல்போனில் பேசும் நேரத்தை முடிந்தவரை குறைப்பது நல்லது. செல்போன் வாங்கும்போது அதன் ரேடியேஷன் அளவைப் பார்த்து வாங்கும் பழக்கம் இங்கு வளர வேண்டும். அதற்காக செல்போன் பேசினால் மூளையில் கேன்சர் வரும் என்றெல்லாம் பயமுறுத்தக் கூடாது. அதெல்லாம் இன்னும் நிரூபிக்கப்படாத விஷயங்கள்.

பொதுவாக ஒருவருக்கு ஒரு நோய் வந்தால் அது இந்தக் காரணத்தால்தான் வந்தது என்று தீர்மானமாகச் சொல்வது கடினம். அதுவும் கேன்சர் போன்ற பாதிப்புகளில் அது மிக மிகக் கடினம். சிகரெட் பிடிப்பவருக்கு சிகரெட் பிடிக்காதவரைவிட கேன்சர் வரும் ஆபத்து அதிகம் என்று சொல்லலாம். ஆனால், சிகரெட் பிடிக்கவில்லை என்றால் கேன்சர் வரவே வராது என்றோ... சிகரெட் பிடித்தால் கேன்சர் கண்டிப்பாக வரும் என்றோ சொல்ல முடியாது. அப்படித்தான் செல்போனும். கூடுமானவரை அதை கட்டுக்குள் வைப்பது நமக்கு நல்லது’’ என்றார் அவர்.

சென்னை ஐ.ஐ.டி-யின் பயோ எஞ்சினியரிங் துறை உதவிப் பேராசிரியரான வெங்கடேஷ் பாலசுப்ரமணியத்திடம் பேசினோம்...

‘‘செல்போன் டவர் கதிர்வீச்சால் மோசமான பாதிப்பு உண்டு என்று ஒரு சாராரும், எந்தவித பாதிப்பும் இல்லை என்று இன்னொரு சாராரும் விவாதிக்கிறாங்க. இந்த இரண்டு கருத்துகளுமே அறிவியல்பூர்வமானதல்ல. கதிர்வீச்சுகளால் கட்டாயம் பாதிப்பு உண்டு. ஆனால், அது உடனடியாகத் தெரிய வாய்ப்பில்லை. தொடர்ந்து கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டால் கேன்சர், மூளைக் கட்டிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, மனச்சோர்வு, கருக்கலைவு, ஞாபகமறதி என்று பல்வேறு பாதிப்புகள் இருக்கும் என்று வெளிநாட்டு ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

சமீபத்தில் லண்டனில் செல்போன் டவர் பாதிப்பு பற்றி சர்ச்சை எழுந்தது. டவருக்குப் பக்கத்தில் வசித்த 1500 கர்ப்பிணிப் பெண்களையும் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளையும் ஆய்வு செய்தார்கள். அதைத் தொடர்ந்து, செல்போன் டவர்களால் கேன்சர் ஆபத்து இல்லை என்று அறிவித்தார்கள். ஆனால், அந்தக் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதே நம்முடைய கேள்வி. இன்று இதனால் பாதிப்பு வந்து விட்டது என்று பதற்றம் அடையாமல், நாளைய பாதிப்புகளைக் கணக்கிடும் தொலைநோக்கு ஆய்வுதான் இன்றைய தேவை!’’ என்றார் அவர்.

இனி, செல்போன் நிறுவனங்களும் தொலைநோக்குப் பார்வையோடு தங்கள் டவர்களை அமைத்தால் நல்லது. மனிதர்கள் மிச்சமிருந்தால்தானே அவர்களுக்கு பில் கட்ட முடியும்!
- டி.ரஞ்சித்
படங்கள்: புதூர் சரவணன், ஆர்.சி.எஸ், தமிழ்