ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இறைவன்





சூரியனின் ஒளிப் பயணம் கலங்கரை விளக்கம் போல எட்டுத் திக்கும் சுழலுகிறது. அதில் மேஷத்தை அடுத்து ரிஷபத்தின் மீதும் அதன் தழுவிய பயணம் தொடர்கிறது. குளிர்வான, இதமான, சுகமான சுக்கிரன்தான் ரிஷப ராசியை ஆட்சி செய்கிறார். இந்த ராசிக்குள் கார்த்திகை நட்சத்திரத்தின் 2, 3, 4 பாதங்களும், ரோகிணி நட்சத்திரமும், மிருக சீரிஷம் நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்களும் அடங்கும்.

பொதுவாகவே ரிஷப ராசி அல்லது ரிஷப லக்னத்தில் பிறந்த நீங்கள் எதையுமே திட்டமிட்டுத்தான் செய்வீர்கள். எதிலுமே அவசரம் காட்ட மாட்டீர்கள். உங்களின் வேலை ஸ்தானத்தை நிர்ணயிப்பதே பத்தாம் இடத்திற்கு அதிபதியான கும்பச் சனிதான். உத்யோக ஸ்தானத்தை பார்க்கும் சனியேதான் தந்தையின் ஸ்தானமாக பாக்யாதிபதியாகவும் வருகிறார். இதனால், ‘‘அப்பா பண்ற பிசினஸ் எனக்குப் பிடிக்கலை. நான் வேற மாதிரி லைன்ல போகப் போறேன்’’ என்பீர்கள். ஆனால், கடைசியில் அப்பாவின் பிசினஸையேதான் செய்வீர்கள்.

அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் உங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்திலேயே தன்மானமும் கௌரவமும்தான் முக்கியம் என எதிர்பார்ப்பீர்கள். ‘‘எதுவாகவோ வரணும்னு என்னென்னமோ படிச்சேன். ஆனா, கடைசியில இங்கதான் வேலை கிடைச்சுது. ரொம்ப கௌரவமா நடத்தறாங்க. அதனாலதான் இங்கயே இருக்கேன்’’ என்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு என சலுகைகளை எதிர்பார்த்து உயர் அதிகாரிகளை காக்கா பிடிப்பதெல்லாம் பிடிக்காது. பாதை மாறிப்போய் காரியங்கள் சாதிப்பது உங்களுக்கு ஒவ்வாத ஒன்று. ரிஷபத்தின் ராசிநாதனான சுக்கிரனும், வேலை ஸ்தானத்தின் அதிபதியான சனியும் அதிநட்பாக இருப்பதால், வேலை விஷயத்தில் எப்போதும் ஒரு ஸ்திரமான நிலைப்பாடு இருக்கும். எப்போதுமே உயர்ந்த வேலையைக் குறிவைத்தே நகர்வீர்கள். ‘‘சின்ன வேலையிலேர்ந்து பெரிய வேலைக்குப் போகலாம்’’ என்றெல்லாம் காத்திருக்க மாட்டீர்கள். எதிரிகளை நீங்கள் அணுகும் விதமே விசித்திரமாக இருக்கும். ‘‘எரியறதை இழுத்தா கொதிக்கறது அடங்கும்’’ என்று போட்டியாளர்களின் நாடியை முடக்கிப் போடுவீர்கள்.

வியாபாரத்தை வேறு யாராலும் செய்ய முடியாத அளவுக்குத் துணிவோடு செய்வீர்கள். ஈடு இணையற்று நடத்துவீர்கள். பல மொழிகளை சரளமாகக் கற்றுத் தேர்ந்து விடுவீர்கள். பிற மாநிலங்களிலும் உங்களின் வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அதற்காக எந்த சிரமத்தையும் தாங்கிக் கொள்வீர்கள். எப்போதுமே தரமான பொருட்களைத்தான் விற்பீர்கள். உங்களின் வியாபாரத்திற்கென்று தனித்துவமான பாதையை உருவாக்குவீர்கள். எந்தெந்த ஊரில் எந்தெந்த பொருட்களுக்கு டிமாண்ட் இருக்கிறது என பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். சலுகைகள் கொடுத்து தரமற்ற பொருட்களை விற்பது உங்களுக்குப் பிடிக்காது.


தொழில் தொடங்கும்போது, ‘இது எங்குபோய் முடியப் போகிறது’ என்பதையும் கச்சிதமாகக் கணிப்பீர்கள். ஒரு பதவியையோ, பொருளையோ அடைய வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால், அதற்கான களப்பணியில் முதலில் இறங்குவீர்கள். ஆனால், நீறு பூத்த நெருப்பாக இருப்பீர்கள். எதையும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். காத்திருக்கும் காரியக் கொக்குபோல இருப்பீர்கள். ஏன் இவ்வளவு சொல்கிறேன் எனில், சுக்கிரன், சூரியன், செவ்வாய், சனி போன்ற ராஜ கிரகங்களின் சேர்க்கையில் இருப்பவர்கள், ஏதேனும் ஒரு விதத்தில் தங்களை நிலைநிறுத்துவதிலேயே குறியாக அலைவார்கள். அதனால் உங்களின் இலக்கு பெரியதாக இருந்தாலும், எப்படியும் அதில் வெற்றி பெற்று விடுவீர்கள்.

‘கண்டு காய் காய்க்கும்; காணாமல் பூ பூக்கும்’ என்று அத்தி மரத்தைப் பற்றி ஒரு விடுகதை உண்டு. அந்த அத்திமரத்தையே நட்சத்திர விருட்சமாகக் கொண்ட கார்த்திகையில் பிறந்தவர்கள், இந்த பழமொழியை மெய்ப்பித்துக் காட்டுவீர்கள். ஏதோ ஒரு வேலை என்று சாதாரணமாக சென்று கொண்டிருப்பவர்கள், திடீரென விஸ்வரூபம் எடுப்பீர்கள். வேலையானாலும் சரி, வியாபாரம் ஆனாலும் சரி... உங்களின் வளர்ச்சி என்பது பாறைக்குள் ஓடும் நீரோட்டம் போல இருக்கும். திடீரென்று பிளந்து நீர் பொங்குவது போல வெளிப்படுவீர்கள்.

ரிஷப ராசிக்குள் வரும் கார்த்திகை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் கடல் சார்ந்த வேலையைத்தான் முதலில் விரும்புவீர்கள். நிறையப் பேர் கப்பல் சார்ந்த துறைகளில் வேலைக்கு அமர்வீர்கள். நாட்டு மருந்துக் கடை, மெடிக்கல் ஷாப் வைத்து நடத்துவீர்கள். மருத்துவத்தில் இதய அறுவை சிகிச்சை நிபுணர், முடநீக்கியல் துறைகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். அதேபோல பரம்பரையாக சித்த வைத்தியம் பார்ப்போரும் இந்த பாதத்தில் உண்டு.

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் கனரக வாகனங்களை வைத்துத் தொழில் நடத்துவீர்கள். அது உங்களுக்குச் சரியாக வரும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதில் நல்ல லாபம் கிடைக்கும். சனி இவ்வாறு கடல் சார்ந்த வேலையை நிர்ணயிப்பதால், அப்படிப்பட்ட வேலைக்கு முயற்சித்தால் உடனே கிடைக்கும். டர்னர், பிளம்பிங் போன்றவற்றிலும் சிறந்து விளங்குவீர்கள். மதுபானங்கள் அல்லது அவற்றைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டால் லாபம் பெருகும்.

நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்தான் பல துறைகளில் அறிவாற்றல் பெற்றவர்களாக இருப்பீர்கள். அதிகாரம், அழகு, ஆலோசனை கூறுதல் என்று மூன்று விதமான விஷயங்கள் ஒருங்கே அமைந்திருக்கும். எனவே, ஆள்பவருக்கே ஆலோசனை சொல்பவராகவோ அல்லது உயர்மட்ட அரசு அதிகாரியாகவோ நீங்கள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அரசாங்கத்தில் நகர் உருவாக்கம் போன்ற பணிகளில் முக்கிய அங்கம் வகிப்பீர்கள். பள்ளி ஆசிரியர், தனியார் டுடோரியல் வைத்து நடத்துதல் போன்றவற்றிலும் ஈடுபடலாம். பால் வியாபாரத்தில் இறங்கினால் நல்ல லாபம் கிட்டும்.  
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு செல்வ நிலையில் ஏற்ற, இறக்கம் இருந்து கொண்டே இருக்கும். நல்ல வேலையில் அமர்ந்து பணம் நிறைய வரும்போதே, வாரி வாணம் விடாது பத்திரப்படுத்துங்கள். குடிசை வீடு கிடைத்தாலும் வாங்கிப் போடுங்கள். நீங்கள் அலுவலகத்தில் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டே வேலை செய்வீர்கள். வேலையில் எத்தனை சுமை இருந்தாலும் உணர்ச்சிகளை உள்ளே சிறைவைக்காமல் ரசனையோடு வெளிப்படுத்துவீர்கள். இறுக்கமான சூழ்நிலையில் எந்த அலுவலகத்திலும் வேலை பார்க்க மாட்டீர்கள். அப்படிப்பட்ட வேலையே வேண்டாம் என்பீர்கள்.

ரோகிணி முதல் பாதத்தில் பிறந்தவர்கள் கொஞ்சம் அழகியல் சார்ந்த வேலையாக இருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். வாழ்க்கையில் சட்டென்று திருப்தி ஏற்பட்டுவிடும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தொழிலில் இறங்க மாட்டீர்கள். ரோகிணியின் அதி பதியான சந்திரன் வாகனத்திற்கு உரியவனாக இருப்பதால், வாகன விற்பனை மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் விற்பனையில் இறங்குவீர்கள். ஃபேன்சி ஸ்டோர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகமுள்ள வேலைகளில்தான் அமர்வீர்கள். இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் பத்திரிகை நிருபர், அரசு சம்பந்தமான வேலைகளை டெண்டர் மூலமாக எடுத்துச் செய்யும் பணி, தனியார் கம்பெனிகளுக்கான பி.ஆர்.ஓ., பெரிய பெரிய கெமிக்கல் தொழிற்சாலைகளில் அனலிஸ்ட் என பணிபுரிவீர்கள். எப்போதுமே வித்தியாசமான வேலைகளைத் தேர்ந்தெடுத்து பார்ப்பீர்கள். மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ் கடை வைத்து நடத்துதல், பாத்திர வியாபாரம், வெள்ளி நகை விற்பனைகளை மேற்கொண்டால் நல்லது. பூமியில் நீரோட்டம் பார்த்து போர் போடும் தொழில் செய்தல், விவசாயத்திற்கு தேவையான இயந்திரங்களை விற்றல் போன்றவை பெருத்த லாபம் தரும். எல்லோரும் ஏதேனும் ஒரு வேலைக்கு செல்லத்தான் போகிறார்கள். ஆனாலும், குறிப்பிட்ட இந்த தொழிலைச் செய்யும்போது கிரகங்கள் அவர்களுக்கு சாதகமாக அமைந்து விடுவதைத்தான் நான் இங்கு குறிப்பிடுகிறேன். நான்காம் பாதத்தில் சந்திரன் இரட்டிப்புச் சக்தியோடு விளங்குகிறது. சுக்கிரனின் ஆதிக்கத்தில் நீங்கள் பிறந்ததால், கண்ணாடி தொடர்பான தொழிலில் ஈடுபடுங்கள். பெண்களுக்கான பிரத்யேக உடைகள், ஃபேன்சி பொருட்கள் வியாபாரம் போன்றவை பெரிய அளவில் லாபத்தைத் தரும். சினிமாவில் ஒப்பனை செய்பவர், பியூட்டி பார்லர் வைத்து நடத்துதல், பொம்மைக் கடை, குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடை என்று தொழில் செய்யும்போது சிறப்பாக வளர்வீர்கள். ஆனால், நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் வெளிநாடு சென்று வேலையில் அமரத்தான் ஆசைப்படுவீர்கள். ரோடு கான்ட்ராக்ட், வருவாய்த் துறை போன்ற சில குறிப்பிட்ட துறைகளில் தொடர்ந்து முயற்சித்து வேலை தேடினால் நல்லவிதமாக அமர்ந்து விடலாம்.



மிருகசீரிஷத்தின் முதல் இரண்டு பாதங்கள் ரிஷபத்தில்தான் வருகின்றன. மிருகசீரிஷத்தின் அதிபதியாக செவ்வாய் வருகிறார். பொதுவாகவே செவ்வாயை சீற்றமுள்ள கிரகமாகத்தான் சொல்வது வழக்கம். ஆனால், உங்கள் ராசியாதிபதி சுக்கிரனாக வருவதால், சீற்றத்தைக்கூட ஆக்க வழியில்தான் உபயோகப்படுத்துவீர்கள். செவ்வாயின் உணர்ச்சிக் கொந்தளிப்போடு, சுக்கிரனின் ரம்மிய குணமும் கைகோர்த்துக் கொள்ளும். எனவே முதல் பாதத்தைச் சேர்ந்தவர்கள் பெரிய பங்களாக்களை கட்டினாலும், அதற்குள் இன்டீரியர் டெக்கரேஷன் மேற்கொள்ளும் பணியைச் செய்வீர்கள். பூங்காக்களை அமைத்துத் தருதல் போன்ற வேலைகளை ஈடுபாட்டோடு செய்வீர்கள். இந்த பாதத்தில் பிறந்தவர்கள் நர்சரி கார்டன், டெக்ஸ்டைல், பீங்கான் பொருட்கள் வியாபாரம் என இறங்கினால் பெருத்த லாபம் பெறலாம். கம்ப்யூட்டர் உதிரிப் பாகங்கள், ஆட்டோமொபைல் ஷாப் போன்றவற்றையும் நடத்தலாம். உயர் பதவியில் அமர்பவர்களுக்கு பி.ஏ.வாக இருப்பீர்கள். அரசு சாராத சமுதாய சேவை அமைப்புகள் தொடங்கி, அவற்றின் மூலமாக சிறுதொழில் தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பை வாங்கிக் கொடுப்பீர்கள். பஸ் கண்டக்டர், நில அளவையாளர் போன்ற வேலைகளுக்கு முயற்சித்தால் உடனடியாகக் கிடைக்கும். இந்த நட்சத்திரத்தின் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் பலரும் ஏதேனும் ஒரு சீருடை அணிந்துதான் வேலைக்குப் போவீர்கள். ராணுவ அதிகாரி, தீயணைப்பு நிலையம், உருக்காலைகள், காவல் துறை, எலெக்ட்ரானிக்ஸ் சார்ந்த கடைகள் வைத்தல் எல்லாம் உங்களுக்குச் சரியாக வரும். உரக்கடை, மருந்துக் கடை வியாபாரமும் நல்லது. பயோடெக், பெட்ரோல், டீசல் துறை, பதிப்பகத் துறையில் ஈடுபட்டால் பெரிய அளவில் லாபம் கிடைக்கும்.   

ரிஷப ராசிக்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். மேலும், வேலை ஸ்தானத்தை நிர்ணயிப்பவராக சனி வருகிறார். எனவே, பெருமாளை வணங்குவது எப்போதும் நன்மை தரும். அதையும் விட சுக்கிரன் உங்களின் ராசியாதிபதியாக வருவதால், குபேரனே பெருமாளை வணங்கிய ஆலயமெனில் அது இன்னும் நல்ல நிலைக்கு உங்களை உயர்த்தும். வேலைவாய்ப்பில் வரும் தடைகள் எளிதாக உடைபடும். அப்படிப்பட்ட தலமே கல்லிடைக்குறிச்சி ஆகும். இத்தலத்தில் லட்சுமி வராகப் பெருமாள் சேவை சாதிக்கிறார். குபேரனால் வழிபடப்பட்ட ஆதிமூர்த்தி இவர். வராகரை வழிபடுங்கள். வற்றாத வளங்கள் பெற்றிடுங்கள். இத்தலம் அம்பாசமுத்திரத்திற்கு அருகே உள்ளது. நெல்லையிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
(தீர்வுகளைத் தேடுவோம்...)