மாந்திரீகமும் மந்திரக் கவிதைகளும்





காதலும், காமமும் நுரைத்துப் பொங்கும் வேட்கையான மந்திரமொழி என்.டி.ராஜ் குமாருடையது. ‘தெறி’, ‘ஒடக்கு’ ‘ரத்த சந்தனப்பாவை’, ‘காட்டாளம்’, ‘கல்விளக்குகள்’, ‘பதநீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’, ‘சொட்டுச்சொட்டாய் விழுகின்றன செவ்வரளிப்பூக்கள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் இவரின் ஆளுமைக்கு பெருமைமிகு அடையாளங்கள். பவித்ரன் தீக்குண்ணி, ஏ.அய்யப்பன் ஆகியோரின் மலையாளப் படைப்புகளை தமிழாக்கியதும் என்.டி.ராஜ்குமாரின் பிரதான இலக்கியப் பங்களிப்பு. கருத்துக்காகவும், படைப்பாக்கச் சிறப்புக்காகவும் பேசப்பட்ட ‘மதுபானக்கடை’ திரைப்படத்தின் கதைநாயகன் இவர்தான்.

நாகர்கோவில் செட்டிக்குளத¢தில் ஜீவிக்கிற என்.டி.ராஜ்குமாருக்கு நிரந்தரமானதென்று எத்தொழிலும் இல்லை. தந்தைவழி ஒட்டிக்கொண்ட மாந்திரீகமும் சிலம்பமுமே இப்போது இவரது வாழ்வாதாரம். திரைத்துறையில் தகுந்த இடம் தேடி நகர்ந்து கொண்டிருக்கும் ராஜ்குமார், வாழ்க்கை நெடுக கடும் கசப்புகளை சுகித்தவர்.

‘‘குலசேகரம்தான் எங்களுக்குப் பூர்வீகம். அப்பா திவாகரன் ஆசான், மருத்துவத்துக்கும், மாந்திரீகத்துக்கும் பேர் போனவர். செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், வசியம்னு அவரைத் தேடி மாநிலம் கடந்தும் ஆட்கள் வருவாங்க. சிலம்பம், வர்மத்துலயும் நிபுணர்.

எங்க கணியான் சமூகத்துல பலபேருக்கு மாந்திரீகம்தான் தொழில். எங்களுக்கும் பிற சமூக மந்திரவாதிகளுக்கும் வித்தியாசம் இருக்கு. கணியான்களோட மாந்திரீகத்துல வெறும் மந்திரங்கள் மட்டுமில்லை. மருத்துவமும், வர்மமும் இணைஞ்சிருக்கு. இது மூணும் சேந்ததுதான் மாந்திரீக வைத்திய முறை. இதுக்கு மூலிகைகளைப் பத்தி தெரிஞ்சிருக்கணும். நல்ல மூலிகை, கெட்ட மூலிகை, சக்தியுள்ள மூலிகை, சூனிய மூலிகைன்னு பல வகைகள் இருக்கு. அடுத்து வர்மம்... உடம்புல எத்தனை முடிச்சுகள் இருக்கு. சிக்கி நிக்கிற முடிச்சுகளை எப்படிப் பிரிக்கணும்... எப்படித் தட்டணும்... இப்படி வர்மத்துல ஏராளம் இருக்கு.

மாந்திரீகம்ங்கிறது ஒரு உளவியல். வார்த்தைகளுக்கும் மனித உள சக்திக்கும் நேரடி தொடர்பு இருக்கு. அதுமாதிரியான வார்த்தைகளை தேடிக் கண்டுபிடிச்சு வார்க்கப்படுறதுதான் மந்திரங்கள். இதை ஒவ்வொரு விதமா உச்சரிக்கும்போதும் ஒவ்வொரு சக்தி வெளிப்படும். கிராமங்கள்ல பேய் பிடிக்கிறது சர்வசாதாரணம். ஒருத்தருக்கு பேய் பிடிச்சிட்டா, சுதர்சன சக்கரம் வரைஞ்சு, குந்திரிகம், இளநீர், எண்ணெய், கருடக்கொடி வேர் வச்சு மாந்திரீகம் செய்வாரு அப்பா. ‘உக்கிரமூர்த்தி கொடுங்காளி, துணைக்கை சிந்தை, சத்ருவன் காலவலி, கையவலி...’ன்னு மந்திரம் சொல்லிக்கிட்டே இளநீரை தலையில எடுத்து ஊத்துவாரு. குந்திரிகத்தை புகைப்பாரு. கருடக்கொடி வேரால தலையை நீவி விடுவாரு. வர்மம் மூலமா வலியெடுக்க வைக்கிற முடிச்சுகளைப் பிரிப்பாரு. இருபது நிமிஷத்தில எல்லாம் முடிஞ்சிரும். இளநீரு தலைச்சூட்டைக் குறைச்சிடும். கருடவேர் மனச்சிதைவை சரி செய்யும். மந்திரங்கள் மனக்கிலேசத்தை போக்கிடும்.

பறவைகளோட கூட்டுக்குள்ளதான் அபூர்வ வேர்கள் எல்லாம் இருக்கும். குஞ்சுகளை எதிரிகள்கிட்ட காப்பாத்துறதுக்கு காடு மலைகளைக் கடந்து பறவைகள் அந்த வேர்களைக் கொண்டுவந்து கூட்டுக்குள்ள வச்சிருக்கும். சின்ன வயசுல அப்பாகூட அலைஞ்சு திரிஞ்ச நாட்களை இப்போ நினைச்சாலும் இனிக்குது.



7ம் வகுப்பு படிக்கும்போது ஒரு விபத்து. தலையில அடிபட்டுருச்சு. அப்பாவோட வைத்தியம் உயிரை மீட்டெடுத்துச்சு.. ஆனா இன்னைக்கு வரைக்கும் அதோட பாதிப்பு இருக்கு. திடீர்னு வலிப்பு வரும். மனப்பிறழ்ச்சி மாதிரி ஆயிடும். என்ன செய்யிறோம்னு தெரியாமச் செய்வேன். விபத்துக்குப் பிறகு, பள்ளிக்கூடம் வேணாம்னு முடிவு பண்ணிட்டாங்க. சின்ன வயசுலேயே மாந்திரீகத்துல எனக்கு ஆர்வம் இருந்துச்சு. அப்பா மாந்திரீகம் செய்யிறப்போ பக்கத்துல உக்காந்து கவனிப்பேன்.

வயசுக்கே உரிய கிருவம் வந்திடுச்சு. சிலம்பம் கத்துக்கிட்டேன். உடம்பை முறுக்கேத்திக்கிட்டு, ஊருக்குள்ள காலரைத் தூக்கி விட்டுக்கிட்டு மைனர் நடை நடக்குறது, வம்பு, தும்புக்குப்போறதுன்னு வாழ்க்கை வேறொரு டிராக்ல போகத் தொடங்கிருச்சு. எங்க குரூப்ல இருந்த தேவன்னு ஒரு பய படிக்கிற பழக்கமுள்ளவன். எப்ப பாத்தாலும் தத்துவமும் இலக்கியமுமா பேசுவான். சில நேரம் கவிதைகளைக் கொண்டுவந்து படிச்சு காமிப்பான். ஏதாவது விளக்கம் கேட்டா, ‘படிக்காத புள்ளைகளுக்கு இதெல்லாம் புரியாது மக்களே...’ன்னு கேலி பேசி சிரிப்பான்.

அந்த கேலியாலதான் வாசிக்க ஆரம்பிச்சேன். சித்தர் பாடல்கள், வைகுண்டசாமியோட சாட்டு நீட்டோலைன்னு எனக்குப் பிடித்த விஷயங்கள்ல இருந்து வாசிப்பு தொடங்குச்சு. இசை வடிவ இலக்கியங்கள் மேல ஏற்பட்ட ஈர்ப்பால மெல்ல, மெல்ல கவிதைகள் பக்கம் நகர்ந்தேன். அப்படியான ஒரு தொடக்கம், மரபிலக்கியம், செவ்வியலக்கியம், திராவிட இலக்கியம்னு இருபது வயசுக்குள்ள தீவிரமான வாசிப்பாளனா மாத்திடுச்சு. ‘அடிதடி, வம்புதும்புன்னு திரிஞ்ச பய, இப்படி புத்தகமும், கையுமா முடங்கிக் கிடக்கிறானே’ன்னு எல்லாருக்கும் ஆச்சரியம். எழுதுற நேரமெல்லாம் அண்ணன்மாருங்க ‘ஏதோ புள்ளைக்கு லவ் லெட்டர் எழுதுறாம்பா’ன்னு திட்டுவாங்க. அப்பாவும் திட்டுவாரு. நான் எதையும் காதுல வாங்கிக்கிறதில்லை.

கார்த்திகேயன்னு ஒரு நண்பர்தான் எனக்கு கலை இலக்கியப் பெருமன்றத்தை அறிமுகப்படுத்துனார். இலக்கில்லாம எழுதிக்கிட்டிருந்த என்னை பக்குவப்படுத்தி, எழுத்தை செம்மைப்படுத்தி, என் போக்கை மாத்தினது பெருமன்றம்தான். எல்லாத்தையும் கேள்விக்கு உட்படுத்திப் பார்க்கிற மனோபாவம் வளர்ந்துச்சு. அதுவரைக்கும் எனக்கு இணக்கமாயிருந்த என் பண்பாடு, பாரம்
பரியம் எல்லாமும் அர்த்தமற்றதா தோணுச்சு.

என்னோட போக்கை வீட்டுல உள்ளவங்க ரசிக்கலே. இருந்தாலும் பொன்னீலன் அண்ணாச்சி, பேராசிரியர் ஸ்ரீகுமார் மாதிரி பெரியவங்களோட பழகுறதால ‘தவறு செய்யல’ன்னு மட்டும் நம்புனாங்க. எதிர்காலத்தைப் பத்தி எந்தக் கவலையுமே இல்லாம எழுத்தும், படிப்புமா திரிஞ்சேன். வாசிப்பும் இலக்கியப் பரிச்சயமும் விரிவடைஞ்ச நேரத்தில, எனக்குன்னு ஒரு தனித்துவமும், மொழிக்கட்டும் உருவாக்க முயற்சி செஞ்சேன். நானறிஞ்ச மாந்திரீகமே எனக்கான அடையாளமா இருந்துச்சு. நாட்டுப்புறவியல் சார்ந்த விஷயங்களை உள்ளடக்கமா வச்சு, எங்க மொழியையே அங்கதமா கையாண்டு எழுதத் தொடங்கினேன்.

என் முதல் தொகுப்பு ‘தெறி’ வெளிவர்ற வரைக்கும் நான் எந்த வேலைக்கும் போகல. என் கவிதைகளே எனக்கு ஒரு வேலையை உருவாக்கித் தந்ததுதான் ஆச்சரியம். பாளையங்கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியைச் சேர்ந்த ஃபாதர் ஜெயபதி என் புத்தகத்தைப் படிச்சுட்டு, என்னைக் கூப்பிட்டு கல்லூரியிலேயே வேலையும் கொடுத்தார். பி.ஆர்.ஓ. வேலை. 4 வருஷம் கல்லூரிப் பணி. பல காரணங்களால தொடர்ந்து அங்கே வேலை செய்ய முடியல. ரயில்வே மெயில் சர்வீஸ்ல வேலை பார்த்த எங்க அண்ணாச்சி, ஒரு லீவ் பிளேஸ்ல என்னை சேத்துவிட்டார். தற்காலிகப்பணி. லீவெடுக்கிறவங்க இடத்துல நின்னு நாம வேலை செய்யணும். வேலையில சேந்த கொஞ்சநாள்லயே திருமணம் முடிஞ்சுச்சு. மனைவி பேரு ஸ்ரீலேகா. ரெண்டு குழந்தைங்க... சித்தார்த் 6ம் வகுப்பு. ஓவியா, எல்.கே.ஜி.



தீண்டாமைக் கொடுமை அரசு அலுவலகம் முதல் எல்லா இடத்திலயும் இருக்கு. நேரடியா நானே அப்படியொரு பிரச்னையை எதிர்கொண்டேன். ரயில்வே மெயில் சர்வீஸ்ல 12 வருடங்கள் வேலை செஞ்சிருக்கேன். நான் முரட்டுத்தனமான ஆளா இருந்தாலும், அடங்கியே போயிருக்கேன். ஆனா அந்த ஜாதிய மனோபாவம் என்னை அங்க இருந்தே துரத்துச்சு.
   
வேலை போனதும், பெரிய அளவில மனநிலை பாதிப்பு வந்துச்சு. அடிக்கடி வலிப்பு ஏற்படும். என்னையறியாம நான் வேறொரு உலகத்துக்குப் போயிட்டேன். திரும்பவும் என்னை மீட்டெடுத்தது, இயக்குனர் கமலக்கண்ணன்.  வெளியில் சொல்ல முடியாத வறுமையில இருந்து என்னை மீட்டெடுத்ததும் அவர்தான். ‘மதுபானக்கடை’ படம் மனதளவில என்னை மனுஷனாக்குச்சு. ஒருவேளை அப்படியொரு மாற்றம் வராமப் போயிருந்தா, நான் வேறுமாதிரி ஆகியிருப்பேன்.

இப்போ மாந்திரீகத்துல இன்னும் தீவிரமா ஈடுபடறேன். அப்பா நிறைய ஓலைச்சுவடிகளை வச்சிட்டுப் போயிருக்கார். எல்லாமே பொக்கிஷங்கள். அதையெல்லாம் ஆய்வு பண்றேன். நிறைய சோதனை முயற்சிகள்ல இறங்கியிருக்கேன். சமூகத்துக்கு நிறைய சொல்ல வேண்டியிருக்கு. எழுத்துலயும் இன்னும் நிறைய கடமைகள் இருக்கு. இன்னும் கூடுதலா என்னை நிறுவ வேண்டிய தேவையும் இருக்கு. சிலம்பத்தையும் மீட்டுருவாக்கம் செய்ய விரும்புறேன். நிறைய பேருக்கு பயிற்சி கொடுக்கிறேன். எல்லாத்தையும் தாண்டி சினிமாவும் என் விருப்பத்துக்குரிய தேடலா இருக்கு.
நல்ல கவிஞனா வாழ்றதை விட சிரமம், நல்ல மனுஷனா வாழுறது. கசப்புகளை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு நல்லவங்களை, நல்ல விஷயங்களை உள்வாங்கத் தொடங்கியிருக்கேன். இது
வரைக்கும் செஞ்ச எதிலயும் திருப்தியில்லே. இனி நிறைய செய்ய வேண்டியிருக்கு...’’
- வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.மணிகண்டன்