உல்லன் பொம்மைகளில் உடனடி லாபம்!





குழந்தைகள் வைத்து விளையாடுகிற பொம்மைகள் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டும். பொம்மையின் சாயமோ, பெயின்ட்டோ வாயில் பட்டாலும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடாது. கூரிய முனைகள் இருக்கக் கூடாது. ஆனால் இன்று மார்க்கெட்டில் கிடைக்கிற பல பொம்மைகளும் இப்படி எந்த இலக்கணங்களும் இல்லாமல் வருபவைதான்.

இதற்கு சென்னையைச் சேர்ந்த உமா லட்சுமியிடம் இருக்கிறது தீர்வு. அவர் செய்கிற உல்லன் பொம்மைகள் மேலே சொன்ன அத்தனை வரையறைகளுக்கும் உட்பட்டவை. பாதுகாப்பானவை. ஸ்வெட்டரில் ஆரம்பித்து குல்லா, டேபிள் மேட், செல்போன் பவுச் என உல்லனில் செய்கிற எத்தனையோ பொருள்களைப் பார்த்த நமக்கு, உமா லட்சுமி செய்கிற உல்லன் பொம்மைகள் கவனம் ஈர்க்கின்றன. விளையாட மட்டுமின்றி, வீட்டில் அலங்காரமாக வைக்கவும் பொருத்தமானவை இவை.

‘‘எங்கம்மா உல்லன்ல நிறைய பொருட்கள் பண்ணுவாங்க. நானும் கத்துக்கிட்டேன். என் பொண்ணுக்கு ஸ்கூல்ல பொம்மை பண்ணச் சொல்லி பிராஜக்ட் கொடுத்தாங்க. அவ வித்தியாசமா ஏதாவது வேணும்னு ஆசைப்பட்டா. அவளுக்காக உல்லன்ல பொம்மை செய்து பார்த்ததுல, ரொம்ப நல்லா வந்தது. அதை வீட்ல வச்சிருந்ததைப் பார்த்துட்டு நிறைய பேர் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்படியே அது எனக்கொரு பிசினஸாவே மாறிடுச்சு’’ என்கிற உமா, கற்றுக்கொள்ள விரும்புவோர்க்கு வழி காட்டுகிறார்.

‘‘வெறும் 500 ரூபாய் முதலீடு இருந்தாலே இதை ஒரு பிசினஸா ஆரம்பிக்கலாம். பொம்மை செய்யத் தேவையான உல்லன் நூல், நைலான் பஞ்சு, குரோஷா ஊசி, சாதாரண ஊசி, ரெடிமேட் பொம்மைகள், அலங்காரத்துக்கு மணிகள், சமிக்கி, கலர் பேப்பர்னு எல்லாமே தையல் பொருள்கள் விற்பனை செய்யற கடைகள்ல கிடைக்கும். ஒரு பண்டில் உல்லன் நூலோட விலை பத்து ரூபாய். ஒரு பொம்மைக்கு ரெண்டு பண்டில் இருந்தா போதும்.



ஃபர் டாய்ஸ் எனப்படுகிற புசுபுசு பொம்மைகள் பார்த்திருப்பீங்கதானே... அதுல என்னவெல்லாம் செய்ய முடியுமோ - உதாரணத்துக்கு டெடி பியர், மிக்கி மவுஸ், குரங்கு, நாய்க்குட்டி, ஒட்டகம்னு - எல்லாத்தையும் இதுலயும் செய்யலாம். விநாயகர் மாதிரியான சாமி உருவங்களையும் செய்யலாம். எடை குறைவான இந்த பொம்மைகளை அழுக்கானா, துவைச்சு உபயோகிக்கலாம்’’ என்கிறார் உமா.
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்