கவிதைக்காரர்கள் வீதி






கேள்வி

அத்தனை நீரையும்
பாட்டில்களில் அடைத்து
மூடி வைத்துக்கொள்ளும்
பெரும் முயற்சியில்
மனிதர்கள் வென்றபின்
தங்கள் தாகம் தீர
என்னதான் செய்யும்
காகங்களும் குருவிகளும்
மரங்களும் விலங்குகளும்?

வேதனை
கொதிக்கும் தார்ச்சாலை சூடு
இரும்பு லாடங்கள் வழியே
கால்களில் பயணித்து
உடலில் பரவிச்
சிலிர்க்கும் வேதனையை
எப்படிச் சொல்லும் மாடுகள்,
வேகம் கூட்ட
வால் முறுக்கும் மனிதர்களிடம்?

ஆலோசனை
எந்தெந்த நாக்குகளை
யார் யார்
சிவக்க வைப்பதென
கூடிக் கூடி ஆலோசிக்கின்றன
கொடிகளில் படர்ந்திருக்கும்
வெற்றிலை இலைகள்...

துக்கம்
பறவைகள்
தங்கள் துக்கங்களை
பகிர்ந்து சென்றபிறகுதான்
மனமொடிந்து
விழுந்திருக்கக்கூடும்
மல்லிகைப் பூக்கள்!

மாற்றம்
அவசரமாய் அழைத்த
குழந்தையின் குரலுக்கு
ஓடிவந்து அம்மா பார்க்கும்முன்
யானையாய் இருந்த
மேகக் கூட்டம்
பூனையாய் மாறியிருந்தது...

- தஞ்சை கமருதீன்