வந்தாச்சு



இதழ் : அறிவின் சுழல்

‘அறியாமை இருளகற்ற’ என்ற அடைமொழியோடு வெளிவரும் இந்த இதழில் பக்கத்துக்குப் பக்கம் தன்னம்பிக்கை சார்ந்த தகவல்கள் விரவிக் கிடக்கின்றன. கவிதைகளுக்கும் பிரதான இடமளிக்கப்பட்டுள்ளது. இடையிடையே பொது அறிவுத் தகவல்களும் துணுக்குகளும். சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை விபத்து பற்றிய கட்டுரை ‘நறுக்’கென சுடுகிறது. ‘குறும்பா’க்கள் கவனிக்க வைக்கின்றன. மாணவர்களின் படைப்புகளுக்கும் களம் அமைத்துத் தருவது வரவேற்கத்தக்கது.
(பொறுப்பாசிரியர்: ம.சத்தியப்பிரியன், தனி இதழ்: ரூ.5/-, ஆண்டுச் சந்தா: ரூ.50/-, முகவரி: 32, தில்லை நகர் 2வது தெரு, மானகிரி அஞ்சல், காரைக்குடி வட்டம், சிவகங்கை-630307, பேச: 9842589571.)

போடா போடி
பெயரைப் போலவே பாடல்களும் அடாவடி அட்ராசிட்டிதான். ஏழு பாடல்கள், ஒரு தீம் மியூசிக்... மெலடி தேடினாலும் கிடைக்கவில்லை. ‘லவ் பண்லாமா வேணாமா...’ பாடலில் ‘நான் கரெக்டானவன், ரொம்ப நல்லவன், கன்ஃபியூஷன் இல்லாதவன், மன்மதன், வல்லவன்’ என்று சொந்த குரலில் சிம்பு பாடப் பாட, ஏனோ சிரிப்பு வருகிறது. ‘போடா போடி...’, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா...’ பாடல்கள், தூக்கத்தின் சாவிகள். பேரரசு ஸ்டைலில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார். அதில், ‘உன் பார்வையிலே...’ மட்டும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. ‘ஐயம் ஏ குத்து டான்ஸர்’ பாடலில் ஷங்கர் மகாதேவனை வீணடித்த பெருமை, புதிய இசையமைப்பாளர் தரண் குமாரையே சாரும். வாலி எழுதியிருக்கும் ‘அப்பன் மவனே வாடா...’ பாடலையும் எஸ்.டி.ஆரே பாடியிருக்கிறார். தீம் மியூசிக் மட்டும் ஆறுதல்!

நீர்ப்பறவை
‘தென்மேற்கு பருவ காற்று’ படத்தில் தேசிய விருது பெற்ற வைரமுத்து - ரகுநந்தன் கூட்டணி என்ற எதிர்பார்ப்பு வீணாகவில்லை. ‘மீனுக்கு சிறு மீனுக்கு...’ பாடலில் விஜய்பிரகாஷ் - ஹரிணியின் குரல் தூண்டில் போடுகிறது. ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள ‘பற பற...’ பாடலில் ‘பெட்ரோல் மீது தீயை போல உந்தன் மீது பரபரவென பரவுது மனசு...’ என வார்த்தை ஜாலம் புரிந்திருக்கிறார் வைரமுத்து. பிரசன்னா, சைந்தவி பாடியுள்ள ‘தேவன் மகளே...’ பாடலைக் கேட்டு முடிக்கையில் கடற்கரையாய் மனசில் ஈரம் படர்கிறது. ‘ரத்தக்கண்ணீர்...’ பாடலில், ‘பாவத்தின் பள்ளம்விட்டு எழுகின்றேன்...’ என்று புத்தம்புதிய வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறார் கவிஞர். இரைச்சலை சிந்தாத ரகுநந்தனின் மென்மையான கம்போஸிங்கை பாராட்டலாம்.

வீடு - தாஸ்

குங்குமம் வார இதழில் வெளியாகி லட்சக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது. இன்றுள்ள சூழலில், வில்லங்கமில்லாத ஒரு இடத்தை வாங்குவதில் தொடங்கி, நம்பகமான ஒரு பொறியாளரை அடையாளம் காண்பது வரை எல்லாமும் சவால்தான். எங்கெங்கு காணினும் கண்சிமிட்டும் கவர்ச்சிகரமான ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் ஏமாறாமல் உங்களின் கனவு இல்லத்தை வாங்குவதற்கான ஒட்டுமொத்த வழிமுறைகளையும் அள்ளித் தருகிறது இந்த நூல்.

எப்படிப்பட்ட மனையை வாங்குவது? அங்கீகாரம் பெற்ற மனைகளை கண்டுபிடிப்பது எப்படி? பத்திரங்களை சரி பார்ப்பது எப்படி? எந்தெந்த பத்திரங்கள் அவசியம்? - இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது இந்த புத்தகத்தில். வீட்டுக்கடனின் பின்னணி, அதன் சாதக பாதகங்களும் இதில் அடக்கம். இந்தப் புத்தகம், சொந்த வீடு கனவுகாணும் ஒவ்வொருவரும் எடுத்து வைக்கும் முதல் அடியாக இருக்கும்!
(160 பக்கங்கள், விலை: ரூ.125/-, வெளியீடு: ரிகிலி பப்ளிகேஷன்ஸ்,
229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-4, பேச: 9840978016.)