நாங்க ரைட் சொன்னாதான் ஃப்ளைட்!





மழைக்காலத்தில் வானிலை அறிக்கை முக்கியமாகப் படுகிறது. கோடையில் எத்தனை டிகிரி வெயில் என்று சொல்கிறார்கள். இதைத் தவிர மற்ற நாட்களில் நமது வானிலை ஆய்வு மையங்களில் அப்படி என்ன ஆய்வு நடக்கிறது?
- கவிதா சிவக்குமார், மணப்பாறை.

பதில் சொல்கிறார் ரமணன்

(இயக்குனர், புயல் எச்சரிக்கை பிரிவு, வட்டார வானிலை மையம், சென்னை)
இந்திய வானிலைத் துறை, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருகிறது. டெல்லியில் மத்திய வானிலை ஆய்வு மையமும், நாட்டின் பிற பகுதிகளில் ஆறு மண்டல வானிலை ஆய்வு மையங்களும் இருக்கின்றன. சென்னையில் இயங்குகிற மண்டல வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரியின் வானிலையையும் கண்காணிக்கிறது.

மழை, வெயில் மட்டுமல்ல... புயல், பூகம்பம் என எல்லா இயற்கைச் சீற்றங்களையும் நாங்கள்தான் கவனித்தாக வேண்டும். மற்ற அரசு அலுவலகங்களைப் போலவே இங்கும் பல உட்பிரிவுகள் உள்ளன. மாநிலங்களில் ஆங்காங்கே மழை, வெப்பமானி, காற்றின் அழுத்தம் அறியும் கருவி போன்றவற்றை நிறுவியிருப்போம். அவற்றில் பதிவான அளவுகளைப் பெறுவது மற்றும் அவற்றைக் கண்காணிப்பது, பராமரிப்பது, செப்பனிடுவது போன்றவை, எங்களது இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் பிரிவு ஆட்களின் வேலை.

காலநிலைத்துறை என்று ஒரு துறை... புள்ளி விவரங்கள், தரவுகள் சேகரிப்பது இந்தத் துறையின் முக்கியமான வேலை. பூனா தரவு மைய தலைமை அலுவலகத்தில் நூறு வருடத்துக்கு முந்தைய மழை அளவைக்கூட பதிவு செய்து பாதுகாத்து வருகிறார்கள். ஆராய்ச்சிப் பிரிவினருக்கு வேலை, வானிலையில் நாளுக்கு நாள் ஏற்படுகிற மாற்றங்களைக் கவனித்து அதன் சாதக பாதகங்கள் பற்றி ஆய்வு செய்வது.

இவை தவிர, எங்கள் ஊழியர்கள் மாநில அரசின் பல துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதும் அவசியம். தமிழகத்தின் உட்பகுதியில் எங்காவது சிறு அளவில் மழை பெய்தால் கூட அந்த விவரங்களைச் சேகரிக்கும் தாலுகா அலுவலகங்கள் அவற்றை சென்னை தலைமைச் செயலகத்துக்கு அனுப்புகின்றன. அங்கிருந்து அந்தத் தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கும். அவற்றையும் நாங்கள் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.



இன்னொரு முக்கியமான விஷயம்... எல்லா விமான நிலையங்களிலும் எங்கள் அலுவலகக் கிளை இருக்கும். காரணம், விமானம் மேலெழும்பி பறக்கத் துவங்கும்போதும், தரையில் இறங்கும்போதும் வானிலையின் தாக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தினமும் அன்றைய வானிலை குறித்த விவரங்கள் எங்கள் அலுவலர் மூலம் ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் அறைக்குச் செல்லும். அதைக் கொண்டுதான் அவர்கள் ஃபிளைட்டை இறக்கவோ டேக் ஆஃப் செய்யவோ விமானிகளுக்கு கட்டளைகளைப் பிறப்பிக்கிறார்கள்.

உயில் கிழிந்தால்..?

என் தந்தை எழுதி வைத்திருந்த உயிலை அவர் இறந்த பின் என் சகோதரரின் மனைவி கிழித்தெறிந்து விட்டார். அதில் என்ன எழுதியிருந்தது எனத் தெரியவில்லை. இப்போது நான் என்ன செய்யலாம்?
- கணேசன், கும்பகோணம்.

பதில் சொல்கிறார் சிராஜுதீன் (வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்.)
முதலில் உயில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். பதிவு செய்யப்பட்டிருந்தால் பிரச்னையே இல்லை. சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகத்தில் உயிலின் நகல் கண்டிப்பாக இருக்கும். எளிதாக அதைப் பெற்றுக்கொள்ளலாம். பதிவு செய்யப்படாத உயிலென்றால், ஜெராக்ஸ் பிரதி இருந்தால், உயில் கிழிக்கப்பட்டதை நிரூபிக்கும்பட்சத்தில் கோர்ட் அதை ஏற்றுக்கொள்ளும். அல்லது உயிலில் இருக்கும் விவரம் தெரிந்த எவராவது சாட்சி சொல்ல முன்வந்தால், அந்த சாட்சி நம்பகத்தன்மையானதாக இருக்கும்பட்சத்தில் அதைக்கூட நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்.

A to Z... எதைப் பற்றிய சந்தேகத்துக்கும் இந்தப் பகுதியில் விடை பெறலாம். கேள்விகளை அனுப்புங்கள்: Q - A ,
குங்குமம், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-600004.