கமலோடு முத்த கெமிஸ்ட்ரி... சுனைனா





‘‘டென்த் ஸ்டூடன்ட்டுக்கு டிகிரி சீட் கொடுத்த மாதிரி, ‘நீர்ப்பறவை’ வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. இதை ட்ரிபிள் புரொமோஷன்னு கூட சொல்லலாம்’’ என்கிற சுனைனாவின் பேச்சிலும் முகத்திலும் பளிச்! ‘இயக்குனருக்கு நன்றி... தயாரிப்பாளருக்கு நன்றி...’ என்று அவர் ஆரம்பிக்கும் முன் நாம் முந்திக் கொண்டோம்...

‘‘யதார்த்த சினிமா எப்படி இருக்கு?’’

‘‘முதல் நாள் ஷூட்டிங்ல ஏதாவது தடங்கல் நடந்தா நல்லதுன்னு ஒரு சினிமா சென்டிமென்ட் இருக்குல்ல... என் விஷயத்துல அது ஒர்க்அவுட் ஆயிடுச்சு. முதல்நாள் ஷூட்டிங்லயே பாறை வழுக்கி கீழே விழுந்து, மயக்கமாயிட்டேன். யூனிட்ல எல்லாரும் என்னைச் சுத்தி கூட்டமா நிக்கிறது, என்ன ஏதுன்னு அவங்க பதறுறது இதெல்லாம் ஒரு பக்கம் கேட்டாலும், இன்னொரு பக்கம் ‘நீ செத்துப் போயிட்டே’ன்னு உள்ளுக்குள்ள ஒரு குரல் பயமுறுத்துச்சு. பத்து நிமிஷம் கழிச்சி மயக்கம் தெளிஞ்சு கண் முழிச்சா, உதட்டுக்குக் கீழே காயம்.’’

‘‘அச்சச்சோ... அப்புறம் என்னாச்சு?’’
‘‘அன்னிக்கு ஷூட்டிங் கேன்சல் ஆகி, காயமெல்லாம் சரியான பிறகு நடிச்சேன். வெயில்ல நின்னு, முகத்துல பிளாக் டோன் வரவழைச்சு, எஸ்தர் கேரக்டருக்கு ரெடியாகி நின்னப்போ மீனவ கிராமத்துப் பொண்ணாவே மாறிட்டேன். எனக்கு ஷாட் இல்லாதப்போ வேடிக்கை பாக்குற மக்களோட மிக்ஸ் ஆயிடுவேன். அடுத்த ஷாட் வரும்போது, ‘எங்க சுனைனா’ன்னு அடையாளம் தெரியாம தேடுவாங்க. நைஸ் எக்ஸ்பீரியன்ஸ்! என்னோட நடிப்பைப் பார்த்துட்டு எல்லாரும் பாராட்டுறாங்க. படத்துக்கு விருதுகள் கிடைக்கும்னு சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்கிற சுனைனா, மீனவப் பெண்ணாக நடித்திருந்தாலும் மீன் வாசனை பிடிக்காதாம்.


‘‘அப்படிப்பட்ட நான் எட்டு கிலோ வெயிட்டான மீனைத் தூக்கிட்டு வர்றது மாதிரியும், என் மேல மீனைக் கொட்டுற மாதிரியும் நடிச்சிருக்கேன்’’ என்ற சுனைனாவை ‘நீர்ப்பறவை’யிலிருந்து வெளியே கொண்டு வந்தோம்.

‘‘சுனைனான்னா..?’’
‘‘அழகான கண்கள்னு அர்த்தம். அதனாலேயே கண்கள் விஷயத்தில் ரொம்பவே கேர் எடுத்துக்குவேன். லேட் நைட் தூங்குற பழக்கம் இல்ல. ராத்திரி பத்து மணிக்கு மேல முழிச்சிருக்க மாட்டேன்.’’
‘‘அப்படின்னா, நீங்க பார்ட்டிக்கு போற பார்ட்டி இல்லையா?’’
‘‘ம்ஹும்! எனக்கு அந்த கல்ச்சர் பிடிக்காது. ஃபிரண்ட்ஸோட பர்த்டே பார்ட்டின்னா கூட, பத்து மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேன்.’’

‘‘தோழிகளுடனாவது என்ஜாய் பண்ணுவீங்களா?’’

‘‘ம். ஐதராபாத், நாக்பூர் ரெண்டு இடத்துலயும் எனக்கு வீடு இருக்கு. நாக்பூர் போயிட்டா, ஃபிரண்ட்ஸ் என்னைத் தேடி வந்துடுவாங்க. நைட் நேரம்கூட பெண்கள் ரொம்ப பாதுகாப்பா ரோட்ல நடந்து போகலாம். ரொம்ப சேஃப்டியான சிட்டி. ரோட்டு கடையில விக்கிற பானிபூரி வாங்கி சாப்பிடுவேன். நிலா வெளிச்சத்துல ஃபிரண்ட்ஸோட எங்க வீட்டு மொட்டை மாடியில வாட்டர் டேங்க் மேல ஏறி உட்கார்ந்து சாப்பிடுவோம். வாவ்! அந்த டேஸ்ட்டே தனி...’’
‘‘உங்க செட்ல பாய் ஃபிரண்ட்ஸுக்கு

இடமிருக்கா?’’

‘‘இருக்காங்களே. ரொம்ப டீசன்டான பசங்க. அதனாலதான் எங்க ஃபிரண்ட்ஷிப், மூழ்காத ஷிப்பா போய்க்கிட்டிருக்கு. எங்க செட்ல யாருக்காவது பிரச்னைன்னா எங்கிட்டதான் வருவாங்க. பேசிக்காவே எல்லா விஷயத்திலும் நான் பாஸிட்டிவ்வான ஆளு. அதனால எங்கிட்டதான் ஷேர் பண்ணிக்குவாங்க.’’

‘‘பிளட் குருப்பும் பாஸிடிவ்வா?’’
‘‘ஹய்யோ... இந்த இடத்துல நான் ‘வாவ்’ சொல்வேன்னு நினைச்சீங்களா? அதான் இல்ல... என்னோட பிளட் குரூப் ஓ நெகட்டிவ்!’’
‘‘விஷ்ணு உங்களுக்கு நிறைய முத்தம் கொடுத்தாராமே?’’

‘‘ஹலோ, படத்துலன்னு ஒரு வார்த்தை சேர்த்துக்கங்க. ‘மீனுக்கு சிறு மீனுக்கு’ன்னு வைரமுத்து சார் எழுதின பாட்டு சீன்லதான் கிஸ்ஸிங் சீன் வருது. அந்த கான்செப்ட்டுக்கு தேவைங்கறதால ஒப்புக்கிட்டேன். ஆனா, என்னை விட முத்தம் கொடுக்கிற விஷ்ணுதான் ரொம்ப பயந்துட்டார். அவரோட ஒய்ஃப் ரஜினி, அசிஸ்டென்ட் டைரக்டரா வொர்க் பண்ணினாங்க. ஸ்பாட்ல அவங்களும் இருந்ததால பாவம் மனுஷன்... நடுங்கிப் போயிட்டார்.’’

‘‘முத்தக் காட்சியில் நடிச்சிட்டீங்க. கமலோட நடிச்சா கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும்னு நினைக்கிறீங்களா?’’
‘‘சுனைனாவுக்கு மட்டும் ஸ்வீட் கசக்குமா சார்? அவர்கூட நடிக்க சான்ஸ் கிடைச்சா சந்தோஷப் படுவேன்...’’ என்ற சுனைனாவிடம், ‘‘உங்களோட அகராதியில் ஸ்வீட்டுக்கு அர்த்தம் முத்தமா?’’ என்றதும் முடித்துக்கொண்டார் பேட்டியை!
- அமலன்