ராட்டை கிராமம்!





வீட்டுக்கு வீடு இருக்கின்றன குட்டியூண்டு எந்திரங்கள். சாயங்காலமானால் அவை முற்றத்தில், வெளித்திண்ணைகளில் பரபரப்பாக இயங்குகின்றன. கணவன், மனைவி, படிக்கிற மகன், மகள் என எல்லோருக்கும் தெரிகிறது வேலை. நேற்றுவரை பீடி இலைகளுக்குள் மூழ்கிக் கிடந்த மக்களை வேறொரு ஆரோக்கியமான தளத்துக்கு இழுத்து வந்திருக்கும் அந்த எந்திரங்கள், கைத்தறியையும் காந்தியையும் நினைவுபடுத்துவதுதான் ஹைலைட். ஊர் முழுக்க நவீன கைராட்டையால் நூல் நெய்யும் திப்பனம்பட்டியை ‘காந்தி கிராமம்’ என்றே அழைக்கிறார்கள். திருநெல்வேலி - தென்காசி சாலையில் பாவூர் சத்திரத்துக்கு பக்கத்தில் இருக்கிறது திப்பனம்பட்டி.

‘‘ராட்டை பாக்க வந்தீகளா?’’ - வாய் நிறைய வரவேற்ற சரவணச்செல்வியின் முகத்தில் சந்தோஷமும் வெட்கமும் ஒருசேர.
‘‘முதல்ல ‘இதுல என்ன சுத்தி என்ன சம்பாதிக்கறது’ன்னுதான் தோணுச்சு. லாபமோ, நட்டமோ... தெரிஞ்ச பீடித் தொழில்தான் நமக்கு லாயக்குன்னு இருந்தோம். அக்கம்பக்கத்துல கொஞ்சம் பேர் கத்துட்டு வந்து சுத்த ஆரம்பிச்ச பிறகுதான் எங்களுக்கும் ஆசை வந்திச்சு. ராட்டை வாங்கித் தந்து வேலையும் சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப அவுகளும் (கணவர்) சுத்துறாக. விவசாய வேலை போக கிடைக்கிற நேரத்துல சுத்துனாலே மாசத்துக்கு மூவாயிரம் ரூபாய்க்கு மேல கிடைக்குது. குடும்பம் நடத்தறதுக்கும் ஒத்தாசையா இருக்கு’’ என்றபடி வேலையில் வேகமெடுத்தார் சரவணச்செல்வி. ஊரில் அதிகமாக, வேகமாக நெய்வதில் இப்போதைக்கு இவருக்குத்தான் முதலிடம்.

நெய்வது கையால் என்றாலும் காலத்துக்கேற்ப வடிவமைப்பில் மாறியிருக்கும் நவீன ராட்டைகள் இவை. காதி மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையத்தின் மூலம் மத்திய அரசு இதை வழங்குகிறது. காந்தியையும் கைத்தறியையும் நேசிக்கும் மக்களுக்கு இவை வழங்கப்படுகிறது. தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு என ஏற்கனவே காந்தியக் கொள்கைகளுக்கு இப்பகுதியில் பரவலான வரவேற்பு. அதன் தொடர்ச்சியாகவே பீடித் தொழிலிலிருந்து ராட்டைக்கு மாறியிருக்கிறார்கள் திப்பனம்பட்டி மக்கள்.

‘‘பீடிச் சருகோட வாசமே உடம்புக்கு ஆகாது. ஆனா வேற தொழில் தெரியாம அதை வாங்கிச் சுத்திட்டிருந்தோம். படிக்கிற பிள்ளைகளை பக்கத்துலயே விடமாட்டோம். ஆனாலும் வயித்துல நெருப்பைக் கட்டுன பொழப்பு தான். ‘வீட்டுலயே பீடி சுத்தறப்ப, அதைக் கொஞ்சம் இழுத்துதான் பார்த்தா என்ன’ன்னு அதுங்க நினைச்சுட்டா? இன்னொரு பக்கம் ‘கடன் பீடி’, ‘வட்டிபீடி’ன்னு இதுல உள்ள மோசடிகள் போல வேற எங்கயும் நடக்காது’’ என்று முந்தைய தொழிலில் முக்கி முனகியதைச் சொல்கிறார் சீனியம்மாள்.

பியூலா, ராதா, சுகன்யா மூவரும் கல்லூரி மாணவிகள். ‘‘காலையில காலேஜ் கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு மணி நேரமாச்சும் இது முன்னால உட்கார்ந்திட்டுப் போனா அவ்வளவு ஃபிரெஷ்ஷா இருக்கு’’ என்கிறார்கள்.

‘‘இப்ப ஊர் முழுக்க ராட்டைச் சத்தம் கேக்குதுன்னா, இந்த வேலை எல்லா வயசுக்காரங்களுக்கும் பிடிச்சுப் போனதுதான் காரணம்’’ என்கிறார் ‘சுரபி’ தொண்டு நிறுவனத்தின் பால முருகன். திப்பனம்பட்டிக்கு ராட்டையைக் கொண்டு வந்ததில் இவருடைய பங்கு முக்கியமானது.

‘‘இந்தப் பகுதியில இயங்கிட்டிருக்கிற காந்திய அமைப்புகளுக்குத்தான் எல்லாப் பெருமையும். அந்த அமைப்புகளோட ஆரம்பத்துல இருந்தே தொடர்புல இருக்கேன். அந்த அமைப்புகள் மூலமாத்தான் காதி ஆணையம் எங்களை அணுகுச்சு. நினைச்சதும் விட்டு விலக முடியாத சூழல்தான் பீடித்தொழில்ல நிலவுது. தொடரவும் முடியாம, நிறுத்தவும் முடியாம, வாழ்க்கையைத் தொலைச்சிருக்காங்க நிறைய பேர்.



குடும்பத்துக்கு வருமானம், மனசுக்குத் தன்னம்பிக்கைன்னு ராட்டை மூலம் கிடைக்கிற நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லிப் படிப்படியா வழிக்கு கொண்டு வந்தோம். பெண்களை நம்பியே முதல்ல ராட்டைகளைத் தந்தோம். இன்னிக்கு ஆண்களும் ஆர்வமா வேலை பார்க்குறாங்க. இப்ப திப்பனம்பட்டியைப் பார்த்துட்டு பக்கத்துல நாலு கிராமங்கள்லயும் ராட்டை கேட்டிருக்காங்க’’ என்கிறார் பாலமுருகன்.

இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள ராட்டைகளுக்கு பழுது, பராமரிப்புகளை காதி ஆட்களே பார்த்துக் கொள்கிறார்கள். மக்கள் நெய்யும் நூல், ராமநாதபுரம் மத்திய சர்வோதய சங்கத்தின் மூலம் கொள்முதல் செய்யப்பட, ஊதியமானது உடனுக்குடன் மக்களுக்குக் கிடைத்து விடுகிறது. அதிக ஈடுபாடு காட்டுகிறவர்களுக்கு பண்டிகை காலங்களில் கூடுதல் போனஸ், காதிப்பொருட்களில் விலைச்சலுகை போன்றவையும் கிடைக்கிறது.

ஊரின் முகப்பிலிருக்கும் தனது வீட்டின் திண்ணையில் ராட்டை சுற்றிக் கொண்டிருந்த 83 வயது மூதாட்டி கிருஷ்ணம்மாளிடம், ‘‘காந்தியைப் பார்த்திருக்கிறீர்களா?’’ என்றோம். ‘‘மவராசன் இந்தப் பக்கம் வந்தாருல்ல. மறக்குமா? சட்டை போடாமத் திரிஞ்ச அந்த மனுஷனை, தாவணி போட்டுத் திரிஞ்ச காலத்துல பாத்திருக்கேன்யா. இப்பெல்லாம் அப்படிப்பட்ட ஆட்களைப் பார்க்க முடியாது ராசா’’ என்றபடி விடைகொடுத்தார் கிருஷ்ணம்மாள்.

பீடி வாடை வீசும் பகுதிகளில் மகாத்மாவின் அடையாளங்கள் மற்றுமொரு அறப்போராட்டத்தைத் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.
- அய்யனார் ராஜன்
படங்கள்: ஆர்.பரமகுமார்


செங்கோட்டையை அடுத்த ‘கணக்குப்பிள்ளை வலசை’யை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது ‘தென்னிந்திய காந்திய கிராம நிர்மாண சேவாதளம்’. இதன் நிறுவனர் விவேகானந்தனை திப்பனம்பட்டி மக்கள் பெரிதும் மதிக்கிறார்கள். பீடித் தொழிலதிபர்களின் பலவித மிரட்டல்களுக்கு பயந்து கிடந்த மக்களைச் சந்தித்து, அவர்களுக்குத் தைரியமூட்டி ராட்டை சுற்ற வைத்தது இவர்தானாம். ‘‘அரசியல் கலப்பில்லாத அறவழி. அதனால யாருக்கும் பயப்படணும்னு என்ன?’’ என்கிறார் விவேகானந்தன். தினமும் காலையில் ஒரு மணி நேரம் கைராட்டை சுற்றிய பிறகே அன்றைய அலுவலை கவனிக்கக் கிளம்புகிறார்.