தலையெழுத்து என்ன லாங்குவேஜ்?





சாந்தினி என்றால் நிலவொளி என்று அர்த்தமாம். அதற்காக நாம் அவரை கவித்துவமாக வர்ணிக்கப் போவதில்லை. ‘சித்து +2’வுக்குப் பிறகு ‘படித்துறை’, ‘நான் ராஜாவாகப்போகிறேன்’ என இரண்டு படங்களில் பிஸியாக இருக்கும் அவரை கர்ண கொடூரமாக கலாய்க்கவே சந்தித்தோம்.

‘‘நகைக்கடை விளம்பரத்துல நடிச்சிருக்கீங்களே... ஷூட்டிங் முடிஞ்சதும் மறந்தாப்ல நகையோட வீட்டுக்கு வந்திருக்கீங்களா?’’
‘‘ஐயோ! அங்க செக்யூரிட்டி கேமராவும் இருக்கும்; கேமரா கண்ணோட செக்யூரிட்டியும் இருப்பாங்க. நம்மளை விட நகைங்க மேலதான் அவங்க ஃபோகஸ் இருக்கும். விட்ருவாங்களா?’’

‘‘சரி... ஞாபக மறதி யாருக்கு அதிகம்?’’
‘‘பஸ் கண்டக்டருக்கு! நான் காலேஜ் படிச்சப்பல்லாம் மிச்ச சில்லறையை பெரும்பாலும் கொடுக்க மாட்டாங்க!’’

‘‘வீட்டுல பிளக் பாயின்ட் இருக்கும்; உங்ககிட்ட என்ன பிளஸ் பாயின்ட்?’’
‘‘கண்களும் புன்னகையும்!’’

‘‘அப்போ கண்களை இன்ஷ்யூர் பண்ணுவீங்களோ?’’
‘‘அப்படியெல்லாம் ஐடியா இல்ல... ஆனா, கண்தானம் செய்யிற பிளான் இருக்கு!’’

‘‘நீங்க டாக்டராகியிருந்தா...’’
‘‘நல்லா கைண்டா பேசுவேன். ‘உங்களுக்கு ஒண்ணும் இல்ல’னு நம்பிக்கை கொடுப்பேன். பயோமெட்ரிக் அட்டெண்டன்ஸ் வந்தாலும், ஆப்சன்ட் ஆகாம வருவேன். ஆனா, ஆபரேஷனை மட்டும் வேற யாராவதுதான் பண்ணணும். எனக்கு ஆப்பிள் வெட்டவே கை நடுங்கும்!’’

‘‘ஓ... சமூக சேவை? அப்போ நடிக்க வரலைன்னா கட்சிதானே ஆரம்பிச்சிருப்பீங்க?’’
‘‘நோ... நோ... விஸ்காம் படிச்ச எனக்கு விளம்பரக் கம்பெனி ஆரம்பிக்கணும்னுதான் ஆசை. ஆனா, அப்பா, அம்மா என்னை டாக்டராக்கிப் பார்க்க ஆசைப்பட்டாங்க. ரெண்டுமே நடக்காம, நடிகையாகி இங்க உங்க கேள்விக்கு பதில் சொல்லணும்னு என் தலையில எழுதியிருக்கு!’’

‘‘தலையெழுத்து என்ன லாங்குவேஜ்ல இருக்கும்னு தெரியுமா?’’
‘‘அதைப் படிக்க முடியாது. அது கடவுளோட லாங்குவேஜ்!’’

‘‘‘எந்திரன்’ல ஐஸ்வர்யா ராய்க்கு பதில் நீங்க நடிச்சிருந்தா..?’’
‘‘சந்தோஷத்துல உருண்டு பெட்ல இருந்து கீழ விழுந்திருப்பேன்!’’