கள்ளிக்காட்டுக் காதல்கள்





கோயிலு பூசாரியா இருந்தாரு வெள்ளையம்மாளோட அய்யா. தினமும் அவரு சாயங்காலம் கோயில்ல பூஜை வைக்கப் போகும்போதெல்லாம் வெள்ளையம்மாளும் கூடவே போவா. கோயிலோட சுத்துப்புறத்தையேல்லாம் கூட்டி, பெருக்கி குப்பைய ஒதுக்கி சுத்தம் பண்ணுவா. கோயில ஒட்டி இருக்கற நந்தவனத்துல பூப் பறிச்சு சாமிக்காக வைப்பா. மகளோட பக்தியையும் அவ சாமிக்காக வேலை செய்யிற பாங்கையும் பார்த்து அவ அய்யா பூசாரிக்கு உடம்பெல்லாம் புல்லரிச்சிப் போவும்.

கோயில்ல மட்டுமில்ல, வீட்டுலயும் வெள்ளையம்மா இப்படித்தான். ‘இத செய்யி புள்ள’ன்னு யாரும் ஒரு வார்த்தை சொல்லத் தேவையில்ல. ஓய்ஞ்சு ஒரு நேரம் உக்கார மாட்டா. இப்படி மக ரொம்ப சுறுசுறுப்பா எல்லாருக்கும் அனுசரணையா வீட்டுலயும் எல்லா வேலையும் எடுத்துப் போட்டு செய்யிறதப் பார்த்து அவருக்கு சந்தோசம் பொறுக்காது. ‘நம்ம மவ நம்ம கண்ணெதிர்ல வாழணும். அவள வெளியூர் மாப்பிள்ளைக்கெல்லாம் கொடுக்கக் கூடாது. அப்படியே கொடுத்தாலும் நம்ம வீட்டோடு இருக்க மாப்பிள்ளயாப் பார்த்துதான் கொடுக்கணும். அதுவும் நம்மளவிட கொஞ்சமாவது வசதியா, மேல்தரமா இருக்கவனா பாத்துதான் கொடுக்கணும் அப்பத்தான் மாமியாரு, மாமன் சண்டையெல்லாம் வராதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தாரு. அந்த நெனப்பு அவருக்குள்ள ஆழமா வேர்விட்டு வளர ஆரம்பிச்சிடுச்சி.

அதே ஊர்ல கண்ணன்னு பெரிய பணக்காரன் இருந்தான். தினமும் கோயிலுக்கு சாமி கும்புட வருவான். பூசாரி கூட ஓடியாடி வேல செஞ்சுக்கிட்டு இருக்கிற இந்த வெள்ளையம்மாளப் பாத்த உடனே அவனுக்கு அவ மேல காதல் விழுந்திருச்சி. அவளும் கண்ணனப் பாத்த உடனே, ‘இம்புட்டு அழகானவன் இந்த ஊர்ல இருக்கும்போது, இவன தவுத்து வேற யாருக்கும் வாக்கப் படமாட்டேன்’னு மனசுக்குள்ளயே சபதம் எடுத்துக்கிட்டா.

பொழுதார நடக்கும் பூசைக்கு, வெள்ளையம்மாவைப் பாக்குறதுக்காகவே சொல்லி வச்ச மாதிரி வந்துருவான் கண்ணன். பூசாரி அவனோட பக்தியப் பார்த்து அப்படியே அசந்து போயிருவாரு. ‘எம்புட்டு பெரிய பணக்காரன்... இப்படி சாமிமேல பக்தியா விழுந்து விழுந்து கும்புடுதானே... இந்த ஊர்ல எந்த இளவட்டப்பய இப்படி சாமி கும்புட வருவான்? என்ன இருந்தாலும் பெரிய எடத்து வளர்ப்பு தனி விதம்தான்’னு நெனச்சி அம்புட்டு சந்தோசப்படுவாரு. அவன்மேல அவருக்கு தனி மரியாதையே வந்துடுச்சி.

அதனால அவன் வந்ததுமே முதல் தீபாராதனை தட்டே அவனுக்குத்தான். அவனும் அங்கன நிக்கிற வெள்ளையம்மாள ஓரக்கண்ணால பார்த்துக்கிட்டே, சட்டப்பையில கையைவிட்டு ஒத்த ரூவா, இரண்டு ரூவான்னு எடுத்து தட்டுல போடுவான். அந்தக் காலத்துல அதெல்லாம் பெரிய காசாச்சே. அதைப் பாத்துட்டு பூசாரிக்கு இன்னும் ஆச்சரியம். இப்படியே இவன் வந்து தட்டுல தினமும் ரூபா போட்டாலே போதும் போலிருக்கே... அத சேத்து வச்சே நாம மக கல்யாணத்த முடிச்சிரலாமே’ன்னு நெனப்பாரு. அந்த நெனப்போட, அவனுக்காக ஒரு கட்டி சூடத்த கூடவே எரிப்பாரு.
இவன் மெல்ல ஒரு நாளு பூசாரிகிட்ட நெருங்கிவந்து பேசினான். ‘‘அய்யா... எங்க குடும்பப் பிரச்னை தீர்றதுக்காக ஒரு வேண்டுதல் வச்சிருக்கேன். தினம் ஒரு மணி நேரம் கண்ண மூடி சாமி முன்னால உக்காந்திருக்கிறதா வேண்டிருக்கேன். நீங்க கோயில பூட்டறதா இருந்தா பூட்டிட்டுப் போங்க... உங்க அம்மன் கோயிலுக்குள்ள மட்டுமில்ல, என் நெஞ்சுலயுந்தான் இருக்கா. நான் அப்படியே வெளிய உக்கார்ந்து வேண்டுதல முடிச்சுக்கிட்டுப் போறேன்’’னு சொன்னான்.



உடனே பூசாரிக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப் போச்சு. ‘‘தம்பி, அப்படியெல்லாம் பேசாதீக. இம்புட்டு பக்தியா நீங்க சாமி கும்புடும்போது நானு சன்னதியப் பூட்டுவனா? நீங்க எம்புட்டு நேரம் கும்பிடணுமோ, அம்புட்டு நேரம் கும்புட்டுப் போங்க. எனக்கு சோலி இருந்தாலும் எம்மவ இருப்பா’’ன்னு சொன்னாரு.

கையோட மகளயும் கூப்பிட்டு, ‘‘தாயி! இவுரு சாமி கும்புட்டு போனப் பெறவு நீ சன்னதியப் பூட்டிட்டு வா... ஒண்ணும் அவசரமில்ல’’ன்னாரு.
அப்ப புடிச்சி தெனமும் பூசாரி கோயிலை சாத்தாம புறப்பட்டுருவார். அவர் அந்தப் பக்கம் போனதுதான் தாமதம்... வெள்ளையம்மாளும் கண்ணனும் கோயிலுக்கு கொஞ்சம் தள்ளி இருக்கிற நந்தவனத்துக்குள்ள போயி ‘ஒண்ணுமண்ணா’ இருப்பாக. அப்போ நந்தவனத்து பூவுல எல்லாம் இவுக வாசம்தான் வீசும். கருத்த வானத்தையும் பூமியையும் சாட்சியா வச்சி இவுக ஒருத்தருக்கொருத்தர் பிரியமா பேசிப் பழகும்போது நேரம் போறதே தெரியாது.

இப்படியே தான் போய்க்கிட்டு இருக்கு... வெள்ளையம்மாளுக்கு இப்போ வயித்தில மூணு மாசம். மகளோட விஷயம் தெரிஞ்சதும் பூசாரி இடிஞ்சு போனார். இம்புட்டு நாளும் பொன்னும் கண்ணுமா வச்சிருந்த மகளை இழுத்துப்போட்டு அடியான அடி அடிச்சி நொறுக்கினார். பெறவு வீட்டில இருந்து அவள தரதரன்னு வாசலுக்கு இழுத்துக் கொண்டு வந்தவரு, ‘‘போ! போயி நீ காதலிச்சி கொஞ்சிக்கிட்டு இருந்தயே... அவன் கையால உன் கழுத்துல ஒரு தாலி வாங்கிக்கிட்டு வந்தா வீட்டுக்குள்ள வா. இல்லாட்டி வராதே’’ன்னு சொல்லி விரட்டி விட்டார்.

வெள்ளையம்மா வாரதுக்கு முன்னமே அவ கர்ப்பமான விஷயம் கண்ணன் வீட்டுக்குத் தெரிஞ்சு போச்சு. ‘‘ஏண்டா, நம்ம தகுதி என்ன? அவ இருக்கற இடம் என்ன? பெரிய முதலாளி. இந்த ஊருக்கே பணக்காரக. போயும் போயும் இல்லாத வீட்டுப் புள்ளயவா காதலிச்சிக்கிட்டு அலையிறே? உனக்கு பெரிய இடத்தில பொண்ணு பார்த்திருக்கு... அடுத்த மாசம் கல்யாணம்’’னு சொல்லிட்டார் அவன் அப்பா.

பெத்த தகப்பனை மீறி கண்ணன் எதுவும் பேசல. வெள்ளையம்மாளுக்கு எங்கேயும் ஆதரவு இல்ல. வயித்துப் பிள்ளையோட கண்ணீரும் கம்பலையுமா அழுதுக் கிட்டு, கண்ணனைப் பார்க்க எவ்வளவோ முயற்சி செஞ்சும் முடியல. கடைசியில கண்ணன் குடும்பத்துக்கு சொந்தமான ஒரு கிணத்துல விழுந்து தற்கொலை செஞ்சுக்கிட்டா. மக செத்த சேதி கேட்டு துடிச்சுப் போனாங்க அவளப் பெத்தவங்க. நடுசாமத்துல வந்து, கண்ணன் வீட்டு முன்னால நின்னு, ‘‘என் மகளைக் கொன்ன துரோகி குடும்பத்துக்கு பரம்பரை பேர் சொல்ல ஒரு வாரிசு இல்லாம போவட்டும்’’னு உப்புப் பானைய உடைச்சு, குலை தள்ளின வாழை மரத்தையும் வெட்டிப் போட்டுட்டு வந்துட்டாக.

அதுல இருந்து அவுக வீட்டுல குழந்தை பிறக்கும்... ஆனால் மூணு நாளு தான் உசுரோட இருக்கும். பிறகு செத்துப் போகும். ஒரு வாரிசு கூட உயிரோட இல்ல. கடைசியில கண்ணன் வீட்டு ஆளுக, வெள்ளையம்மாளை நினைச்சு அழுது அழுது கண்ணீர் விட்டாக. அவுக மேல இரக்கப்பட்டு, வெள்ளையம்மா கனவுல வந்தா. தான் விழுந்த கிணத்தடியில மேடை கட்டி கிடாவெட்டி பொங்கல் வச்சு, தன்னை கும்பிட்டுக்கிட்டு வரணும். அதோட, அவுகளுக்கு பிறக்கிற பிள்ளைக்கும் தன் பேரை வைக்கணும்னு சொன்னா. அந்தக் குடும்பத்து ஆளுக அப்படியே செஞ்சாங்க; வாரிசும் வளருது.
திண்டுக்கல்ல இருந்து பழனி போற வழியில இருக்கு வெள்ளையம்மாளை வழிபடற இந்த மேடை.