யார் இந்த கேஜ்ரிவால்?





யானையின் காதில் புகுந்த எறும்பாக இந்திய அரசியல் களத்தில் காட்சி தருகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். அன்னா ஹசாரேவின் அரைமனதான ஆசியோடு கட்சி ஆரம்பித்தவர், இன்று அன்னாவை மறக்கடிக்கும் அளவுக்கு பரபரப்பு புள்ளியாகி விட்டார். சோனியாவின் மருமகன் ராபர்ட் வடேரா, மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் என பலரும் அமளிதுமளியாகி நிற்க, அடுத்தது யார் என்ற கிலியில் தூக்கமிழந்து தவிக்கிறார்கள் தலைவர்கள். இந்த 44 வயது எறும்பு எங்கிருந்து வந்தது?

ஹரியானா மாநிலம் ஹிஸார் நகரில் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர் அரவிந்த். அப்பா எஞ்சினியர். அதனால் இவரும் படித்தது அதைத்தான்! காரக்பூர் ஐ.ஐ.டியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் பி.டெக் முடித்த ஜீனியஸ். அந்தப் பருவத்தில் அவருக்கு அரசியல் வேப்பங்காய். படிப்பு தவிர எதுவும் தெரியாது. முடித்ததும் டாடா நிறுவனத்தில் வேலை பார்த்தபடி சிவில் சர்வீஸ் எழுதினார். ஐ.ஆர்.எஸ். பணிக்கு தேர்வாகிறவரை அவருக்குள் சமூக அக்கறை பல்பு எரியவில்லை.

பயிற்சி முடித்து வேலைக்குப் போகக் காத்திருந்த ஆறு மாதம்தான் அவரை மாற்றியது. நாடோடி போல ஊர் ஊராக சுற்றியவர், ராமகிருஷ்ணா மிஷன் மடங்களுக்குச் சென்றார். கொல்கத்தா சென்று அன்னை தெரசாவை சந்தித்தார். ‘‘காலிகட் பகுதியில் இருக்கும் தெருவோர மக்களிடம் சென்று பணி செய்’’ என அவருக்கு அன்னை அன்புக்கட்டளை பிறப்பித்தார். இரண்டு மாதங்கள் அப்படிச் செய்த பணிதான் அவரது பார்வையை மாற்றியது.

வருமான வரித்துறையில் நேர்மையான அதிகாரியாக அவரால் பணிபுரிய முடிந்தாலும், எங்கும் நிறைந்திருக்கும் ஊழலைக் கண்டு கொதித்தார். நண்பர்களோடு இணைந்து ஆரம்பித்த ‘பரிவர்தன் டிரஸ்ட்’தான் அவர் கொண்டுவர நினைத்த மாற்றங்களின் விதையாக இருந்தது. ‘ரேஷன் கார்டு வேண்டும்’ என ஒரு ஏழை கொடுக்கும் மனு மாதக்கணக்கில் தாலுக்கா அலுவலகங்களில் தூசு படிந்து கிடக்கிறது. லஞ்சம் கொடுத்தால்தான் வேலை ஆகிறது. குடிசை வீட்டுக்கு மின்சார இணைப்பு வேண்டும் என்றாலும், ஆயிரக்கணக்கில் கையூட்டு தர வேண்டிய கட்டாயம். ‘இந்த மனு இவரிடம் தேங்கியிருக்கிறது. இதை இவர் இத்தனை நாட்களில் முடிக்க வேண்டும்’ என்பது போன்ற தகவல்கள் வெளிப்படையானால்தான் ஊழல் ஒழியும் என்பது அவருக்குப் புரிந்தது.

டெல்லியில் ஏழைகளின் இதுபோன்ற மனுக்களைப் பெற்று, அவர்களுக்கு தீர்வு தேடித் தருவதில் ‘பரிவர்தன் டிரஸ்ட்’ தொண்டர்கள் ஈடுபட்டார்கள். சமூக சேவகர் அருணா ராயுடன் இணைந்து அரவிந்த் கேஜ்ரிவால் செய்த முயற்சிகள்தான் இந்தியாவில் ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற ஏழைகளின் உரிமை ஆயுதம் வருவதை சாத்தியமாக்கியது. இதற்காக வருமான வரித்துறை இணை ஆணையர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வீதிக்கு வந்தார் அரவிந்த். ஆசியாவின் நோபல் எனப்படும் ராமன் மகசேசே விருது அவருக்கு இதற்காகத்தான் கிடைத்தது.



‘‘இந்தியாவில் நிர்வாக அமைப்பு ஊழல் என்னும் கறையானால் மோசமாக அரிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கப் பணிகளில் நேர்மையாக இருக்கும் அதிகாரிகள்தான் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களை எப்படியாவது ஊழல் செய்ய வைக்க ஒரு பெரிய அமைப்பே தொடர்ந்து முயற்சி செய்கிறது. நேர்மையானவர்கள் பணி செய்யும் சூழல் இங்கு இல்லை. நிர்வாக அமைப்பை சுத்தம் செய்தால்தான் இந்தியா சரியாகும். அதுதான் என் முதல் வேலை’’ என ஊழலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருக்கும் கேஜ்ரிவாலுக்கு ரகசியமாகத் துணை நிற்பவர்கள், இதுபோன்ற நேர்மையான அதிகாரிகள்தான்!

டெல்லியின் காஜியாபாத் பகுதியில் வசிக்கும் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதாவும் ஐ.ஆர்.எஸ். அதிகாரிதான். சிவில் சர்வீஸ் பயிற்சியின்போது காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள். கம்பெனி நிர்வாக அமைச்சகத்தில், மோசடிகளை புலனாய்வு செய்யும் பிரிவின் கூடுதல் இயக்குனராக இருக்கிறார் சுனிதா. ஆக, இருவருமே மோசடிகளை வெவ்வேறு தளங்களில் அம்பலப்படுத்துகிறார்கள்.
- அகஸ்டஸ்