ஆல்தோட்ட பூபதி



குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஒரே ஒரு ஓட்டு மூலம் ஒரு மக்களாட்சி வீழ்கிறது; முப்பது, நாற்பதாண்டு சர்வாதிகாரம் வீழ்கிறது; பல பிறந்தநாள் கண்ட ஒரு பனிமலை உருகி வீழ்கிறது; 125 கோடி மக்களின் தலையெழுத்தான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்கிறது; நூறாண்டு கண்ட மரம் ஒன்று நேற்று அடித்த புயலில் வீழ்கிறது; பூகம்பத்தில் பக்கத்து நாட்டுக் கட்டிடங்கள் வீழ்கின்றன; தொட்டு விடும் தூரத்தில் இருக்கும் சிறு தீவில் மொத்த தமிழினமே வீழ்ந்தது. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் வீழ்ந்தால் மட்டும், இந்தப் பாழாய் போன மனம் என்னமாய் பதறுகிறது!

பதுக்குதல் தவறு. சட்டம் கூட பதுக்கலை ‘கடும் குற்றம்’ என்கிறது. தாராளமாய் கிடைக்கும் ஒன்றை வலுக்கட்டாயமாக பதுக்கி வைப்பது மனிதநேயமற்ற செயல்தான். அப்பளம் முதல் அரிசி வரை, போதை மருந்து முதல் காய மருந்து வரை, செங்கல் முதல் தங்கம் வரை எதையும் பதுக்கக்கூடாது. மற்ற உயிர்களின் மேல் அன்பும் பாசமும் உள்ளவர்கள் பதுக்கல் செயலில் இறங்குவார்களா என்ன? ஆதலால்தான் சொல்கிறேன் இளைஞிகளே... தயவுசெய்து சுடிதார் அணிந்து அழகினைப் பதுக்காதீர்கள். பாவம் இளைஞர்கள்!

‘ஜாதிக்கட்சிகளுடன் மட்டும்தான் இனி கூட்டணி’ என திருவாய் மலர்ந்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஆக, தமிழ்நாட்டில் இருக்கும் பாதிக் கட்சிகளுடன் அவர் கூட்டணி போடலாம். இதில் சுவாரஸ்யமான உண்மை... இந்த ஜாதிக்கட்சிகள் போக, மீதிக் கட்சிகளுடன் எல்லாம் அவர் ஏற்கனவே (பலமுறை) கூட்டணி போட்டிருக்கிறார் என்பதுதான். ஆக, கூடிய விரைவில் அவர் செய்யப்போகும் சாதனைகளில் ஒன்று, தமிழ்நாட்டின் எல்லா கட்சிகளுடனும் கூட்டணி போட்டவர் என்ற பெருமையான பட்டம். தமிழக மக்கள் மாற்று அரசியலை எதிர்பார்க்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனா நிச்சயம் இந்த வகையான ‘மாற்று’ அரசியல் அல்ல!

பதுக்குதல் தவறு. சட்டம் கூட பதுக்கலை ‘கடும் குற்றம்’ என்கிறது. தாராளமாய் கிடைக்கும் ஒன்றை வலுக்கட்டாயமாக பதுக்கி வைப்பது மனிதநேயமற்ற செயல்தான். அப்பளம் முதல் அரிசி வரை, போதை மருந்து முதல் காய மருந்து வரை, செங்கல் முதல் தங்கம் வரை எதையும் பதுக்கக்கூடாது. மற்ற உயிர்களின் மேல் அன்பும் பாசமும் உள்ளவர்கள் பதுக்கல் செயலில் இறங்குவார்களா என்ன? ஆதலால்தான் சொல்கிறேன் இளைஞிகளே... தயவுசெய்து சுடிதார் அணிந்து அழகினைப் பதுக்காதீர்கள். பாவம் இளைஞர்கள்!

முன்பொரு முறை, ஒலக படம் எடுக்க புது இயக்குனர்கள் வந்தார்கள். ஒலக படங்களைப் பார்த்து அப்படியே எடுத்தார்கள்.
பின்பொரு முறை, ஒலக படம் எடுக்க புது இயக்குனர்கள் வந்தார்கள். ஊர், ஒலகமெல்லாம் சுற்றி படமெடுத்து ஒலகத்தை படத்தில் காட்டினார்கள்.
மீண்டும் புது இயக்குனர்கள் வருவார்கள், ஒலக படம் என்பது அவரவர் நாட்டின் உள்ளூர் உண்மைகளைச் சொல்லும் படம் என்பதை புரிந்துகொண்டு படமெடுப்பார்கள்.

நடிகர் சயிப் அலி கானுக்கு சென்ற வாரம் திருமணம் நடந்தது, அவரது ரசிகர்களுக்கு இனிமையான செய்தி. நம் கனவு தேவதை கரீனா கபூரை அவர் திருமணம் செய்தது, நம்மைப் போன்ற இள வயது வாலிபர்களுக்கு துக்கமான செய்தி. ஆனால், கல்யாணத்தில் அவரது குழந்தைகள் சாராவும் இப்ராஹிமும் கலந்துகொண்டது விசேஷமான செய்தி.

இந்த மூன்று செய்திகளும் நமக்கு சொல்லும் ஒரு முக்கிய செய்தி உண்டு. பொல்லாத நம் இந்திய குழந்தைகள் பேச ஆரம்பித்தவுடன் கேட்கும் முதல் கேள்வியே, ‘‘உங்க கல்யாண ஆல்பத்துல நான் ஏன் இல்ல?’’ என்பதுதான். நம் முகத்தை மனைவியும், மனைவி முகத்தை நாமும் பார்த்துக்கொள்ள வைக்கும் தர்மசங்கடமான கேள்வி இது. அதனால் கல்யாணம் பண்ணி, குழந்தை குட்டியான பிறகு, மீண்டும் ஒரு கல்யாணம் செய்து, அதற்கு நம் குழந்தைகளை பத்திரிகை வைத்து கூப்பிட்டால், இந்த தர்மசங்கட கேள்வியிலிருந்து தப்பிக்கலாம். கல்யாணம் செய்ய புதுப் பொண்ணுதான் வேண்டும் என்பதில்லை. பல பேருக்கு அந்த கொடுப்பினை இருக்காது. அதனால், முதல்முறை கல்யாணம் செய்த பெண்ணையே மீண்டும் திருமணம் செய்யலாம். குழந்தைங்க சந்தோஷமா இருக்கணும்னா எதுவுமே தப்பில்ல!


மேனேஜரிடம் பொய் சொல்லாதீர்கள். மேனேஜர் எது சொன்னாலும் கவனமாய் கேட்டுக்கொள்ளுங்கள். கேட்க முடியாவிட்டாலும் கேட்பதாய் நடியுங்கள். மேனேஜர் தவறாய் சொன்னாலும் எதிர்த்துப் பேசாதீர்கள். மேனேஜர் எதிர்ப்படும்போது பரபரப்பாக இருப்பது போல பாவியுங்கள். வேலை சொல்லும்போது ‘ஏன்?’ என்ற கேள்வி அவர்களுக்குப் பிடிக்காது, ‘எப்போ’ என்ற கேள்விகளே பிடிக்கும். மேனேஜர்கள் ஒரு விஷயம் சொல்லும்போது, தலையை வலம் இடமாக அசைக்கக்கூடாது, வேண்டுமானால் மேலும் கீழும் அசைக்கலாம்.

பின்குறிப்பு: இது மேனேஜர்களுக்கு மட்டுமல்ல... மனைவிக்கும் பொருந்தும். ஏனெனில், வேலை விதியும் இதுதான்; சேலை விதியும் இதுதான்!

படுத்தே இருக்கிற சோம்பேறிக்கு பாயில கண்டம், தெருவுல தள்ளாடி நடக்கிறவனுக்கு நாயில கண்டம், நம்ம காங்கிரஸ் அமைச்சர்களுக்கு வாயில கண்டம்.
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மீதான ஊழல் புகார் பற்றி இன்னொரு மத்திய அமைச்சர் பேனி பிரசாத் வர்மா சொன்னதுதான் இப்ப டாபிக்கல்! ‘‘ஒரு மத்திய அமைச்சர் ரூ.71 லட்சம் மோசடி செய்தார் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை. ஒரு மத்திய அமைச்சருக்கு ரூ.71 லட்சம் ரூபாய் என்பது மிகக் குறைந்த தொகை. இதுவே ரூ.71 கோடியாக இருந்தால் சீரியசான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம்’’ என்றார் அவர்.

ஒரு நல்ல உள் பனியன் 70 ரூபா... அதை வாங்க முடியாம, மாவு சலிக்கிற சல்லடையாட்டம் மாட்டிக்கிட்டு இருக்காங்க. ஒரு குவாட்டர் 75 ரூபா... அதை முழுசா அடிக்க முடியாம கட்டிங் போட்டுக்கிட்டு இருக்காங்க. அட, ஒரு லிட்டர் பெட்ரோல் போட முடியாம வண்டிய உருட்டிக்கிட்டு கிடக்குறாங்க. ஆனா, இவங்களுக்கு ரூ.71 லட்சம் சாதாரண விஷயமாம். எப்படி இவருக்கு மட்டும் இப்படி கவட்டை கவட்டையான சிந்தனைகள் வருதுன்னு கூகுள்ல அவர் போட்டோவைத் தேடிப் பார்த்தேன். அட, ஆமாய்யா... மூக்கு ரொம்பவே பொடப்பாத்தான் இருக்குது.

மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் பேசச் சொல்லுமாம்!