கிசுகிசுக்கள் பல பெற்று...





இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கும் மின்தடை பற்றிய மக்களின் மனக் குமுறல்கள் இருட்டில் வரைந்த ஓவியம்தான். அது, 2017 வரை தீராது என்பது தமிழக மக்களுக்கு ஹை வோல்டேஜ் ஷாக்!
- கவியகம் காஜூஸ், கோவை-24.

டெல்டா விவசாயிகளின் சோகம் நெஞ்சை வதைத்தது. விவசாயம் பொய்த்துப் போனால், நாடு சுடுகாடாகிவிடும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இது அரசாங்கத்துக்கு தெரியாமலா இருக்கும்!
- டி.டி.சாமி, உச்சனவலசு.

‘ஒவ்வொருவரும் உயில் எழுதுகிறோமோ இல்லையோ... இனி நமது மரணம் தெரிவிக்கப்பட வேண்டியவர்களின் பட்டியல் ஒன்றை எழுதி வைக்க வேண்டும்’ என்று மனுஷ்ய புத்திரன் கூறியிருப்பது அனைவரையும் சிந்திக்க வைத்திருக்கும்!
- வி.சி.கீதா ராமு, பெங்களூரு.

கல்லீரலின் மகத்தான பணிகளை உணர்த்திய ‘உங்களுக்கு நீங்களே டாக்டர்’ பகுதி, மிக மிகப் பயன்மிக்கதாய் அமைந்திருந்தது. நன்றியும் மனமுவந்த பாராட்டுகளும்!
- எஸ்.எம்.பாலசுப்ரமணியன், போடிநாயக்கனூர்.

‘ஃப்ரெஞ்ச் கிஸ்’ - சும்மா சொல்லக் கூடாது... முத்தத்தைப் பற்றி மொத்தத் தகவல்களையும் திரட்டி அடிச்சு ஜூஸ் போட்டு ஆளுக்கொரு டம்ளர் கொடுத்துட்டீங்க.
- ஆர்.வி.சந்திரன், விழுப்புரம்.

விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தைப் பற்றி எந்தத் தகவலையும் பாக்கி வைக்காமல் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சரவெடியாக வெடித்து விட்டார். அந்த ‘மிலிட்டரி மீல்ஸ்’ஸுக்காக இப்பவே பசியெடுத்துடுச்சு போங்க!
- கே.எம்.சார்லஸ், நாகர்கோவில்.

‘கிசுகிசுவால திருஷ்டி போச்சு’ என்கிற டாப்ஸி, மென்மேலும் பல கிசுகிசுக்கள் கண்டு, ஏகப்பட்ட தகராறுகளில் சிக்கி, கண் திருஷ்டிகளைப் பூண்டோடு அழித்து பீடு நடை போடவேண்டும் என, வாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்!
- சிவா, அரக்கோணம்.

ஆளை அசத்தும் மதுரை மல்லி, இனி ‘புவிசார் காப்புரிமைக் குறியீடு’ பெற்று உலகம் முழுதும் உலா வரப் போவதை நினைத்தாலே பரவசம்தான். இனி நமது ‘மல்லிப்பூ, அல்வா டெக்னிக்’கும் உலகமெல்லாம் பரவி இல்லறத்தை இனிதாக்கும் என எதிர்பார்க்கலாம்!
- வி.நிம்மி, சென்னை-109.

தோனிக்கு பிராவோ எழுதிய கடிதத்தில், ‘கங்னம் டான்ஸ் கத்துக்கிட்டா கப்பு ஜெயிக்கலாம் என்றது செம கலகல! கிரிக்கெட், அரசியல் என்று எல்லா ஏரியாவிலும் பின்னி எடுப்பதால்தான் அவர் ‘ஆல்’தோட்ட பூபதியோ!
- டி.பால்பாண்டி, மதுரை.