கல்யாணம்ங்கறது ஓல்டு ஃபேஷன்!





வெற்றி தேவதை விலகி விலகிப் போனாலும், அதிர்ஷ்ட தேவதை அடுத்த வீட்டிலேயே குடி யிருந்து கொட்டிக் கொடுக்கிறாள் மல்லிகா ஷெராவத்துக்கு. அடுத்தடுத்து ஃபிளாப் கொடுத்தாலும், பாலிவுட், ஹாலிவுட் படங்கள், விளம்பர வாய்ப்புகள் என எப்போதும் மல்லிகா பிஸி. ‘கிஸ்மத் லவ் பைசா டில்லி’ படத்தில் கிளாமர் இல்லாத ரொமான்டிக் காமெடி ஹீரோயினாக வருகிறார் அவர். அடுத்த வீட்டுப் பெண் போல பாந்தமாக வரும் மல்லிகா, இந்தியாவுக்கே புதுசு!

எப்படி இப்படி நடிக்கத் துணிஞ்சீங்க?

நிஜமான மல்லிகாவோட கேரக்டர் இதுதான்! படம் முழுக்க சல்வார் கமீஸ்ல வர்றேன். என் அம்மா என்னை இப்படிப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படுவாங்க. என் டிரஸ்ஸிங் ஸ்டைல் பார்த்து இங்க நிறைய பேர் கிண்டல் பண்றாங்க. ஆனா வெளிநாடுகள்ல, ‘மிகச் சிறப்பா டிரஸ் பண்ற பிரபலங்கள்’ல நானும் ஒருத்தின்னு சொல்றாங்க.

என்ன இருந்தாலும் கிளாமர் படங்கள்தானே உங்களுக்கு வருது?

நான் ஒண்ணும் அவ்வளவு மோசமான நடிகை இல்லை.
‘இவ கிளாமருக்குத்தான் லாயக்கு’ன்னு முத்திரை குத்தும்போது மனசுடைஞ்சு போறேன். ஆனா இப்ப வர்ற டைரக்டர்கள் வித்தியாசமா சிந்திக்கறாங்க. வித்யா பாலனை ‘டர்ட்டி பிக்சர்’ல கிளாமர் பண்ண வச்சாங்க. நான் இப்ப போர்த்திக்கிட்டு நடிக்கறேன்.

வருஷத்துக்கு ஒரு படம்தானே நடிக்கறீங்க?
சும்மா பணத்துக்காக நிறைய படங்கள் நடிக்கறதுல எனக்கு விருப்பம் இல்ல. நல்ல ஸ்கிரிப்ட்னு தெரிஞ்சா மட்டும்தான் நடிக்கறேன். என் ரசிகர்களை நான் பட்டினி போடறேன்னு புரியுது. ‘உங்களை அடிக்கடி பார்க்கணும். நிறைய படங்கள்ல நடிங்க’ன்னு ட்விட்டர்ல நிறைய பேர் கேக்கறாங்க. ஒரு சின்ன நகரத்துல இருந்து, எந்தப் பின்னணியும் இல்லாம சினிமாவுக்கு வந்தவ நான். இப்ப கேன்ஸ் போயிட்டேன்; ஹாலிவுட்ல நடிச்சிட்டேன். ஏன், அமெரிக்க அதிபர் ஒபாமாவையே மீட் பண்ணிட்டேன். எத்தனை பேரு இப்படி பெருமையடிச்சிக்க முடியும்னு சொல்லுங்க?



கல்யாணம் எப்போ?

என்னைக்கும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும்னு தோணலை. இப்போ நடிக்கறதுலயும், ஊர் சுத்தறதுலயும் நான் லைஃபை எஞ்ஜாய் பண்றேன். கல்யாணம்ங்கறது காலாவதியான ஓல்டு ஃபேஷன்னு நினைக்கறேன். எப்பவும் இந்த மல்லிகா தனி ஆளாதான் இருப்பா! எத்தனை ரசிகர்கள் என்னை லவ் பண்றாங்க தெரியுமா? ஒருத்தனுக்காக அவங்க அத்தனை பேர் அன்பையும் இழக்க விரும்பலை...
- ரெமோ