மனதை வருடும் தொடர்





மலாலா: விடுதலையின் இலக்கணம் மலாலா யூசுப் என்ற 14 வயது பாகிஸ்தான் சிறுமியின் பெயர் அக்டோபர் 9ம் தேதிக்குப் பிறகு உலகெங்கும் நீதிக்காகப் போராடுபவர்களின் அடையாளமாகிவிட்டது. அன்றுதான் தலிபான் பயங்கரவாதிகள் அவளது ஸ்கூல் வேனை மறித்து, தலையிலும் கழுத்திலும் இரண்டு முறை சுட்டார்கள். ரத்த வெள்ளத்தில் மிதந்த மலாலா, இந்தக் கட்டுரையை எழுதும் நேரம் நினைவின்றி சிகிச்சைக்காக இங்கிலாந்திற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள். அந்தச் சிறுமி செய்த ஒரே குற்றம், ''எனக்குக் கல்வி கற்பதற்கு உரிமை இருக்கிறது’’ என்று சொன்னதுதான்.

பாகிஸ்தான் முழுக்க மலாலாவின் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர், ‘‘பயங்கரவாதத்திற்கு எதிராக தேசத்திற்கு விடப்பட்டிருக்கும் அறைகூவலே இந்தச் சம்பவம்’’ என்று உணர்ச்சி பொங்க வர்ணிக்கிறார். உலகெங்கும் உள்ள மக்கள் மலாலாவுக்காகப் பிரார்த்திக்கின்றனர். மலாலா பற்றிய செய்திகளை வெளியிடும் பாகிஸ்தான் தொலைக்காட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு தலிபான்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். ‘‘நான்தான் மலாலா’’ என்ற வாசகம் எங்கெங்கும் பரவிக்கொண்டிருக்கிறது.

யார் இந்த மலாலா?
இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் முஸ்லிம் பெண்களுக்கு எதிராகப் பெரும் கலாச்சார யுத்தமொன்றை நடத்திவருகிறார்கள். இந்த யுத்தத்தின் வழியே நாகரிக சமூகம் பெண்களுக்கு அளித்த அத்தனை உரிமைகளையும் அழித்து, அவர்களைப் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி, வரலாற்றின் இருண்ட குகைகளுக்குள் இழுத்துச் செல்ல விரும்புகிறார்கள்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்கள் பள்ளிக்குச் செல்வதை தலிபான் தீவிரவாதிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். கலாச்சார கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அவர்கள் மீது கடும் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். நான்கு தலிபான்கள் ஒரு இஸ்லாமியப் பெண்ணைத் தரையில் படுக்க வைத்து, கையையும் காலையும் இறுகப் பிடித்துக்கொள்ள, ஒரு தலிபான் அவளைப் பிரம்பால் கதறக் கதற அடிக்கும் காட்சியை வீடியோவில் கண்டு உறைந்துபோனேன். ஒவ்வொரு நாளும் இதுபோன்ற ஏராளமான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மரண தண்டனைகள் சர்வசாதாரணமாக நிறைவேற்றப்படுகின்றன.

இன்று உலகெங்கும் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள், கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல், சமூக உரிமைகளுக்காகப் போராடி வருகிறார்கள். ஆணாதிக்க வெறிபிடித்த பழமைவாதிகளின் பிடியிலிருந்து தங்கள் வாழ்வை மீட்டெடுக்க துணிச்சலுடன் முன்நிற்கிறார்கள். இந்தப் புதிய எழுச்சியின் வடிவம்தான் மலாலா.

பாகிஸ்தானில் தலிபான்களின் செல்வாக்கு மிக்க ஸ்வாட் வேலி பகுதியைச் சேர்ந்த ஜியாவுதீன், பல பள்ளிகளை நடத்தி வருகிறார். தலிபான்களின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகளுடன் சேர்ந்து குரல் கொடுத்துவந்த ஜியாவுதீன், தனது மகள் மலாலாவுக்கும் அரசியல் சிந்தனைகளை ஊட்டினார். பெண்களின் உரிமைக்கான இயக்கத்தில் மலாலா மிக இளம் வயதிலேயே பங்கெடுத்துக்கொள்ளத் துவங்கினாள். தான் ஒரு டாக்டர் அல்லது பைலட்டாக வேண்டும் என்று கனவுகண்ட மலாலா பின்னர் ஒரு பேட்டியில் கூறினாள்: ‘‘எனக்கு ஒரு புதிய கனவு இருக்கிறது. எனது தேசத்தைக் காப்பாற்ற நான் ஒரு அரசியல்வாதியாக விரும்புகிறேன். எங்கள் தேசம் பயங்கரமான நெருக்கடிகளை சந்தித்துக்கொண்டிருக்கிறது. நான் அந்தப் பிரச்னைகளை அகற்ற விரும்புகிறேன்.’’ 2008ல் பெஷாவரில் நடந்த ஒரு கூட்டத்தில் பத்தே வயதான மலாலா, ‘‘எனது அடிப்படை உரிமையான கல்வியைப் பறிக்க தலிபான்களுக்கு என்ன தைரியம்?’’ என்று முழங்கியபோது, பாகிஸ்தானில் ஒரு புதிய யுகம் பிறப்பதை அங்கிருந்தவர்கள் உணர்ந்தனர். 2009ல் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பி.பி.சி. செய்தியாளர் மலாலாவின் தந்தையிடம், ‘அவரது பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் யாராவது தலிபான் ஆட்சியில் பெண்களின் நிலைகுறித்து எழுத முடியுமா’ என்று கேட்டபோது, அவர் தனது மகள் மலாலாவை எழுதச் சொல்லி உற்சாகமளித்தார். பி.பி.சி. உருது இணையதளத்தில் மலாலா புனைப்பெயரில் எழுதத் தொடங்கினாள். தலிபான்களின் கலாச்சார ஒடுக்குமுறைகள் பற்றிய புதிய உண்மைகளை அவளது எழுத்துகள் உலகிற்கு சொல்லத் தொடங்கின.

மலாலாவின் நகரமான மின்கோராவில் 2009 ஜனவரி 15ம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் எதுவும் இயங்கக் கூடாது என்று தலிபான்கள் தடைவிதித்தனர். ஏற்கனவே நூற்றுக்கணக்கான பெண்கள் பள்ளிகளை அவர்கள் வெடி வைத்துத் தகர்த்திருந்தனர். தீவிரவாதிகளின் கவனத்தை ஈர்க்காமலிருக்க, ஸ்கூல் யூனிபார்ம் அணியாமல் சாதா உடைகளை அணிந்து வரும்படி அவளது பள்ளி முதல்வர் சொன்னதை மலாலா எழுதுகிறாள். மூடப்பட்ட பள்ளிகளைக்கூட தலிபான்கள் வெறியுடன் தகர்த்து எறிவதைப் பற்றிக் குறிப்பிடுகிறாள்.

பி.பி.சி. டைரிக் குறிப்புகள் முடிந்த பிறகு ‘நியூயார்க் டைம்ஸ்’, மலாலாவைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தது. இந்தக் காலகட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் ஸ்வாட்வேலியில் தலிபான்களுக்கு எதிராகப் போர் நடத்தியபோது மலாலாவின் குடும்பம் இடம் பெயர்ந்தது. மலாலா தொலைக்காட்சிகளில் தோன்றி, பெண்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கத் தொடங்கினாள். சிறுமிகள் நிறைந்த ஒரு அறையில், ‘ஸ்வாட் மாவட்ட குழந்தைகள் சட்டசபை’ என்ற பெயரில் மலாலா ஒரு கூட்டம் நடத்துவதை யுனிசெஃப்பின் வீடியோ ஒன்று காட்டுகிறது. தொடர்ந்து பள்ளிகளில் பெண்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டும் பல நிகழ்ச்சிகளில் மலாலா பங்கேற்கிறாள்.

2011ல் ‘சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது’ வழங்கப்பட்டபோது புகழின் உச்சிக்குச் சென்றாள் மலாலா. அடுத்த இரண்டு மாதத்தில் பாகிஸ்தானின் ‘அமைதிக்கான இளையோர் தேசிய விருதை’யும் பெற்றாள். தலிபான்கள் தொடர்ந்து மலாலாவின் தந்தைக்குக் கொலை மிரட்டல்கள் விடுத்துவந்துள்ளனர். இறுதியாக கடந்த அக்டோபர் 9ம் தேதி அந்தச் சிறுமியின் மீது புல்லட்டுகளைச் செலுத்தினர். ஒரு குழந்தையைக் கொல்வதன் மூலம் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தலிபான்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். ‘‘மலாலா பிழைத்து வந்தால் மீண்டும் கொலை செய்ய முயற்சிப்போம்’’ என்று ஒரு தலிபான் பிரதிநிதி கூறியுள்ளார். இனி அது சாத்தியமல்ல! உலகெங்கும் லட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் தங்களை மலாலாவாக உணர்கின்றனர். புதிய தலைமுறையின் எழுச்சியில் தலிபான்களின் வரலாறு முடிவுக்கு வரப் போகிறது. மலாலாவின் பள்ளித்தோழி ஒருத்தி இப்படிக் கூறுகிறாள்: ‘‘ஸ்வாட் பிரதேசத்தின் ஒவ்வொரு பெண்ணும் இனி மலாலாதான். பள்ளிகளை மூடினால் என்ன, எங்களுக்கு நாங்களே கல்வியளித்துக் கொள்வோம். நாங்கள் வெற்றி பெறுவோம். தலிபான்கள் ஒருபோதும் இனி எங்களைத் தோற்கடிக்க முடியாது.’’ கௌரவம் முக்கியம் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா 500 கோடி ரூபாய்க்கு குறுகிய காலத்தில் சொத்து சேர்த்த விவகாரம் பற்றி ஒரு தனியார் தொலைக்காட்சியில் என்னை விவாதிக்க அழைத்திருந்தார்கள். ‘‘இதே சபையில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல்கள் பற்றியெல்லாம் பேசிவிட்டு இப்போது கேவலம் 500 கோடி ரூபாய் பற்றி பேசச் சொல்கிறீர்களே... அவமானமாக இருக்கிறது’’ என்றேன் நான். எனது கருத்தையே மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மாவும் வழிமொழிந்திருக்கிறார். ஊனமுற்றோருக்கான அறக்கட்டளைக்குச் சொந்தமான பணத்தை சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் அபகரித்த விவகாரத்தில், ‘‘வெறும் 71 லட்சம் ரூபாயை ஊழல் செய்யும் அளவிற்கா ஒரு மத்திய அமைச்சர் கேவலமாகப் போய்விட்டார். அந்தத் தொகை எல்லாம் எங்களுக்குச் சாதாரணம்’’ என்று பேசியுள்ளார்.

வருமானத்திற்கு உச்ச வரம்பு வைப்பதுபோல, ‘இனி இவ்வளவுக்கு மேல் ஊழல் செய்தால்தான் அதைப் பற்றிப் பேசலாம்’ என ஒரு உச்சவரம்பு வையுங்கள். இது இப்போது கௌரவப் பிரச்னையாகிவிட்டது. உயிரை எடுத்துக்கொள் ‘குங்குமம்’ இதழில் இரண்டு வாரங்களுக்கு முன்பு அற்பக் காரணங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்பவர்களை நோக்கி, ‘‘என்னிடம் வாருங்கள், உங்கள் உயிரை நல்ல ஒரு நோக்கத்திற்காக எடுத்துக்கொள்கிறேன்’’ என்று கோபமாக எழுதியிருந்தேன். ஒருநாள் காலை உண்மையாகவே ஒரு ஆள் ஈரோட்டிலிருந்து வந்து நிற்கிறார், ‘‘சார்... என் உயிரை எடுத்துக்கங்க’’ என்று! எழுத்தாளன் என்றால் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு எழுதத்தான் செய்வான். அதுக்காக கொலை கேஸ்ல மாட்டிவிட்டுடாதீங்க. (இன்னும் நடக்கலாம்...)


எனக்குப் பிடித்த கவிதை

ஒலி நாடா ஓடிக்கொண்டிருக்கிறது
நீ வந்தாய் சட்டென
தோன்றிப் பேசிக்கொண்டே இருக்கிறாய்

ஒலி நாடா ஓடிக்கொண்டிருக்கிறது
இரண்டு செவிகளின்
இருப்பின் ஊடாகக் கேட்டுக்
கொண்டிருக்கிறேன் எதையோ
சொல்லி வைத்தாற் போல
நீ பேச்சை நிறுத்தினாய்
நின்றது பாட்டும்

கணத்தில் வந்து விழுந்த மௌனம்
வழியே புரிந்தது எல்லாம்
அல்லது ஏதேதோ
பாட்டுக்கும் மௌனத்திற்கும் பேச்சுக்கும்
அப்பால்
- ஹவி

மனுஷ்ய
புத்திரனின்
ஃபேஸ்புக் பக்கம்

இன்னும் 45 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்காது
- மணி சங்கர் அய்யர்.
மத்தியிலும் இந்த சாதனை தொடர
ஆசி வழங்குங்க அய்யரே...

நான் படித்த புத்தகம்
மாற்று சினிமா கிராபியென் ப்ளாக்
‘மாற்று சினிமா’ என்ற சொல், தமிழின் வணிக சினிமா அராஜகங்களுக்கு எதிராக எழுந்த சொல். உண்மையில் அசலான சினிமாவைத் தேடும் எல்லா முயற்சிகளுமே தமிழில் மாற்று சினிமா என்ற அடைமொழிக்குள் வந்துவிட்டன. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட புரட்சி, கேமராவை எழுதுகோல் போன்ற ஒரு எளிய சாதனமாக கலைஞர்கள் கையில் கொண்டுபோய்ச் சேர்த்தது. கடந்த பத்தாண்டுகளில் குறும்படங்கள், ஆவணப்படங்கள் சார்ந்த இயக்கம் ஒரு பேரலையாக தமிழில் நிகழ்ந்து வருகிறது. இன்னொருபுறம் வெகுஜன சினிமாவில் வாழ்வின் எதார்த்தத்தை நெருங்கிச் சென்று தொடும் பல இளைய தலைமுறை இயக்குனர்கள் தமிழ் சினிமாவின் பழைய இலக்கணங்களை மாற்றி அமைக்கிறார்கள்.

தமிழில் முக்கியமான மாற்று சினிமா முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களை, இந்த நூலில் கிராபியன் ப்ளாக் விரிவாக அறிமுகப்படுத்துகிறார். அந்தப் படங்களின் கதையோட்டம், காட்சியமைப்புகள் பற்றி நுட்பமாக விவாதிக்கிறார். இப்படியான முயற்சிகள் சில நூறு பேரால் பார்க்கப்பட்டு மறைந்துவிடாமல் நிலைக்க இதுபோன்ற புத்தகங்கள் பெரிதும் உதவும்.

(விலை: ரூ.90/-, வெளியீடு: புதிய கோணம், 421, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை- 600018. தொலைபேசி: 044-24332424.)