நியூஸ் வே





பழமோ, காயோ, மரக்கிளையோ... வித்தியாசமான உருவத்தில் அமைந்துவிட்டால், உடனே அதற்கு கடவுள் டச் கிடைத்துவிடும். அப்படித்தான் ஆட்டின் முகம் போலவே விநோத கொம்புகளுடன் பழுத்திருந்த இந்த பப்பாளியை சேலம் தாதகாபட்டி ராஜகாளியம்மன் கோயிலில் வைத்து வணங்கினர்.

‘தாஜ்மகால்’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி இந்திக்கும் சென்றவர் நடிகை ரியா சென். சமீபத்தில் ஒரு பார்ட்டியில் நள்ளிரவு வரை போதையேற்றிக் கொண்டு, அந்தக் கிறக்கத்திலேயே ஃபிளைட் பிடித்து துபாய் சென்றார். அங்கு இறங்கி நடக்கக்கூட முடியாமல் தள்ளாடிய அவரை, விமான நிலைய அதிகாரிகள் விசாரணைக்காக மடக்கிவிட்டனர். அப்புறம் சமாளித்து, ‘‘நான் இந்திய நடிகை. உடம்பு சரியில்லை... அதான்!’’ என உளறிய அவரை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள். திரும்பும்போது தெளிவாக வந்திருக்கிறார் ரியா.

அரசியலில் இது யாத்திரைகளின் சீசன். குஜராத் தேர்தலை மனதில் வைத்து ‘சுவாமி விவேகானந்தா யுவ விகாஸ் யாத்திரை’யை இப்போதுதான் நடத்தி முடித்திருக்கிறார் மாநில முதல்வர் நரேந்திர மோடி. பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி, ‘அதிகார் யாத்திரை’யை இரண்டு கட்டங்களாக நடத்துகிறார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். ஆந்திராவில் காங்கிரஸ் அரசின் ஊழலையும், செயலற்ற போக்கையும் கண்டித்து ‘ஒஸ்துனா மீகோஸம் யாத்திரை’ (நான் உங்களுக்காக வருகிறேன்!) நடத்துகிறார் சந்திரபாபு நாயுடு. ஒரிசாவில் மாநில அரசைக் கண்டித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் ‘பரிவர்தன் யாத்திரை’ நடத்த, அதை எதிர்த்து பாத யாத்திரை நடத்துகிறார் முதல்வர் பிஜு பட்நாயக். சுத்தம், சுகாதாரத்தை வலியுறுத்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ‘நிர்மல் பாரத் யாத்திரை’ நடத்துகிறார். எல்லா யாத்திரைகளிலும் நசுங்கித் தவிப்பது மக்கள்தான்!

சல்மான் கான் வீட்டுக்கு நள்ளிரவில் ப்ரியங்கா சோப்ரா சென்றது சமீபத்தில் சர்ச்சையானது. அந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்பாக, அதே மும்பையில் இன்னொரு விவகாரம். காத்ரினா கைஃப் வீட்டிலிருந்து நள்ளிரவில் வெளியில் வந்து காரில் ஏறிய ரண்பீர் கபூரை போட்டோ எடுத்துவிட்டார்கள். தலையை மறைக்கும் தொப்பி அணிந்திருந்தாலும், நன்றாக அடையாளம் தெரிகிறது.

இது நம்பர்

804500000000000000

தலைசுற்ற வைக்கும் இத்தனை சைபர்களையும் சேர்த்துக் கூட்டினால், 8045 கோடியோ கோடி என்ற நம்பர் கிடைக்கும். பிரான்ஸின் போர்டாக்ஸ் நகரில் சோலின் சான் ஜோஸ் என்ற பெண்ணுக்கு வந்த டெலிபோன் பில் தொகை இது. பிரான்ஸ் தேசத்தின் ஒரு வருடத்திய ஒட்டுமொத்த வருமானத்தைவிடவும் இது ஆறாயிரம் மடங்கு அதிகம். ‘‘இத்தனை சைபர்களைப் பார்த்ததும் எனக்கு மயக்கமே வந்தது’’ என்கிறார் ஜோஸ்.
கம்பெனிக்கு போன் செய்து சொன்னதும், ‘‘அதெல்லாம் முடியாது. உங்க அக்கவுன்ட்ல இருந்து நாங்க பணத்தை எடுத்துக்குவோம்’’ என அடம் பிடித்திருக்கிறார்கள். அப்புறம் பில்லைப் பார்த்துவிட்டு பதறிப்போய் மன்னிப்பு கேட்டு, ‘பிரின்டிங் மிஸ்டேக்’ என வாங்கிப் போனார்களாம். உண்மையில் அவர் கட்ட வேண்டிய தொகை, வெறும் எட்டாயிரம் ரூபாய்!