நோ டீல்! சோம சேகர்





கம்பெனியில் உடன் வேலை செய்யும் ஆனந்தன் சொன்னான்...
‘‘சேகர், நாம ரெண்டு பேரும் ஒரே ஏரியாவிலிருந்துதான் ஆபீஸ் வர்றோம். நான் தினமும் பஸ்ல வர்றேன். நீ பைக்ல வர்றே. பெட்ரோல் விக்கற விலையில் நீ ஒருத்தனே வண்டியில வர்றது அதிக செலவுதானே! நான் பெட்ரோல் செலவை ஷேர் பண்ணிக்கிறேன். தினமும் ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து உன் வண்டியிலயே வரலாமா?’’
நல்ல யோசனையாகப்பட்டது சேகருக்கு! வீட்டில் வந்து ரஞ்சனியிடம் சொன்னபோது, படபடவென பொரிந்து தள்ளிவிட்டாள்.
‘‘உங்க ஃப்ரெண்ட் ரொம்ப புத்திசாலிங்க... பஸ் நெரிசல்ல உக்கார இடம் கிடைக்காம, படியில தொங்கிக்கிட்டு, வேர்வை வழிய, அவஸ்தைப்பட்டு வர்றது எப்படி... பைக்ல ஜாலியா வர்றது எப்படி? இதை உதவியா கேக்காம என்னவோ உங்க செலவை ஷேர் பண்ணிக்கிற மாதிரி கேட்டிருக்கார்... நீங்களும் தலையாட்டிட்டு வந்திருக்கீங்க!’’
‘‘அதான் பெட்ரோல் செலவை ஏத்துக்கிறேன்னு சொல்றானே?’’
‘‘பெட்ரோல் செலவு மட்டும்தானா? நீங்க எழுபதாயிரம் ரூபாய் போட்டு வண்டி வாங்கியிருக்கீங்க... அதுல பாதியைக் கொடுப்பாரானு கேட்டுப் பாருங்க..! டீலே வேண்டாம்னு ஓடிப்போயிடுவார்!’’
‘இந்தப் பொண்டாட்டிகளின் கணக்கே வேறாய் இருக்கிறதே?’ - சேகர் பிரமித்து நின்றான்.