டிப்ஸ் கு.அருணாசலம்





‘‘திருநெல்வேலிக்கு ரெண்டு டிக்கெட்!’’ - கண்டக்டரிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.
மீதம் 20 ரூபாயை மட்டும் கொடுத்தவர், ‘‘ரெண்டு டிக்கெட் எழுபத்தாறு ரூபா... என் கிட்ட சில்லறை நாலு ரூபா இல்ல. ஆறு ரூபா இருந்தா குடுங்க பத்து ரூபாயா தர்றேன்!’’ என்றார்.
‘‘பரவாயில்ல சார்... விடுங்க!’’ என்றேன் சிரித்தபடி.

அருகில் நின்ற மனைவி என்னை ‘கடி’த்தாள். ‘‘உங்களுக்கு என்ன கொழுப்பா? உக்கார இடம் கிடைக்காம,  கம்பியைப் பிடிச்சுக்கிட்டு நின்னுட்டு வர்றோம். இதுல தாராள பிரபு... நாலு ரூபா டிப்ஸா கொடுக்கிறீங்களாக்கும்!’’

நான்கு சீட் தள்ளிச் சென்ற கண்டக்டர், எங்களை அவர் பக்கமாக அழைத்தார். முன்னே நின்று கொண்டிருந்தவர்களை விலக்கி முன்னேறிச் சென்றோம்.

‘‘சார், இந்த ரெண்டு சீட்ல இருக்கறவங்க அடுத்த ஸ்டாப்ல இறங்கிடுவாங்க. அவங்க இறங்கினதும் நீங்க ரெண்டு பேரும் உக்கார்ந்துக்குங்க’’ - என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் கண்டக்டர்.

இப்போது என் மனைவி என்னைக் குளிர்ச்சியாகப் பார்த்தாள். ‘தாராளமாய் நடந்து கொள்வதற்கும் ஒரு பலன் இருக்கிறது’ என்று சொல்லாமல் சொன்னது என் பெருமிதப் பார்வை!