அவன் இவன் : ப்ரபு பாலா





ஒரு வருடத்துக்கு முன் வேலைக்காக துபாய் சென்ற செந்தில், இப்போதுதான் பத்து நாள் விடுமுறை கிடைத்து வீட்டுக்கு வந்திருந்தான். வீடே உற்சாக வெள்ளத்தில் நனைந்து கொண்டிருந்தது.

அன்று மாலை.
செந்தில் துபாயிலிருந்து வாங்கி வந்த விலையுயர்ந்த உடைகளை அவன் மனைவி ராகினியும், மகன் ஹரீஷும் ஆசையாக அணிந்துகொண்டார்கள். ஷாப்பிங் மாலில் விதம்விதமான விளையாட்டுகளில் ஹரீஷ் கொட்டமடித்த பிறகு எல்லோரும் சினிமாவுக்குப் போனார்கள்.

வீடு திரும்பும்போது அந்த உயர்தர ஹோட்டலில் சாப்பிட அமர்ந்தார்கள். சர்வர் சாம்பார் கிண்ணத்தை டேபிளில் வைக்கும்போது, கை தவறி ராகினியின் புடவையில் கொஞ்சம் சிந்திவிட்டது.

அவ்வளவுதான்... ராகினி டென்ஷனாகி விட்டாள்.
‘‘ராஸ்கல்... இந்தப் புடவையோட விலை தெரியுமா? எங்க வாங்கினதுன்னு தெரியுமா? இப்படிப் பொறுப்பில்லாம சாம்பாரைக் கொட்டி... ச்சே, ஒழுங்கா பரிமாறத் தெரியாதவனை எல்லாம் வேலைக்கு வச்சி என்ன ஹோட்டல் நடத்தறாங்க? கூப்பிடுய்யா உங்க மேனேஜரை!’’ என்று சீறினாள்.

‘‘இப்படி கை தவறுவது சகஜம். வாஷ் பண்ணா கறை போயிடும். இதுக்குப் போய் ஏன் டென்ஷனாகி அவரைத் திட்றே ராகி!’’ என்றான், துபாயின் நட்சத்திர ஹோட்டலில் சர்வராக வேலை பார்க்கும் செந்தில்.