மனசு : நா.கி.பிரசாத்





‘‘எதிர்வீட்டு செண்பகத்துக்கு நாம நிம்மதியா இருக்கோம்னு ஏற்கனவே பொறாமை! இதுல நாம பொட்டிக்கடை ஆரம்பிச்ச வயித்தெரிச்சலும் இப்ப சேர்ந்துக்கிச்சுங்க..!’’ என்று கணவனிடம் பொரிந்தாள் சிவகாமி.

‘‘தேவையில்லாம இப்படி ஒருத்தர் மேல குறை சொல்லக்கூடாது சிவகாமி’’ என்று கண்டித்தான் சண்முகம்.

“அது இல்லைங்க, இத்தனை நாளா அவங்க தவறாம பேப்பர் வாங்கிட்டு இருந்தாங்க. நாம கடையில பேப்பர் விக்கிறதப் பார்த்துட்டு இப்ப பேப்பர் படிக்கிறதையே நிறுத்திட்டாங்க. எங்கே நம்ம கடையில வாங்கினா, நாம மாடி மேல மாடி கட்டிடுவோமோன்னு...’’ எனப் புலம்பிய சிவகாமியை சமாதானப்படுத்திவிட்டுக் கிளம்பிய சண்முகத்திற்கு, செண்பகத்தின் வீட்டில் பேச்சுக்குரல் கேட்டது.
“ஏன்... திடீர்னு பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டே?’’ - அவள் கணவர் கேட்டார்.

“நாம வீட்ல மெஸ் வைச்சு நடத்தறோம். வேலைக்குப் போற ஆளுங்க நிறைய பேர் இங்க சாப்பிட வர்றாங்க. அவங்க எல்லாம் பேப்பரை ஓசியில படிச்சிட்டுப் போயிட்டாங்கன்னா... பாவம் சண்முகம் அண்ணன்! புதுசா ஆரம்பிச்ச பொட்டிக்கடையில விற்கிற பேப்பரை யாரும் வாங்க மாட்டாங்க. பக்கத்துல இருந்துக்கிட்டு நாம அதைப் பண்ணலாமா?’’
செண்பகத்தின் விளக்கம் கேட்டு நெகிழ்ந்து போனான் சண்முகம்.