லெஸ்பியன்





 ‘‘The true feminist deals out of a lesbian consciousness whether or not she ever sleeps with women!’’  Audre Lorde, American writer and activist.

லெஸ்பியன் என்பது பெண் பெண்ணுடன் கொள்ளும் காதலையும் காமத்தையும் குறிப்பது. 20ம் நூற்றாண்டில்தான் பெண் ஓரினச்சேர்க்கைக்கென தனிச்சொல் உருவாக்கப்பட்டது. வரலாறு நெடுகப் பார்த்தால், ஆண்களுக்கு இருந்த அளவுக்குக்கூட ஓரினச்சேர்க்கை சுதந்திரம் பெண்களுக்கு கிடைக்கவில்லை; அதேபோல கொடூரமான தண்டனைகளையும் பெண்கள் எதிர்கொள்ளவில்லை.
கி.மு 1700ல் எழுதப்பட்ட ஹம்முராபி சட்டங்களில்தான் லெஸ்பியன் பற்றிய முதல் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அதில் Salzikrum என்று குறிப்பிடப்படும் ஒரு சட்டத்தின்படி, பெண்கள் பெண்களைத் திருமணம் செய்து கொள்ளலாம். கி.மு 600ல் லெஸ்பாஸ் என்ற தீவைச் சேர்ந்த ஸாப்போ என்ற கிரேக்கப்பெண், இளம் பெண்களைப் பற்றி காதல் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால், அவருக்கு எந்த சினேகிதியோடும் பாலியல் தொடர்பு இல்லை. இவர் பிறந்த இடத்தின் பெயரை ஒட்டித்தான் லெஸ்பியன் என்ற சொல் உருவானது.

பொம்பெய் மற்றும் ஹெர்குலனியம் கடலோரப் பகுதிகளில் இருந்த ரோமானிய பாலியல் கலைப்படைப்புகளில் லெஸ்பியன் சித்தரிப்புகளும் இடம்பெற்றிருந்தன. ஓவிட் எழுதிய  Metamorphoses தொகுப்பின் 9ம் புத்தகத்தில் இஃபைஸின் கதை வருகிறது. இஃபைஸின் அம்மா கர்ப்பமுற்றபோது, ‘‘பெண் குழந்தை பிறந்தால் கொன்று விடுவேன்’’ என அப்பா சொல்லி இருந்தார். இஃபைஸ் பெண்ணாகப் பிறக்க, அம்மா அவளை ஆண் என்று சொல்லி வளர்த்தாள். இஃபைஸுக்கு 13 வயது ஆனபோது இயாந்தே என்ற அழகிய பெண்ணைப் பார்த்து கல்யாணம் முடித்து வைத்தார்கள்.

லூகியஸ் என்ற ரோமானியக் கவி, ஒரு கணவன் தன் மனைவியை யும், அவளது லெஸ்பியன் இணை யையும் கொன்ற சம்பவத்தைக் குறிப்பிட்டு, ‘‘அந்த மனைவியின் செயல் கள்ளத்தொடர்பை விட மோசமான குற்றம்’’ என்கிறார். அவரது படைப்பில் ஓரிடத்தில், ஆண் ஓரினச்சேர்க்கை சிறந்ததா, ஆண் பெண் கலவி சிறந்ததா என இரு ஆண்கள் வாதிடும்போது, ‘‘ஆண் ஆண் உறவை ஏற்றுக்கொண்டால் லெஸ்பியன்களையும் அங்கீகரிக்க வேண்டி வரும்!’’ என்கிறான் ஒருவன்.

பெரினைஸ் என்ற எகிப்து இளவரசி, ஒரு பெண்ணை மணந்ததாக எழுதி உள்ளார் இயாம்பிலிக்கஸ்.‘‘அந்த உறவு காட்டுத் தனமானது, சட்டத்துக்கெதிரானது’’ என்கிறார் அவர். 2ம் நூற்றாண்டைச் சேர்ந்த Apocalypse of Peter நூல், ‘லெஸ்பியன்களுக்கு நரகம்தான் தண்டனை’ என்கிறது. பைபிளின் புதிய ஏற்பாட்டில் ரோமர் பகுதி 1ம் அதிகாரத்தின் 26வது வசனம்: ‘அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள்’... இது லெஸ்பியன்!

மத்திய காலங்களில் தேவாலயங்கள் பெண் ஓரினச்சேர்க்கையை கடுமையாகக் கண்டித்தன. 7ம் நூற்றாண்டில் தியோடர் என்ற மேண்டர்பரி பிஷப் உருவாக்கிய   Penitentials   வகை சட்ட நூல், ‘ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்க வேண்டும்’ என்று சொன்னது. 11ம் நூற்றாண்டு வரை லெஸ்பியன் உறவு தொடர்பாக மட்டும் 14   Penitentialகள் எழுதப்பட்டன.

1260ல் பிரான்ஸில் கொண்டுவரப்பட்ட Li livres de jostice et de plet தான் முதல் சட்டபூர்வ லெஸ்பியன் தண்டனை அறிவிப்பு. முதல் இரு முறைகளுக்கு உடல் உறுப்புகளை வெட்டியும் (கை, கால் என்று இல்லாமல் மார்புகளாக இருக்கலாம்), மூன்றாம் முறை தீயிட்டுக் கொளுத்தியும் தண்டனை கொடுத்திருக்கிறார்கள். ஸ்பெயின், இத்தாலி, ரோம் ஆகிய தேசங்களில், லெஸ்பியன் உறவு இயற்கைக்கு எதிரானதாக அறிவிக்கப்பட்டு, தவறிழைத்தவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். 1477ல் அப்படிப்பட்ட முதல் எரிப்பு நடந்திருக்கிறது.

இத்தாலிய கன்னியாஸ்திரியான பென்னடெட்டா கார்லினி, ஸ்ப்லென்டிடெல்லோ என்ற புனித ஆவியின் தூண்டலில் நிறைய சக கன்னியாஸ்திரிகளை மோகித்ததாக செய்தியுண்டு. இதற்காக 40 ஆண்டுகள் அவரை நாடு கடத்தினார்கள். ஆங்கில இலக்கியங்களிலும் நாடகங்களிலும் லெஸ்பியன் சகஜமாகப் புழங்கியது. மறுமலர்ச்சிக் காலத்தில் இது ஒரு ஃபேஷனாகவே இருந்தது!
1649ல் ப்ளைமௌத்தில் சாரா நார்மன், மேரி ஹாம்மோன் என்ற பெண்ணுடன் உறவு கொண்டிருந்ததாக நிரூபிக்கப்பட்டது. ஹாம்மோன் 16 வயதுக்குக் கீழ் இருந்ததால் தண்டிக்கப்படவில்லை. 1721ல் ஜெர்மனியில் கேத்ரினா மார்கரீத்தா லிங்க் என்ற பெண் ணுக்கு லெஸ்பியனுக்காக மரண தண்டனை வழங்கப்பட்டது.

1800ல் முதல் விஞ்ஞானபூர்வ லெஸ்பியன் ஆராய்ச்சிகள் பிரசுரம் கண்டன. 1910ல் எம்மா கோல்ட்மேன் முதன் முதலாக லெஸ்பியன் உரிமைகள் குறித்துப் பொதுவெளியில் பேசினார். 1921ல் இங்கிலாந்தில் லெஸ்பியன் உறவை சட்டபூர்வமாக்க நடந்த முயற்சி தோல்வி கண்டது.

1923ல் எல்ஸா கிட்லோ ‘On A Grey Thread’ என்ற தலைப்பில் முதல் லெஸ்பியன் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். 1931ல் வெளியான Mädchen in Uniform தான் முதல் லெஸ்பியன் திரைப்படம். 1939ல் ஃப்ரான்செஸ் வி.ரும்மெல் என்ற பிரெஞ்சு ஆசிரியர் Diana: A Strange Autobiography என்ற தன் சுயசரிதையைப் பதிப்பித்தார். லெஸ்பியன் ஜோடி, இறுதி வரை சந்தோஷமாக வாழ்ந்ததாகப் பேசிய முதல் சுயசரிதை அது.



1952ல் வின் பேக்கர் எழுதிய முதல் லெஸ்பியன் பேப்பர்பேக் நாவலான Spring Fire பிரசுரமாகி, 15 லட்சம் பிரதிகள் விற்று சாதனை புரிந்தது. 1955ல் நான்கு லெஸ்பியன்களால் சான்பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்ட The Daughters of Bilitis (DOB) தான் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட முதல் லெஸ்பியன் சமூக அரசியல் அமைப்பு. கைவிடப்பட்ட, தனிமைப்படுத்தப்பட்ட, திருமணமான, தாய்மையடைந்த லெஸ்பியன்களுக்கு ஆதரவாக அது செயல்பட்டது. லெஸ்பியன் ஆராய்ச்சிகளை, பொது விவாதங்களை ஊக்குவித்தது.

  1966ல் The Ladder என்ற லெஸ்பியன் இதழ், லில்லி வின்சென்ஸ் என்ற லெஸ்பியன் பெண்ணை முதன்முறையாக முகத்தைக் காட்ட வைத்து, அட்டைப் படத்தில் போட்டது.     1973ல் சாலிமில்லர் கியர்ஹார்ட் என்ற லெஸ்பியன், சான்பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். அங்கு அவர் முதன்முதலாக பெண் பாலியலைப் படிப்பிக்கும் கோர்ஸைத் தொடங்க வழி செய்தார்.

1974ல் நியூயார்க்கில் ஜோன் நெஸ்லே - டெபோரா எடல் என்ற லெஸ்பியன் ஜோடி, தம் சேகரிப்புகளைக் கொண்டு லெஸ்பியன் வரலாற்றுக் கருவூலம் திறந்தார்கள். 1978ல் பேட்ரிக் கலிஃபியா, கெயில்ரூபின் உள்ளிட் டோரால் முதல் லெஸ்பியன் பெண்ணிய அமைப்பு BDSM தொடங்கப்பட்டது. லெஸ்பியன் உறவை பெண்ணியத்தின் ஒரு பகுதியாக முன்வைத்தது இந்த அமைப்பு.
1978ல் ராபின் டைலர் தொலைக்காட்சியில் தோன்றிய முதல் லெஸ்பியன் பெண். 1981ல் பில்லி ஜீன் கிங் என்ற டென்னிஸ் வீராங்கனை தன் செக்ரட்டரி மரிலின் மார்னெட்டுடன் இருந்த ஓரின உறவை ஒப்புக்கொண்டு, தன்னை லெஸ்பியனாக அறிவித்தார். இதனால் அவர் தனது அத்தனை விளம்பர வாய்ப்பு களையும் இழக்க நேரிட்டது.

1986ல் பெக்கி ஸ்மித் - அன்னி அஃப்லெக் என்ற லெஸ்பியன் ஜோடி ஒரு குழந்தையைத் தத்தெடுக்க சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது. 1992ல் The Lesbian Avengers அமைப்பை நியூயார்க்கில் தொடங்கினர். 1993ல் இந்த அமைப்பு 20 ஆயிரம் லெஸ்பியன்களைத் திரட்டி ஓர் அணிவகுப்பை நடத்தியது.

அதே ஆண்டு ராக் பாடகி மெலிஸ்ஸா ஈத்தரிட்ஜ் தன்னை லெஸ்பியன் என அறிவித்தார். அமெரிக்க அதிபர் கிளின்டன், ராபர்ட்டா அட்ச்சென்பெர்க் என்ற லெஸ்பியனை சம உரிமைக்கான கூடுதல் செக்ரட்டரியாக நியமித்தார். 1996ல் Friends என்ற டி.வி நிகழ்ச்சியில் முதல் லெஸ்பியன் திருமணத்தைக் காட்டினார்கள். இதில் ஜேன் சிப்பெட் மற்றும் சூஸன் நடித்தனர். 1997ல் அமெரிக்க நடிகை எல்லன் டீஜெனெர்ஸ் தன்னை லெஸ்பியன் என அறிவித்தார். அவர் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட Ellen என்ற டி.வி சீரியலில் அவரே லெஸ்பியனாகத் தோன்றி நடித்தார்.
1999ல் இஸ்ரேல் உச்சநீதிமன்றம் லெஸ்பியன் ஜோடியில் ஒருவரது குழந்தைக்கு மற்றொரு வரும் சட்டபூர்வத் தாய் என்ற அங்கீகாரத்தை வழங்கியது.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் லெஸ்பியன் திருமணம், 2011ல் நடந்தது. 1996ல் தீபா மேத்தா இயக்கிய Fire படத்தில் ஷபனா ஆஸ்மியும் நந்திதா தாஸும் லெஸ்பியனாக நடித்திருந்தனர். லெஸ்பியனான ஷமீம் ஷரீஃப் இயக்கிய மி Can't Think Straight  மற்றும்  The World Unseen   படங்களில் லிசா ரேவும் ஷீத்தல் ஷேத்தும் லெஸ்பியன்களாக நடித்தனர். மதூர் பண்டர்கர் இயக்கிய Heroine படத்தில் கரீனா கபூர், சஹானா கோஸ்வாமி இடையே ஓர் உணர்வுபூர்வமான லெஸ்பியன் காட்சி இருந்தது. ஹாலிவுட்டில் நூற்றுக்கும் மேல் லெஸ்பியன் படங்கள் உண்டு!
லெஸ்பியன் என்பது காட்சிப்பிழையன்று; கானல் பெண்மையில் அன்பைக் காணல்.