தமிழகத்துக்கும் வந்தாச்சு வால்மார்ட்!





சினேகமான புன்னகையுடன் பைக்கில் வரும் அந்த இளைஞர்கள், ‘‘நல்லாயிருக்கீங்களா அண்ணாச்சி’’ என்று உரிமையோடு கைகுலுக்குகிறார்கள். ‘‘நாங்க ‘பெஸ்ட் பிரைஸ் மாடர்ன் ஹோல்சேல் ஸ்டோர்’ல இருந்து வர்றோம். அஞ்சாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் எங்ககிட்ட இருக்கு. மெம்பர் ஆயிட்டீங்கன்னா, மார்க்கெட் விலையைவிட 20ல இருந்து 30 பர்சன்ட் கம்மியா தருவோம். 14 நாள் கிரெடிட்டும் உண்டு. டோர் டெலிவரி செய்வோம். மெம்பர்ஷிப் கார்டுக்கு ஒத்தைப் பைசா தரவேண்டாம். இலவசம்தான்’’ என தேனாக இனிக்கப் பேசுகிறார்கள்.
தமிழகத்தில் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதியில்லை என்று தமிழக அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. ‘பெஸ்ட் பிரைஸ் மாடர்ன் ஹோல்சேல் ஸ்டோர்’ என்ற பெயரில் சென்னையில் வணிகத்தைத் தொடங்க இருக்கிறது வால்மார்ட். வால்மார்ட்டோடு கைகோர்த்திருப்பது, பாரதி ஏர்டெல் நிறுவனம். மளிகைக்கடைகள் மட்டுமின்றி, உணவகங்கள், மருத்துவமனைகள், பியூட்டீஷியன்கள் என நுகர்பொருளோடு தொடர்புடைய சுமார் 80 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக ஆக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள் வணிகர்கள்.

‘‘கடைக்காரர்களை பிரைன்வாஷ் பண்றதுக்கு சென்னையில மட்டும் 300 பேரை நியமிச்சிருக்காங்க. ‘இப்போ உறுப்பினரா சேந்துட்டா கட்டணம் இல்லை. அடுத்த மாசத்துல இருந்து கட்டணம் உண்டு. கடையோட லைசென்ஸ், போட்டோ, ஐடி ப்ரூப் போதும். மெம்பர்ஷிப் கார்டு கொடுத்திருவோம். அதைக் கொண்டு போனாதான் ஸ்டோர் கதவே திறக்கும். பணமே தேவையில்லை. கோடக் மகேந்திரா பேங்க்ல கட்டினாப் போதும். பொருட்களை டோர் டெலிவரி பண்ணிடுவோம்’னு சொல்லி அப்ளிகேஷன்ல கையெழுத்து வாங்குறாங்க. அப்பவே ஒரு தற்காலிக மெம்பர் கார்டும் கொடுக்கிறாங்க’’ என்கிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவர் மாரித்தங்கம்.

பூந்தமல்லிக்கு அருகில் வானகரத்தில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது, பெஸ்ட் பிரைஸ் மாடர்ன் ஹோல்சேல் ஸ்டோர். ஜனவரியில் திறக்கப்பட உள்ளதாகச் சொல்கிறார்கள். இதுதவிர, இன்னும் நான்கு ஸ்டோர்கள் வரவிருக்கிறதாம். பிற நகரங்களிலும் இடம் பார்க்கும் வேலைகள் நடப்பதாகச் சொல்கிறார்கள்.

‘‘அரசையும், வணிகர்களையும் ஏமாற்றும் மோசடியான வியாபார உத்தியோடு தமிழகத்தில் வால்மார்ட் களமிறங்கியிருக்கிறது’’ என்று குற்றம் சாட்டுகிற வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகி மோகன், விரிவாகப் பேசுகிறார். ‘‘இந்திய சில்லறை வணிகச் சந்தையோட மதிப்பு ரூ.15 லட்சம் கோடி. இது 2030ல ரூ.75 லட்சம் கோடியா அதிகரிக்கும்னு கணிச்சிருக்காங்க. இந்தியாவோட 7 கோடி சில்லறை வியாபாரிகளை அழிச்சிட்டு இந்தத் தொகையை அப்படியே அள்ளிக்கிட்டுப் போறதுதான் அவங்க திட்டம்.

ஒரு பொருளைத் தயாரிக்கிற நிறுவனம், மொத்த விற்பனையாளர் ஒருவரை நியமிக்கும். அவர் பகுதிக்கொரு ஏஜென்ட் நியமிச்சு பொருட்களை வினியோகிப்பார். இதுதான் முறையான வியாபாரம். வால்மார்ட் முதல்ல இந்த வினியோகஸ்தர்களை அழிக்கிற வேலையில இறங்கியிருக்கு. ‘நேரடியா கம்பெனியிலயே பொருட்களை கொள்முதல் பண்ணி 20 முதல் 30 சதவீதம் விலை குறைவா தர்றோம்’னு இப்போ சொல்றாங்க. குறிப்பிட்ட காலத்துக்கு அவங்களால தரவும் முடியும். வியாபாரிகள் இப்படி வால்மார்ட்ல பொருட்களை வாங்கத் தொடங்கினா, வினியோகஸ்தர்கள் காணாமப் போயிடுவாங்க. இனி வால்மார்ட்லதான் வாங்கணும்னு நிலை வந்தபிறகு, அவங்க என்ன விலை வச்சு வித்தாலும் கேள்வி கேட்க முடியாது. செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்குவாங்க. எல்லாரும் வாயை மூடிக்கிட்டு வாங்கத்தான் வேணும்.

‘தமிழகத்துல சில்லறை விற்பனை செய்ய வால்மார்ட்டை அனுமதிக்க மாட்டோம்’னு முதல்வர் சொல்றார். ஆனா, தந்திரமா இங்க நுழைஞ்சிருக்கு வால்மார்ட். வியாபாரிகளை மட்டுமில்லாம, பள்ளி கேன்டீன், ஓட்டல்கள், மருத்துவமனைகள்னு எல்லாத் தரப்பையும் உறுப்பினர்களா சேக்குறாங்க. இதன்மூலம், ஏஜென்டுகள் மட்டுமில்லாம சில்லறை வியாபாரிகளோட தொழிலும் அழியப் போகுது. உதாரணமா, தாய்லாந்தை எடுத்துக்கலாம். அங்கே சிறுகடைகள் எல்லாம் ஒழிஞ்சு போச்சு. மிஞ்சியுள்ள கடைக்காரர்களும் வால்மார்ட்டில பொருட்களை வாங்கியே விற்க வேண்டியிருக்கு. புறவாசல் வழியா தமிழகத்திற்குள்ள நுழைந்துள்ள வால்மார்ட்டின் மோசடியை அரசு புரிந்து கொள்ளவேண்டும்’’ என்று கொதிக்கிறார் மோகன்.



இதே வேதனையோடு பேசுகிறார் தென்னிந்திய நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பி.எம்.கணேஷ்ராம். ‘‘வால்மார்ட் மொத்த வியாபாரம் மட்டும் செய்யப்போவதில்லை. தந்திரமாக சில்லறை வியாபாரத்திலும் புகுந்து விட்டார்கள். பக்கத்து மாநிலங்களைப் பார்த்தாலே இதன் விளைவுகளைப் புரிந்து கொள்ளலாம். மைசூரில் பெரிய குடியிருப்பு ஒன்றில், வீடு வீடாகப்போய் பொருட்கள் ஆர்டர் எடுத்து சப்ளை செய்து கொண்டிருந்தார் ஒரு பெண். கடைக்காரர்கள் அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, பெங்களூரில் உள்ள ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஸ்டோரின் உறுப்பினர் கார்டை எடுத்துக் காண்பித்துள்ளார். அவருக்கு கடையே இல்லை. எந்த முதலீடும் இல்லை. வீடு வீடாக ஆர்டர் எடுத்து அந்த நிறுவனத்தில் பொருட்களை வாங்கி சப்ளை செய்வதுதான் அவர் வேலை. அந்தக் குடியிருப்பை நம்பி கடை நடத்தியவர்கள் வியாபாரம் இல்லாமல் உக்கார்ந்திருக்கிறார்கள்.

இதைத்தான் தமிழ்நாட்டில் வால்மார்ட்டும் செய்யப்போகிறது. ஒரு லைசென்ஸ், பில் புக் இருந்தால் யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக சேர்த்துக்கொள்கிறார்கள். பெரிய நிறுவனங்களை, ‘இந்தியாவில் எங்களுக்கு மட்டுமே பொருட்களை சப்ளை செய்ய வேண்டும்... இல்லாவிட்டால் பிறநாடுகளில் உள்ள எங்களுடைய ஸ்டோர்களில் உங்கள் பொருட்களை விற்பனை செய்யமாட்டோம்’ என்று மிரட்டும் நிலை வரலாம். ஆந்திராவின் குண்டூரில் இது நடந்தே விட்டது. கேட்பரீஸ் நிறுவனத்தின் தயாரிப்பான சாக்லேட்டுகள் வினியோகஸ்தர்களுக்கு அனுப்பப்படவில்லை. அதனால் சில்லறை வியாபாரிகளுக்கு தரமுடியவில்லை. ஆனால் வால்மார்ட் ஸ்டோரில் மட்டும் கிடைக்கிறது. இதுதான் இங்கேயும் நடக்கும்.

இந்தியாவில் 2 லட்சத்து 25 ஆயிரம் வினியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இனிமேல் தொழில் செய்யமுடியாது. வினியோகஸ்தர்களிடம் வேலை செய்யும் இளைஞர்களை கூடுதல் சம்பள ஆசைகாட்டி இழுக்கும் வேலையிலும் வால்மார்ட் இறங்கியுள்ளது. ஒட்டுமொத்த சந்தையையும் ஆக்கிரமித்துவிட்டு, அவர்கள் விருப்பத்துக்கு விலை ஏற்றி விற்பார்கள். அப்போது மக்களுக்கு வேறு வழியில்லாமல் போய்விடும்’’ என்கிறார் கணேஷ்ராம்.

இதுபற்றி பேச, அண்ணா நகரில் உள்ள ‘பெஸ்ட் பிரைஸ் மாடர்ன் ஹோல்சேல் ஸ்டோர்’ அலுவலகத்தைத் தொடர்பு கொண்டோம். ‘‘இது தொடர்பாக நாங்கள் எதுவும் பேசமுடியாது’’ என்றனர் அவர்கள்.
- வெ.நீலகண்டன்
படங்கள்: கணேஷ்