தாத்தா பேரைக் காப்பாத்துவேன்!



இரவு 10 மணிக்கு ஒரு ரிங்...


‘‘நாளைக்கு லிங்குசாமி சார் ஆபீஸ் வர்றேன். பேசலாம்னு சொன்னீங்களே! அங்கே பேசலாம். உங்களுக்கு போனஸா லட்சுமி மேனனும் அங்கே வர்றாங்களாம். ஸோ, நீங்க சீக்கிரம் வந்திடுவீங்க...’’ - மெல்லிய குரலில் பேசினார் விக்ரம் பிரபு. சொன்ன படியே காத்திருந்தார். ‘கும்கி’யில் காட்டிய விறைப்பு, முறைப்பு எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஜில்லென புது லுக்! பாரா கட்டி வர்ணிக்கும் அழகுடன் பக்கத்திலேயே லட்(டு)சுமி மேனன்!

கைகள் மொபைலைச் சுழற்ற, நிமிஷத்துக்கு ஒரு பொசிஷன் மாறி உட்காருகிற துறுதுறு விக்ரம் பிரபுவிடம், ‘‘அழகாயிட்டீங்களே பாஸ்...’’ என்றோம்.
‘‘தேங்க் யூ! உங்களுக்குத் தெரியுமே. ‘கும்கி’ மாதிரி ஒரு படத்துக்கு தயாராவேன்னு இரண்டு வருஷத்துக்கு முன்னால சொன்னா நானே நம்பியிருக்க மாட்டேன். காடு மேடெல்லாம் சுத்தி, யானையோட திரிஞ்சு, பனி, மழை, வெயில்னு பார்க்காமல் அலைஞ்சு இதெல்லாம் எனக்கு ஒரு ஆச்சர்யம்தான். பிரபு சாலமன் சார் டெடிகேஷனை விளக்கி சொல்லவே முடியாது. யானை பிரமாண்டம்னு சொல்வாங்க. எனக்கென்னவோ அது அழகுன்னு நினைக்கத் தோணுது. அதோட பாசத்துக்கு எல்லையே இல்லை. நாம ‘நாய்தான் நன்றி உள்ளது’ன்னு அவசரப்பட்டு சொல்லிட்டோம். ‘சிவாஜி’ படத்துல சாலமன் பாப்பையா ‘வாங்க பழகலாம்’னு ரஜினி சார்கிட்டே சொல்வார்ல, அது மாதிரி சாலமன் சார் என்னை யானைகிட்டே பழகச்சொன்னார். சொல்லப் போனா லட்சுமி மேன னை விட யானையோடதான் ரொமான்ஸ் அதிகம்!’’ - சிரித்துக்கொண்டே சொல்கிறார் சின்ன பிரபு.



‘‘ஆமா சார். எனக்கும் அப்படித்தான். வினயன் படத்துல ஒரு சின்ன ரோல்தான். ஆனால் முக்கியமானது. அதைப் பார்த்துட்டு பிரபு சாலமன் சார் கூப்பிட்டார். ஏற்கனவே, ‘மைனா’ படத்தைப் பார்த்திருக்கேன். அதனால ஒண்ணுமே சொல்லலை. கதை கேட்கலை... ‘சரி’ன்னு மட்டும் சொல் லிட்டேன். நான் எடுத்த முடிவுகளிலேயே ரொம்ப சரியான முடிவு இதுதான்.  
தமிழில் இது மாதிரி படம் கிடைக்கிறது பெரிய அதிர்ஷ்டம். எனக்கும், விக்ரம் பிரபுவுக்கும் அது நிச்சயமா இருக்கு. நான்தான் எதுவுமே கேட்காம ‘சரி’ன்னு சொல்லிட்டேனே. ஸோ, விக்ரம் பிரபு நடிக்கிறார்னு எனக்கு முதல்ல தெரியாது. அப்புறம்தான் இவர் வந்தார். ‘சிவாஜி சார் ஃபேமிலியா’ன்னு பயம் இருந்தது. ஆனா, ச்சோ ஸ்வீட். இவ்வளவு இன்வால்வ்மென்ட் நான் பார்த்ததே இல்லை. துளி கோபம் வராது. சில சமயம் யானையோட டேக்ஸ் சரியா வராம இருந்தாலும், அசரவே மாட்டார். நிச்சயமா எங்க ரெண்டு பேருக்கும் நல்ல பெயர் வரும்னு தெரியும். ஆனா, இவ்வளவு வரும்னு எதிர்பார்க்கவே இல்லை’’ - மேலே பார்த்து கும்பிடுகிறார் லட்சுமி.

‘‘எனக்கு அப்பா பெயரையும், குறிப்பா தாத்தா பெயரையும் காப்பாத்தணும்னு தோணுச்சு. தாத்தாவுக்கு நான் சினிமாவுக்கு வருவேன்னு நிச்சயம் தெரியாது. முதல்ல படிச்சு டிகிரி வாங்கிட்டுத்தான் மறுவேலைன்னு அவர் கண்டிப்பா இருந்தார். அதனால அவர்கிட்டே இந்த ஆர்வத்தை காட்டிக்கவே மாட்டேன். ஆனா, எங்க ஃபேமிலியில யாருக்குக் கல்யாணம் நடந்தாலும் நான்தான் வீடியோ கேமரா தூக்கிட்டு ஓடிக்கிட்டிருப்பேன். தாத்தா ஆசைக்கு டிகிரி வாங்கியாச்சு. நடிப்பு, கேமரா எல்லாம் அடங்கின படிப்பு இது. சாலமன் சாரை போய் பார்த்தது தான் திருப்புமுனை. என்னோட எல்லா வெற்றிக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் அவர்தான்’’ என்று புன்னகைக்கிறார் விக்ரம் பிரபு.



‘‘நானும் ஒரு நாளாவது பிரபு சாரை பார்த்திடணும்னு பார்ப்பேன். ஷூட்டிங் பக்கம் அவர் வரவேயில்லை. ஆனா, நாங்க தங்கியிருக்கிற இடத்திற்கு வந்துட்டுப்போனார். பிரபு சாரோட பெரிய கனவு விக்ரம் பிரபுன்னு புரிஞ்சது. நிச்சயமா ‘கும்கி’யோட வெற்றிக்கு, அவரை விட அதிகம் சந்தோஷப்படுற ஆள் இருக்க முடியாது!’’ - பெரிய கண்கள் மினுங்க மினுங்கப் பேசுகிறார் லட்சுமி.
‘‘இப்ப இருக்கிற இளம் நடிகர்களில் உங்களுக்கு யாரை...’’ என்று ஆரம்பித்தாலே பதறுகிறார் விக்ரம் பிரபு. ‘‘சார், சார், நான் என்ன அப்படி வளர்ந்திட்டேன்? இப்பத்தான் முதல் அடியே எடுத்து வச்சிருக்கேன். விட்ருங்களேன்’’ என்றவரிடம், ‘‘கமல் சாரும், ரஜினி சாரும் என்ன சொன்னாங்க?’’ என்றோம்.

‘‘அதையெல்லாம் அப்பா என்கிட்டே சொல்ல மாட்டார். எதையாவது தலையில் ஏத்திக்கிட்டா என்ன பண்றதுன்னு அவருக்கு நினைப்பு இருக்கும். அப்பாவுக்கு திருப்தி கொடுத்ததுதான் எனக்கு சந்தோஷம். நிச்சயம் தாத்தா பெயரைக் காப்பாத்துவேன். எல்லாத்திலயும் விக்ரம் பிரபுவுக்கு தனி ஸ்டைல் இருக்கும். இமேஜ் பார்க்காம நடிக்கணும். வெரைட்டி தரணும். ரிசல்ட் முன்னாடியே தெரிய நாம் கடவுள் இல்லை. அதையெல்லாம் உணர்ந்து சரி செய்யிற அனுபவம் ‘கும்கி’யில் கிடைச்சிருக்கு. வயித்துல இருக்கிறவரைதான் வலி. குழந்தை நல்லபடியா வெளியே வந்ததும் ஒருவித நிறைவான சுகமா இருக்கும்னு சொல்வாங்க. அந்த ஃபீல்தான் இப்ப எனக்கு!’’ - ரசித்துப் பேசுகிறார் விக்ரம் பிரபு.

‘‘ட்ரீட் கொடுங்க...’’ எனக் கேட்டால், விக்ரம் பிரபு லட்சுமியின் திசை திரும்ப, லட்சுமி விக்ரமை கை காட்ட, கடைசியில் இரண்டு பேரும் கை காட்டியது எங்களை. எப்படியிருக்கு பாருங்க!
- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்