ஆன்லைனில் டைவிங் லைசன்ஸ்





தினமும் பஸ்ஸில் அலுவலகம் செல்லும் பெண் நான். சீக்கிரமே டிரைவிங் கற்று டூவீலர் வாங்கலாம் என்றிருக்கிறேன். இப்போதெல்லாம் எல்.எல்.ஆர் வாங்க ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என்கிறார்கள். அதை எப்படிச் செய்வது?
- சொர்ணா, சேரன்மாதேவி
பதில் சொல்கிறார்கள் தமிழக போக்குவரத்துத் துறையினர்


‘ஓட்டுனர் பழகுனர் உரிமம்’ எனப்படும் எல்.எல்.ஆர் லைசன்ஸுக்கு ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க முடியும் என்பது சரியல்ல. எல்.எல்.ஆருக்கான உங்கள் பிரத்யேக விண்ணப்பப் படிவத்தையும் ஆர்.டி.ஓ அலுவலக அப்பாயின்மென்ட்டையும் இன்று இணையத்தின் வழியே பெற முடியும். ஒரு இமெயில் கணக்கைத் துவங்குவதை விடவும் எளிமையானது இது. முதலில் உங்கள் கணினியின் இணையம் வழி   www.tnsta.gov.in/transport   என்ற இணையப் பக்கத்துக்குச் செல்லுங்கள்.

இதன் முகப்புப் பக்கம் தமிழில் இருக்கும். ஆங்கிலத்தில் வேண்டுமானால், மேலே வலது ஓரத்தில் அதற்கென உள்ள பட்டனை க்ளிக் செய்யலாம். எல்.எல்.ஆர் விண்ணப்பம் தொடங்கி ஓட்டுனர் உரிமத்துக்கான ஆர்.டி.ஓ அப்பாயின்மென்ட் வரை பல சேவைகள் இந்தத் தளத்தில் உள்ளன.

ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு என்ற தேர்வே இவற்றில் முதலாவது. இதை க்ளிக் செய்தால்   ‘Learner‘s license’   என்ற தலைப்புக்குக் கீழே புதிதாக எல்.எல்.ஆர் விண்ணப்பம் பெற வேண்டுமா? அல்லது ஏற்கனவே பெற்ற விண்ணப்பத்தை மீண்டும் பிரின்ட் எடுக்க வேண்டுமா என இரு தேர்வுகள் தென்படும். அதில் முதலாவதைத் தேர்வு செய்யும் பட்சத்தில் உங்கள் ஸ்கிரீனில் ஒரு ஆன்லைன் விண்ணப்பப் படிவம் விரியும். உங்கள் பெயர், பாலினம், தந்தை/கணவர் பெயர் என மிக எளிமையான தகவல்களை அதில் உள்ளீடு செய்ய வேண்டும்.

உங்கள் முகவரியை     வைத்து அருகே உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தை இந்தத் தளமே பரிந்துரை செய்யும். அந்த அலுவலகத்துக்கு நேரடியாக சென்றுதான் நீங்கள் எல்.எல்.ஆருக்கு விண்ணப்பிக்க முடியும். அப்படி நேரடியாக செல்ல உங்களுக்கு எந்தத் தேதி வசதி என்றும் ஓரிடத்தில் கேட்கப்படும்.

நீங்கள் தேர்வு செய்யும் தேதியில் அந்த அலுவலகத்தில் அப்பாயின்மென்ட் கிடைக்கிறதா என்பது சில வினாடிகளிலேயே தெரிந்துவிடும். அப்படி கிடைக்கும் ஒரு தேதியைக் குறிப்பிட்டபின் கடைசியாக இருக்கும்   submit   பட்டனை க்ளிக் செய்து விடலாம்.

நீங்கள் பூர்த்தி செய்த விவரங்கள் உங்கள் கணக்கில் பதிவானதும் உங்களுக்கென ஒரு பிரத்யேக விண்ணப்பப் படிவம் தயாராகி ஸ்கிரீனில் தோன்றும். அந்தப் படிவத்தை பிரின்ட் எடுத்துக் கொண்டு அதில் புகைப்படம் ஒட்டி, கையெழுத்திட்டு, மேற்கொண்டு பூர்த்தி செய்ய வேண்டிய கட்டங்களைப் பூர்த்தி செய்யவேண்டும். அப்பாயின்மென்ட் கிடைத்த நாளில் சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு நேரில் சென்று அந்த விண்ணப்பத்தைக் கொடுத்தால் முடிந்தது. நீங்கள் எல்.எல்.ஆர் லைசென்ஸுக்கு விண்ணப்பித்து விட்டீர்கள் என்று அர்த்தம்!

சர்க்கரை நோய் இருப்பவர்கள் ரத்ததானம் செய்ய முடியாது என்கிறார்களே, உண்மையா?
- கே.கமலவேணி, ஈரோடு-4.
பதில் சொல்கிறார் டாக்டர் அரவிந்த் சுதர்சனம்

ரத்தம் மூலம் பரவக்கூடிய நோய்களோ வேறு வகையான தொற்று நோய்களோ இருந்தால்தான் பிரச்னை. நீரிழிவு எனும் சர்க்கரை நோய் என்பது, இன்சுலின் சுரப்போடு தொடர்புடையது. சர்க்கரை நோய் உள்ளவரின் ரத்தத்தை ஏற்றுவதன் மூலம் இன்னொருவருக்கு அது பரவுவதில்லை. எனவே, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தாராளமாக ரத்தம் கொடுக்கலாம். ஏற்றப்படும் ரத்தத்தில் ஒருவேளை சர்க்கரை இருந்தாலும், ரத்தத்தைப் பெறுகிறவரின் உடலில் இன்சுலின் சுரப்பு நார்மலாக இருக்கும்பட்சத்தில், உடனடியாக சர்க்கரை அளவு கட்டுக்குள் வந்துவிடும்.

ஆனால், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த அதிக அளவில் இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்பவராக இருந்தால் அவர் ரத்தம் கொடுக்கக் கூடாது. அதிகப்படியான இன்சுலின் நார்மல் உடலுக்குள் செல்லும் போது, அதன் இயல்பு நிலையை மாற்றி பிரச்னையைப் பெரிதாக்கிவிடக் கூடும். அதேபோல சில நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம், இதயப் பிரச்னைகள் இருக்கலாம். அவர்களும் ரத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.