டிசம்பர் 21ம் தேதி உலகம் அழிந்தால்?





எவ்ளோ வேணாலும் கடன் வாங்கிக்கோ. ஜாலியா இரு மாமே. 21ம் தேதிக்கு மேல அதத் திருப்பிக் கேக்க ஒரு பய இருக்க மாட்டான்’’ என்று ஒரு கூட்டம் பகீர் எஸ்.எம்.எஸ்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. ‘‘அப்படின்னா அன்னைக்கு ஸ்கூல் லீவா அங்கிள்?’’ என குழம்புகின்றனர் பொடிசுகள். ‘‘இந்த வருஷம் நியூ இயர் பார்ட்டிக்கு புக் பண்ணலாமா, வேணாமா?’’ என ரிவர்ஸ் எடுக்கிறது யூத் வர்க்கம். தமிழ் சினிமாவில் பல்லி, கரப்பான்பூச்சிக்கெல்லாம் பயப்படும் நம் நடிகைகள் இந்த விஷயத்தில் காட்டும் ரீயாக்ஷன் என்ன?

தமன்னா
‘‘வாட்... உலகம் அழியப் போகுதா? ஓ மை காட்... நான் என்ன செய்யப் போறேன்!’’
இப்படியெல்லாம் நான் ஷாக் ஆவேன்னு நினைக்காதீங்க. ரூம் போட்டு யோசிக்கிற இந்த ரூமரை எல்லாம் நான் நம்பல. உலகம் அழியப்போறதா சொல்ற அதே டேட்லதான் எனக்கு பர்த் டே தெரியுமா? (யாருப்பா அது... கட்அவுட்டுக்கு சொல்லியாச்சா?) அந்த நல்ல நாளுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிற நேரம் பார்த்து இப்படி வெறுப்பேத்துறீங்களே... நியாயமா? சரி, உலகம் எப்போ அழியுதோ அதுக்கு முந்தின நாள் நான் என்ன செய்வேன்னுதானே சொல்லணும்? உலகம் அழியிறதுக்கு முந்தின நாளே நானும் அதைச் சொல்றேனே!

தன்ஷிகா


‘‘நோ... கடவுள் யாரையும் அழிக்க மாட்டார். அவர் கருணை உள்ளவர். நம்ம காலண்டருக்கெல்லாம் கட்டுப்பட்டவர் இல்லை. அப்படியே அடுத்த வாரம் உலகம் அழிஞ்சா என்ன பண்றது? முடிஞ்ச வரைக்கும் எஸ்கேப் ஆகுறது எப்படின்னு யோசிக்க வேண்டியதுதான். இருக்கறதுலயே உயரமான பில்டிங்கோட மொட்டை மாடியில ஏறி நின்னுக்கிட்டா, சுனாமில இருந்து தப்பிச்சிடலாம். ஒருவேளை நெருப்பு மழை பெய்தா, இரும்புல குடை செஞ்சு பிடிச்சுக்கலாம். கவர்மென்ட்டையே ஒரு மெகா சைஸ் குடை கூட செய்யச் சொல்லலாம். பூகம்பம் வந்தா வழக்கம் போல ரோட்டுல இறங்கி நிக்க வேண்டியதுதான். எப்படியாவது உயிரைக் காப்பாத்திக்கணும் அதுதானே சார் ஒவ்வொரு உயிரினத்துக்குமே உள்ள லட்சியம்! இப்படி டைப் டைப்பா ஓடியும் தப்பிக்க முடியலைன்னா? உஸ் ஸ்ஸ்... முடியலன் னு அப்படியே உக்கார்ந்து செத்துப் போன தாத்தா பாட்டிக்கெல்லாம் ஹாய் சொல்ல ரெடியாகிக்க வேண்டியதுதான்!’’

இனியா

‘‘ஹா... ஹா... ஹா...’’ என எடுத்த எடுப்பிலேயே இனியா சிரித்த சிரிப்பு எமலோகம் வரை எக்கோ கேட்டிருக்கும். ‘‘உலகமெல்லாம் அழியாதுங்க. பத்து வருஷத்துக்கு ஒருதடவை இப்படித்தான் வகை வகையா கிளப்பி விடுறாங்க. ரெண்டாயிரத்துல கூட உலகம் அழியப்போகுதுன்னு சொன்ன உலகம்தானே இது?

ஆனா, இந்த மாதிரி ரூமரால ஒரு நன்மைங்க. நாளைக்கே பெரிய பூகம்பம் வந்து நாமெல் லாம் உள்ள போயிட வாய்ப்பிருக்குன்னு இந்த ரூமர்ஸ் தான் ஞாபகப்படுத்திட்டே இருக்கு. ஸோ, கொஞ்ச நாள் வாழப் போற இந்த வாழ்க்கையில என்னத்துக்கு ஈகோ... என்னத்துக்கு பொறாமை? இருக்குற வரைக்கும் நாலு பேருக்கு நல்லது பண்ணிட்டுப் போவோமேன்னு தோணுதா இல்லையா? அதுதாங்க இதோட சக்ஸஸ். ஐ லைக் தட். உலகம் அழியுதுன்னா என்னோட சாய்ஸ், நிறைய பேருக்கு உதவி பண்றதுதான். நம்மளைச் சுத்தி இருக்குற இடத்தை மாசுபடாம வச்சிக்கிட்டாலே இந்த உலகம் அழியாதுங்க!’’

அஞ்சலி


‘‘சத்தியமா சொல்றேங்க... அடுத்த வருஷ காலண்டரையும் நாம கிழிக்கத்தான் போறோம். பரபரப்புக்காக அமெரிக்காகாரங்க இப்படிப் பரப்பி விடறாங்க... நம்பாதீங்க! சினிமா கதை மாதிரியே இதுவும் யாரோ எழுதின திரைக்கதைதான். அதுக்குள்ள தூக்கு தண்டனை கைதி மாதிரி கடைசி ஆசையை எல்லாம் கேட்டு கலவரப்படுத்துறீங்களே... அப்படியே உலகம் அழிஞ்சா நான் என்ன செய்வேன்னு நீங்க 22ம் தேதி எனக்கு போன் பண்ணிக் கேக்கலாம். அன்னிக்கும் இந்த பூமி சுத்திக்கிட்டுதான் இருக்கும். பை பை...’’
- அமலன்