விநோதம்





தனது பால்ய நண்பர் பிரஜித் பத்மநாபனை 11.11.11 அன்று திருமணம் செய்துகொண்ட மம்தா மோகன்தாஸ், அவரை விவாகரத்து செய்வதாக 12.12.12 அன்று அறிவித்தார். ‘‘நல்லவேளை... 13.13.13 என ஒரு தேதி வரவில்லை’’ என சிரிக்கிறார் மம்தா.

மும்பையின் பிரண்டன் பெரைரா - எமிலி டிசில்வா ஜோடி 10.10.10 அன்று நிச்சயம் செய்தனர். 11.11.11 அன்று திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தனர். 12.12.12 அன்று திருமணம் செய்துகொண்டனர்.

வங்க தேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், தனது காதலி உம்மே அகமது ஷிஷிரை இந்த அதிசய தினத்தில் மணந்து கொண்டார்.

அபூர்வ நாளில் வந்த தனது பிறந்தநாளில் திடீரென ரசிகர்களை தன் வீட்டில் சந்தித்தார் சூப்பர்ஸ்டார். ‘‘எல்லா விஷயங்களையும் பாசிட்டிவ் எண்ணத்தோட பாக்கணும். ‘முடியும்’, ‘நடக்கும்’னு நினைச்சா வாழ்க்கையில முன்னேறலாம்’’ என்பதே ரசிகர்களுக்கு அவரது மெஸேஜ்.

12.12.12 அன்று உலகெங்கும் மகப்பேறு மருத்துவர்கள் பிஸி! குறிப்பாக மதியம் 12 மணி 12 நிமிடத்தில் சிசேரியன் செய்து குழந்தை பெற்றெடுக்க பெரிய க்யூ. விருச்சிக ராசி, கும்ப லக்னம், அனுஷ நட்சத்திரம் என ஜாதகமும் சூப்பராக இருக்கும் என்பதே காரணம்!