நியூஸ் வே





*  நெருங்கிய திரையுலக நண்பர்கள் தன் வீட்டுக்கு வந்தால், விஜய் அவரே பர்சனலாக உபசரிப்பார். விருந்தினர்களுக்கு தோசை வார்த்துக் கொடுப்பதும் அவர்தான். விஜய் சட்னி செய்வதிலும் மன்னர் என்பது யாருக்கும் தெரியாத விஷயம்.

*  அநியாயத்திற்கு நல்லபிள்ளையாக ஆகிவிட்டார் செல்வராகவன். வீட்டில் இருந்தால் குழந்தையை முழுமையாக கவனிப்பதும், தூக்கிக்கொண்டு ஷாப்பிங் போவதும் செல்வராகவன்தான். ஒரு நல்ல திருமணம் ஆளையே மாற்றிவிடும் என்பதற்கு உதாரணமே இதுதான் என்கிறார்கள் நண்பர்கள்.

*  ‘பிரியாணி’ கிண்டிக்கொண்டிருக்கும் வெங்கட்பிரபு, ஹீரோ, வில்லன் தவிர கதையில் ஸ்பெஷல் கேரக்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இதில் ‘மைக்’ மோகனை நடிக்க வைக்க நினைத்த வெங்கட்பிரபு, இப்போது கமிட் செய்திருப்பது ராம்கியை!

*  தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் ப்ரியா ஆனந்துக்கு, கதாநாயகியாக அது கடைசி படமாம். அமெரிக்காவில் வளர்ந்தவர் என்றாலும், சென்னையில் இருக்கும் பாட்டி மீதுதான் ப்ரியம் அதிகம். பேத்தியின் கல்யாணத்தை பார்க்கவேண்டும் என்ற பாட்டியின் ஆசையை தை மாத வாக்கில் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளாராம் ப்ரியா.



*  ஒரு ஹீரோ நடித்த படத்துக்கு புரொமோஷன் வேலைகளில் இறங்க சக ஹீரோக்கள் தயங்குவார்கள். ஆனால் இந்தியில் முன்னணி நடிகராக இருந்தாலும், சல்மான் கான் இந்த விஷயத்தில் வித்தியாசம். அக்ஷய் குமார் ஜோடியாக அசின் நடித்த ‘கிலாடி 786’ படத்துக்கு பெருமளவில் உதவியிருக்கிறார்.

*  தனிக்கட்சி கண்டிருக்கிறார் எடியூரப்பா. அவரது கர்நாடக ஜனதா கட்சி, அங்கு நடக்கும் பி.ஜே.பி. ஆட்சியைக் கவிழ்க்குமா என்பதே இப்போது மில்லியன் டாலர் கேள்வி. ‘‘டெல்லியில் அமர்ந்துகொண்டு கட்டளைகள் பிறப்பிக்கும் கட்டத்தை கட்சித் தலைவர்கள் தாண்டிவிட்டனர். இப்போது நிஜத்தில் தேசியக் கட்சி என எதுவுமே கிடையாது. பி.ஜே.பியோடு இனி எந்த உறவும் கிடையாது’’ எனும் எடியூரப்பா, ‘‘காங்கிரஸுடனான உறவு எதிர்கால சூழலைப் பொறுத்து அமையும்’’ என்றிருக்கிறார்.

*  மணிரத்னத்தின் மகன் நந்தன், லண்டனில் தத்துவம் படிக்கிறார். அவரை அவரது இயல்புப்படியே இருக்க அனுமதித்துவிட்டார் அப்பா மணிரத்னம். அப்பா படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்கூட செல்வதில்லை நந்தன்.

*  குஜராத்தில் மோடி ஆரம்பித்திருக்கும் ‘3டி தேர்தல் பிரசாரம்’ எதிர்கால எலெக்ஷன் டிரெண்ட் ஆகலாம். அவரது பேச்சை விசேஷ கேமராக்களால் பதிவு செய்து, தனி வாகனத்தில் சென்று ஊர் ஊராக ஒளிபரப்புகின்றனர். பெரிய திரையில், நிஜமாகவே மோடி மேடையில் நின்று பேசுவது போலவே ஃபீல் கிடைக்கிறது. இந்த அதிசயத்தைப் பார்க்கவே கூட்டம் கூடுகிறது.

*  தமிழில் படங்களே இல்லாவிட்டாலும் மலையாளத்திலும் கன்னடத்திலும் பாவனா பிஸி. எம்.டி.வாசுதேவன் நாயர் கதையில், ஹரிஹரன் இயக்கத்தில் நடிப்பதை பரவசத்தோடு எல்லோரிடமும் பகிர்ந்துகொள்கிறார்.

*  ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்தின் இசை வெளியீட்டை மதுரையில் நடத்துகிறார் பாரதிராஜா. விழாவில் அநேகமாக ரஜினி, கமல், ஸ்ரீதேவி மூவரும் பங்கேற்கக்கூடும். படம் ரிலீசானதும், தனது ஆஸ்தான கதாசிரியர் ‘அன்னக்கிளி’ செல்வராஜ் கதையில் ஒரு படத்தை இயக்குகிறார் பாரதிராஜா. கதாசிரியரின் 200வது படம் அது.

*  இந்த வார சோகம், பிரிட்டனில் பணிபுரிந்த இந்திய நர்ஸ் ஜெசிந்தா சல்தான்ஹா தற்கொலை. பிரிட்டிஷ் இளவரசி கேட் மிடில்டன் கர்ப்பமாக இருக்கிறார். அவர் மருத்துவப் பரிசோதனைக்கு வந்தபோது, ஆஸ்திரேலியாவின் ‘2டே’ என்ற தனியார் ரேடியோ எஃப்.எம். நிறுவன அறிவிப்பாளர்கள் மெல் கிரைக் மற்றும் மைக்கேல் கிறிஸ்டியன் ஆகியோர் போனில் பேசினர். தங்களை பிரிட்டிஷ் அரசி எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் என அவர்கள் அறிவித்துக் கொள்ள, அவர்களோடு ஜெசிந்தா பேசினார். இது ரேடியோவில் தாறுமாறாக ஒலிபரப்பாக, பதற்றம் ஏற்பட்டது. இதற்கு பயந்து அவர் தற்கொலை செய்துகொண்டார். மன்னிப்பு கேட்டிருக்கும் ரேடியோ நிறுவனம், தங்களது இந்த மாத விளம்பர வருவாயான 2.7 கோடி ரூபாயை ஜெசிந்தா குடும்பத்துக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு உயிரின் விலை?


*  வீட்டில் இருந்தால் கல்லூரி நண்பர்களை அழைத்து, பிரியாணி விருந்து போட்டு மகிழ்வார் ஆர்யா. அந்த சமயம் சினிமா நண்பர்களுக்கு கண்டிப்பாக அழைப்பு கிடையாது. இப்போதும் அவரது பர்சனல் அசிஸ்டென்ட் ஆக கூடவே இருப்பது அவரது நண்பன் ரமேஷ்தான்.

*  கவிஞர் சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவல், தெற்காசிய இலக்கியத்திற்கு வழங்கப்படும் பெரிய விருதான ‘டிஎஸ்ஸி’ விருதுக்கான இறுதிப்பட்டியலில் உள்ளது. ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான விருது இது.

*  ‘அட்டகத்தி’ இயக்குனர் ரஞ்சித், அடுத்த வாய்ப்பைப் பிடித்துவிட்டார். இவர் சொன்ன கதைக்கு ஓ.கே சொல்லி கால்ஷீட்டையும் கையோடு கொடுத்துள்ளாராம் கார்த்தி. படம், ‘சார்பட்டா பரம்பரை’.

சைலன்ஸ்
இளசுகளை வசீகரிக்கிற பெரிய டைரக்டர்தான். இருந்தாலும் செய்கிற செலவுகளுக்கு பஞ்சம் வைக்கமாட்டார். என்னதான் காதல் படங்கள் எடுத்தாலும், வாங்கிய கடனுக்கு வட்டியை கட்டாததால், வண்டியை தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். தவணையைக் கட்டி இப்போதுதான் மீட்டிருக்கிறார்.

நிச்சயம் அடுத்த வருடம் மூணுஷா நடிகைக்கு திருமணம் என்கிறார்கள். எல்லோருடைய சம்மதமும் கிடைத்துவிட்டாலும், அக்கட நடிகரின் தாத்தா மட்டும் முட்டுக்கட்டை போடுகிறாராம். அவரை சமாதானப்படுத்திவிட்டால் பிரச்னை ஓவர் என்கிறார்கள்.

ஸ்வீட் ஸ்டால் நடிகை பண்ணுகிற அலம்பல் தாங்க முடியவில்லையாம். முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டதால், நினைத்து நினைத்து ரேட்டை ஏற்றுகிறாராம். ஒரு கோடியை நெருக்கிச் சொல்வதால், இனிமேலும் தமிழில் அவரைப் பார்ப்பது கஷ்டம் என்கிறார்கள். தெலுங்கு தேசத்தில் கேட்கிற தொகைக்கு ஏற்ற மாதிரி டிரஸ்ஸில் சிக்கனம் காட்டுவதால், அங்கே ஆத்தாவுக்கு அடைமழை.