அபார்ஷன்





''I notice that all the people who support abortion are already born.’’  - ரொனால்டு ரீகன், முன்னாள் அமெரிக்க அதிபர்

அபார்ஷன் (கருக் கலைப்பு) என்பது கருவிலிருக்கும் சிசுவை, அது முழு வளர்ச்சி பெற்று உயிருடன் வெளிவரும் முன்பே மருத்துவமுறைகளைப் பயன்படுத்திக் கலைப்பது. இதுவே விபத்தாக நிகழ்ந்தால் கருச்சிதைவு (miscarriage) எனப்படும்.

முதன்முதலாக கி.மு 2700ல் சீனச் சக்கரவர்த்தி ஷென்னாங், கருக்கலைப்பு செய்ய பாதரசத்தைப் பயன்படுத்தச் சொல்லியிருக்கிறார். கி.மு 1760ல் பாபிலோனியாவின் ஹமுராபி சட்டங்களின்படி புறத்தாக்குதல் மூலம் கருக்கலைப்பு செய்வது குற்றம். கருக்கலைப்பு செய்த பெண்ணையும், உதவியவரையும் ஒதுக்கி வைக்கச் சொல்கின்றன வேதங்கள். கி.மு 1550ல் எழுதப்பட்ட Ebers Papyrus என்ற   எகிப்திய மருத்துவ நூலில்தான் அபார்ஷன் முதன் முதலாக ஆவணப்படுத்தப்படுகிறது. கி.மு 1075ன் அஸிரியன் சட்டப்படி, கணவனின் விருப்பத்திற்கு எதிராக மனைவி கருக்கலைப்பு செய்வது மரண தண்டனைக் குற்றம். கி.மு 515ல் சீன அந்தப்புரப் பெண்கள் கருக்கலைப்பு செய்ததற்கான ஆவணங்கள் கிட்டியுள்ளன.

அந்தக் காலத்தில் மலையேறுதல், நீச்சலடித்தல், பளு தூக்குதல், தலைகீழாய் பாய்தல் போன்றவற்றால் கருக்கலைப்பு செய்யப்பட்டன. பட்டினி கிடத்தல், பச்சிலைகள் இடுதல், ரத்தம் வெளியேற்றுதல், அடி வயிற்றில் கொதிநீர் ஊற்றுதல், சுடுகொட்டாங்குச்சி மேல் அமர்தல் போன்ற முறைகளும் இருந்தன.

கிரேக்கர்கள் கருவிலிருக்கும் சிசுவை ஒரு செடியைப் போலக் கருதினர். அதனால் கருக்கலைப்பு அறச்செயலாகவே கருதப்பட்டது. அவர்கள் சில மூலிகைகளை அபார்ஷனுக்குப் பயன்படுத்தினார்கள். ‘கர்ப்பத்தின் துவக்கத்திலேயே கருவைக் கலைப்பதில் செவிலிகள் திறமை பெற்றிருந்ததாக’ பிளாட்டோ குறிப்பிடுகிறார். ‘ஆண் கரு 40 நாட்களிலும் பெண் கரு 90 நாட்களிலும் மனித ஆத்மாவைப் பெறும். அதற்குள் கருக்கலைப்பு செய்வது பாவமல்ல’ என்பது அரிஸ்டாட்டில் கணக்கு.

ஹிப்போக்ரேடஸ் எழுதிய Hippocratic Corpus, கருக்கலைப்புக்காக பெசரி என்ற மருந்துக்குச்சிகளை பிறப்புறுப்பில் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. சோரனஸ் என்ற கிரேக்க மருத்துவர், ‘‘பெண்ணுக்குத் தாய்மையை ஏற்கும் முதிர்ச்சியோ, பிரசவத்தைத் தாங்கும் ஆரோக்கியமோ இல்லாத சூழல்களில் கருக்கலைப்பு செய்யலாம்’’ என்றார். பின்புறம் பாதம் படுமாறு எகிறிக் குதிப்பதன் மூலம் கருச்சிதைவை உண்டாக்கும் Lacedaemonian Leap முறையை அவர் அறிமுகம் செய்தார்.

கி.மு 211ல் கிறிஸ்துவத்தின் நுழைவுக்குப் பின் செப்டிமியஸ், காரகல்லா ஆகிய இரு ரோமானிய பேரரசர்கள் அபார்ஷனைத் தடை செய்தனர். தற்காலிக நாடு கடத்தலே இதற்குத் தண்டனை. ‘கருக்கலைப்பு என்பது கொலைக் குற்றத்துக்குச் சமம்’ என்று சொல்லும் புனித அகஸ்டின், கருவில் இறந்த சிசுவை மட்டும் சிதைத்து வெளியே எடுக்கலாம் என்கிறார். 2ம் நூற்றாண்டில் டெர்டுல்லியன் என்ற கிறிஸ்துவ மதவியலாளர், கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சமயங்களில் மட்டும் அபார்ஷன் செய்யப் பயன்பட்ட சில கருவிகளைப் பற்றி விவரிக்கிறார்.

கர்ப்பமான பெண்ணின் அடி வயிற்றைக் கடுமையாக அழுத்துவதன் மூலம் கருவைக் கலைப்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்தது. 1150களில் கட்டப்பட்ட கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலில், ஒரு பெண்ணுக்கு இப்படி அபார்ஷன் செய்யும் ஒரு ராட்சசனின் சித்திரம் இடம்பெற்றுள்ளது.



8ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சமஸ்கிருத நூல், ஒரு பானையில் வெங்காயத்தை வேக வைத்து வரும் நீராவியின் மீது பெண் உட்கார்வதன் மூலம் கருவைக் கலைக்கலாம் என்கிறது.

தீவிர உடற்பயிற்சி மற்றும் இறுக்கமான உள்ளாடைகளை அணிவதன் மூலம் சில பிரிட்டிஷ் பெண்கள் கருக்கலைப்பை முயற்சித்தார்கள். நியூசிலாந்தின் மவோரி இன மக்கள் மகுடு என்ற சக்திக்குப் பயந்து நேரடியாகக் கருக்கலைப்பில் ஈடுபடாமல், முன்கூட்டி பிரசவவலி ஏற்படுத்துவதன் மூலம் கருக்கலைத்தார்கள். 11ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஞிமீ ஸ்iribus herbarum என்ற   மூலிகை மருத்துவ நூல், இத்தாலிய காட்னிப், சேவரி, சேஜ், சோப்வார்ட், சைப்பிரஸ், ஹெல்லபோர் மற்றும் பென்னிராயலை ஆகியவற்றை கருக்கலைப்பிற்குப் பரிந்துரைக்கிறது. டான்ஸி என்ற மூலிகை மத்திய காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஐரோப்பிய ஆக்கங்களில் சாவின் என்ற மூலிகை குறிப்பிடப்படுகிறது. ஸ்பானிஷ் ஃப்ளை என்ற பூச்சி, ஓப்பியம், வாட்டர்க்ரெஸ் விதை, இரும்பு சல்ஃபேட் மற்றும் இரும்பு குளோரைடு ஆகியவற்றை பிரிட்டிஷார் பயன்படுத்தினர். வார்ம்ஃபெர்ன் என்ற செடியின் வேர் பிரான்ஸில் பயன்படுத்தப்பட்டது. ஜெர்மனியில் மர்ஜோரம், தைமே, பார்ஸ்லி, லாவெண்டர் ஆகியவை கலந்த ஒரு கருக்கலைப்பு தேநீர் பயன்பாட்டில் இருந்தது. நசுக்கப்பட்ட எறும்புகள், ஒட்டகத்தின் எச்சில், கரடியின் கொழுப்பில் கரைக்கப்பட்ட மானின் வால்மயிர்கள் ஆகியவையும் பயன்பட்டன.

16ம் நூற்றாண்டில் போப் ஐந்தாம் சிக்ஸ்டஸ், ‘கர்ப்பம் எந்நிலையில் இருந்தாலும் அபார்ஷன் என்பது கொலை’ என்று அறிவித்தார். 17ம் நூற்றாண்டில்  ஐரோப்பா, வட அமெரிக்காவில் நவீன கருக்கலைப்பு நுட்பங்கள் நடைமுறைக்கு வந்தன. 19ம் நூற்றாண்டில் அமெரிக்க மருத்துவ சங்கம், அமெரிக்காவில் கருக்கலைப்பு தடைக்கு முயற்சித்தது. 1821ல் முதன்முதலாக அமெரிக்காவின் கனெக்ட்டிகட் மாகாணம் அபார்ஷனுக்குத் தடை விதித்தது. 1861ல் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் தடை வந்தது. 1869ல் ரோமன் கத்தோலிக்க திருச்சபை தடை செய்தது. 

1842ல் கருக்கலைப்புக்கு க்யூரெட் என்ற கருவியைப் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். வெற்றிட உறிஞ்சு கருவிகளையும் பயன்படுத்தினார்கள். 1870ல் நியூயார்க்கைச் சேர்ந்த எலி வான் டி வார்க்கிள் என்பவர் பதிப்பித்த பேப்பர், பிறப்புறுப்புக்குள் நீரைப் பீய்ச்சி அடிப்பதன் மூலம்தான் கணிசமான அபார்ஷன்கள் நடந்ததாகக் குறிப்பிடுகிறது. தவணை முறையில் 10 டாலர் கட்டினால், இச்சேவை கிடைத்தது. அபார்ஷன் குறித்த அச்சு விளம்பரங்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் வெளியாகின. அமெரிக்காவின் காம்ஸ்டாக் சட்டம் இவ்விளம்பரங்களைத் தடை செய்தது.

விக்டோரியன் காலத்தில் வசித்த பிரபல அபார்ஷன் ஸ்பெஷலிஸ்ட் மேடம் ரெஸ்டெல். 1870ல் அவரது விளம்பரச் செலவு மட்டும் 60,000 டாலர்கள். இந்த விளம்பரங்களால் சமூகத்தில் அவருக்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. 1878ல் இதற்காக அவர் கைது செய்யப்பட்டபோது தற்கொலை செய்துகொண்டார். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அபார்ஷன் என்பது, மணமாகாமல் கர்ப்பமுற்ற பெண்களுக்கான கடைசிப் புகலிடமாகவே பிரான்ஸில் பார்க்கப்பட்டது. பின் பல எழுத்தாளர்களின் தொடர் விளக்க முயற்சிக்குப் பின் அது குடும்பக் கட்டுப்பாட்டுக்கான வழிமுறை எனப் புரிந்துகொள்ளப்பட்டது.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அபார்ஷன், பெரும் தண்டனைக்குரியதாக அமைந்தது. இதனால் மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினர் மிக சிரமத்துக்கிடையே அதிக காசு செலவழித்து அபார்ஷன் செய்துகொண்டனர். ஏழை, எளியவர்களுக்கோ ஆபத்தான, சட்டத்துக்குப் புறம்பான கருக்கலைப்பு முறைகளே சாத்தியப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மன்ஹாட்டனில் ஒரு யூதப்பெண், நீராவிப் பானை மீது உட்கார்ந்து அபார்ஷன் செய்துகொண்டார். 1920களில் வேல்ஸிலிருந்த ஒரு பெண், தேவாலயங்களில் இருக்கும் மெழுகுவர்த்தியை தம் பிறப்புறுப்பில் பயன்படுத்தி அபார்ஷன் செய்து கொண்டார். கண்ணாடிக்கம்பி, பேனா ஹோல்டர், இரும்புச்சுருள், ஸ்பூன், கம்பு, கத்தி என பல வஸ்துகள் இப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 1930கள் வரையிலும் பிரசவத்தை விட கருக்கலைப்பே ஆபத்தானதாக இருந்தது.

1919ல் சோவியத் யூனியன் முதன்முதலாக கருக்கலைப்பை அங்கீகரித்தது. பின் ஐஸ்லாந்து, ஸ்வீடன் நாடுகளும் இப்பட்டியலில் இணைந்தன. 1967ல் இங்கிலாந்தில் நிறைவேறிய அபார்ஷன் சட்டத்தின்படி, இரு மருத்துவர்கள் ஒப்புக்கொண்டால் கருக்கலைப்பு செய்யலாம். ‘கர்ப்பமான முதல் ஆறு மாதங்களில் கருக்கலைப்பு செய்யலாம்’ என்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் 1973ல் அனுமதி அளித்தது.

1970களில் கர்மன் கன்னுலா என்ற பிளாஸ்டிக் கருவியைக் கருக்கலைப்புக்குப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். 1983ல் டாக்டர் ஜேம்ஸ் மக்மோகன் அறிமுகப்படுத்திய புதிய கருக்கலைப்பு முறையில், சிசுவின் மண்டை ஓட்டில் ஓட்டை போடப்பட்டு, பின் நசுக்கப்பட்டு, ஃபோர்செப்ஸ் கொண்டு வெளியெடுக்கப்படும். 1980ல் பிரான்ஸில் மிஃப்ப்ரொஸ்டோன் என்ற ஹார்மோன் சுரப்பைத் தடுக்கும் ரசாயனம், அபார்ஷன் செய்யப் பயன்பட்டது. 1990களில் வெற்றிட உறிஞ்சு முறைக்கு அமெரிக்க மருத்துவர்கள் மத்தியில் மறுபடி ஆர்வம் வந்தது. கையால் பயன்படுத்தும் வெற்றிட சிரிஞ்ச் ஒன்றை லெர்ரி எட்வர்ட்ஸ் உருவாக்கினார். பெண்ணுக்கு கர்ப்பம் என்ற உறுதிப்படுத்திய உடனே அவளுக்கு உடனடி கருக்கலைப்பு செய்வதற்காக இதை உருவாக்கினார்.

1994ல் இந்தியாவில் ஸ்கேன்களின் மூலம் சிசுவின் பாலினம் அறிந்து சொல்வது குற்றம் என சட்டம் கொண்டுவரப்பட்டது. பலர் இத்தொழில்நுட்பத்தைக் கொண்டு பெண் குழந்தைகளைக் கண்டுபிடித்து கருக்கலைப்பு செய்ததால்தான் இச்சட்டம். சீனாவிலும் இதே சட்டம் இதே காரணத்துக்காக இப்போது அமலில் உள்ளது.

போன மாதம் அயர்லாந்தில் 31 வயதுப் பெண் டாக்டர் சவிதா ஹலப்பனவார் 17 வார கர்ப்பமாக இருந்தபோது, கருச்சிதைவு ஏற்பட்டது. ‘கருக்கலைப்பு செய்தால்தான் அவர் உயிர் பிழைக்கலாம்’ என்ற நிலையில், அயர்லாந்து கத்தோலிக்க நாடு என்பதால் கருக்கலைப்பு செய்யாமல் டாக்டர்கள் இழுத்தடிக்க... அவர் உயிர் பிரிந்தது. இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியது.

ஓர் உயிரைக் காக்கும் காரணம் என்றால் மட்டும் கருக்கலைப்பை ஏற்கலாம் என்பதே நவீன உலகின் நிலைப்பாடு.               

Stats சவீதா

*  ஆண்டுதோறும் 2 கோடி பாதுகாப்பற்ற அபார்ஷன்கள் செய்யப்படுகின்றன.

*  90% பாதுகாப்பற்ற அபார்ஷன்கள் வளரும் நாடுகளில் செய்யப்படுகின்றன.

*  20% பேறுகால மரணங்கள் பாதுகாப்பற்ற அபார்ஷன்களால் நிகழ்கின்றன.

*  உலகில் மூன்றில் ஒரு அபார்ஷன் சட்டத்துக்குப் புறம்பானதாக நடக்கிறது.

அபார்ஷன்
சூல்கொண்டசெல்வி
வேல்கொண்டுகவ்வி
யோனிப்பூ அகழ்ந்து
சேய்த்தேன் உறிஞ்சி
தருமந்தட்டித்தள்ளி
கருமமே கண்ணாய்
கருக்கொலை செய்!
- கவிஞர் காத்துவாயன்