காற்றில் விழம் மரம்





ரோடு முழுக்க வெள்ளம் போய்க் கொண்டிருந்தது. பள்ளம் எது, மேடெது எனத் தெரியவில்லை. சித்தேரி உடைந்து ஊர் முழுக்க வெள்ளம். மழையும் விட்டபாடில்லை. ஜனங்கள் ஒருத்தர் ரெண்டு பேர் குடை பிடித்துக் கொண்டும், தலையில் துணி போட்டபடியும் போய்க் கொண்டிருந்தார்கள்.

நானும் மகேஸும் சைக்கிளில் டியூஷன் கிளம்பினோம். அவள் கிளம்பிவிட்டாள் என்று நானும், நான் கிளம்பிவிட்டேன் என அவளும் வீட்டில் சொல்லி, இரண்டு வீட்டிலும் திட்டு வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

‘‘ஊரே வெள்ளக்காடா இருக்கு. இதுல டியூஷன் போலன்னு யார் அழுதா? பொட்ட பசங்க சைக்கிள்ல விழுந்து எழுந்தா என்னத்துக்காகறது?’’
‘‘சரி வுடு. அவளுக்குப் படிப்பு முக்கியம். போறா...’’
‘‘வாத்யார் வூட்ல வேற ஒருத்தரும் வரப்போறதில்ல. அவரே இந்த மழையில ஏன் வந்தீங்கன்னு திட்டப் போறாரு!’’
‘‘இது ரெண்டுத்தயும் திட்ட மாட்டாரு. அவரு மூணு பொண்ணு வச்சிருக்கிறது தெரியாதா? இது ரெண்டுஞ் சேர்ந்து அஞ்சு. பொட்டப் பசங்கன்னா அவ்ளோ பாசம்.’’
‘‘மழ கூட பேய்ஞ்சா, சாரு வூட்லயே இருங்க. சாயங்காலமா நான் வந்து கூட்டார்றேன்.’’
மழை மட்டும் பெய்தால் சைக்கிள் ஈஸியாக ஓட்டலாம். காத்தும் சேர்ந்துக்கிட்டால் சைக்கிள் மிதிக்கவே முடியாது. எதிர் காற்றடித்தால், சுத்தமாக கண் தெரியாது. முகம் முழுவதையும் மழை நீர் மறைக்கும். சட்டை உடம்போடு ஒட்டிக் கொள்ளும். சட்டையை முன்னுக்கு இழுத்துவிட நிரந்தரமாக ஒரு கை வேலை பார்க்கும். இன்னொரு கை ஹாண்டில்பாரைப் பிடிக்க முடியாமல் தடுமாறும்.
நாங்கள் இருவரும் தடுமாறினோம். பெடல் போட முடியவில்லை. சட்டையை முன்னுக்கு இழுத்துவிடும்போது, காற்று பின்னுக்கு தள்ளியது. தலையிலிருந்து வழிந்த தண்ணீர் கண்ணை மறைத்து மூக்கில் விழுந்து, வாய்க்குள் வந்தது. கால் வேகமாய் பெடல் போட்டாலும், சைக்கிள் மழைக்குள் திணறியது.
‘‘இப்பல்லாம் பொட்ட பசங்க மழ ஊத்துனாக்கூட வூட்ல கீதா பாரேன்.’’
‘‘யாரு பசங்கம்மா கண்ணு? இந்த மழயில எங்கம்மா போறீங்க? வானம் வேற இடிக்குது...’’
யாரோ கூப்பிடுவது கேட்டு சைக்கிள் தடுமாறியது. இடி இடிப்பது பயமாய் இருந்தது. குளிரில் கை நடுங்கியது. ஹாண்டில்பாரைப் பிடிக்க முடியாமல், கை விறைத்தது. மகேஸ் வண்டியின் பிரேக் பிடிக்குள், என் சைக்கிள் ஹாண்டில்பார் மாட்டியது.
‘‘அய்யோ, புடிடீ... வுழப்போறோம் இப்ப!’’
‘‘வெரலு மாட்டிக்கிடுச்சிடீ, நீ முன்னாடி ஓட்டு!’’

ஒன்றுக்குள் ஒன்று மாட்டி, இரண்டு சைக்கிள்களும் தடுமாறின. இரண்டு பேரின் கால்களும் உரசின.
‘‘ஏய், இங்க ஒரு பள்ளம் வருமேடீ...’’
சொல்லி முடிப்பதுற்குள் பள்ளத்திற்குள் சைக்கிள் விழுந்தது. கணக்குப் புத்தகம் போட்டு வைத்திருந்த மைக்கா பை தூரப்போய் விழுந்தது.
‘‘புக்கு தண்ணியில விழுந்துடுச்சிப்பா, எடு, எடு’’
‘‘அய்யோ எங் காலு சைக்கிளுக்கடியில இருக்குடி, இழுக்க முடியல, ஒன் சைக்கிள தூக்கு!’’
யார் யாரோ தூக்கிவிட ஓடி வந்தார்கள்.
‘‘ஊர்ப்பட்ட மழப் பேயுது. எங்கம்மா போறீங்க சைக்கிள எடுத்துக்கிட்டு?’’
‘‘பொட்டப் பசங்க, படாத இடத்துல பட்டா என்னத்துக்காகும்?’’
‘‘பாத்துப்பா, கால எடுத்து வுட்டுட்டு, சைக்கிள அப்புறமா தூக்குங்க’’
முட்டி தேய்ந்து ரத்தம் வந்தது. சீட்டிப் பாவாடை. அந்த இடமே நைந்து போயிருந்தது. நிற்கவே முடியவில்லை. பயத்திலும் குளிரிலும் கை, கால் நடுங்கியது. வேகமாகப் புத்தகப் பையை நோக்கித் தாவிப் போனேன். சின்ன மைக்கா பைக்குள்ளே போட்டுத்தான், மேலே ஒரு மைக்காப் பையை போட்டிருந்தேன். நல்லவேளை நனையவில்லை. முள்ளங்கி பாய் என் சைக்கிளைப் பிடித்திருந்தார். நகர்ந்து போய் அவரிடமிருந்து சைக்கிளை வாங்கினேன்.
‘‘மகேஸு, போலாம் வா!’’
‘‘கொஞ்ச நேரம் ஒக்காந்துட்டு, மழ விட்ட பொறவு போங்கம்மா.’’
அப்பாவுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருப்பார்கள் என்ற ஞாபகம் விரட்டியது. நாளை, மறுநாள் அப்பா இந்தப் பக்கம் வரும்போது கட்டாயம் கூப்பிட்டுச் சொல்வார்கள். அப்பா வீட்டில் வந்து சொன்னவுடன், அம்மா மறுபடியும் திட்ட ஆரம்பிக்கும்.

காலை தத்தித் தத்தி, பார் கம்பியில் இடிக்காமல் தூக்கிப் போட்டு, சீட்டில் உட்காராமல் ஏறி மிதித்தேன். திரும்பிப் பார்த்தேன். மகேஸு இன்னும் அந்த இடத்திலிருந்து கிளம்பவில்லை.
‘‘சீக்கிரம் வாடீ...’’
மகேஸும் குரங்கு மிதி மிதித்து வேகமாக என்னருகில் வந்தாள்.
‘‘பிருந்தா, வூட்டுக்குப் போயிரலாமா? நெறய மழப் பேயுதுப்பா. பயமா கீது!’’
‘‘இப்ப திரும்பிப் போனா இன்னும் திட்டுவாங்க. சார் வீட்டுக்குப் போயிரலாம் வா. அப்புறம், மழ வுட்டப் பொறவு வூட்டுக்கு வரலாம்.’’
‘‘இந்நேரம் டியூஷனே முடிஞ்சி போயிருக்கும். சார் உள்ள போயிட்டிருப்பாங்க. நாம மட்டும் வெளிய ஒக்காந்துக்கிட்டு இருக்கணும்.’’
‘‘பரவாயில்ல... வேகமா ஓட்டு’’
‘‘சனியன், சட்ட வேற ஒட்டிக்கிது. அத இழுத்துவுடத்தான் சரியா கீது!’’
மழை வலுத்தது.

சார் வீட்டு வாசலில் சைக்கிளை நிறுத்தும்போது பாதி டயர் தண்ணீருக்குள் நின்றது. ஸ்டேண்ட் போட முடியவில்லை. தட்டுத் தடுமாறி சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே ஓடினோம். கதவைத் தட்டினால் டீச்சர் திட்டுவார்கள். ‘கூப்பிடணும், வந்து தொறக்கிற வரைக்கும் பேசாம நிக்கணும்’. பயந்து கொண்டே உள்ளே ஓடினோம்.
‘‘ஏய் பசங்களா, இந்த மழயிலா வந்தீங்க, தொப்பக்கட்டயா நனஞ்சி போய்? ஓடியாங்க, உள்ள ஓடியாங்க.’’
ஜன்னல் பக்கமிருந்து சார் கூப்பிட்டவுடன் உயிர் வந்த மாதிரி இருந்தது. லேசாக அழுகை வந்தது. சார் எப்பொழுதுமே வெளியில் இருந்தது இல்லை. டியூஷன் பிள்ளைகள் எல்லாரும் வந்துவிட்டோம் என சாரின் கடைசி மகள் போய் டீச்சரிடம் சொல்வாள். டீச்சர், சார் இருக்கும் கடைசி ரூமுக்குள் போய் சொல்லிவிட்டு வருவார். ஐந்து நிமிடங்கள் கழித்தே சார் வருவார்.
மஞ்சள் கலர் ஸ்பாஞ்ச் துணியால் கண்ணாடியைத் துடைத்தபடி வருவார். சாரின் கண்கள் மிகச் சிறியவை. கண்ணாடி இல்லாத கண் சுருங்கிப் போய், வெளியே தெரியாது. உள்ளிருந்து வெளியில் வரும்போது மட்டுமே கண்ணாடி இல்லாமல் சாரைப் பார்த்திருக்கிறோம்.
இன்று சார் வராண்டாவில் உட்கார்ந்திருந்தார். நாங்கள் நனைந்து வருவதைப் பார்த்தவுடன் அவரே கதவைத் திறந்து விட்டார்.
‘‘கழுதைங்களா, இந்த மழயிலா கௌம்பி வர்றது. ஒங்கப்பன் எப்டி அனுப்புனான். இந்தா துண்டு, தலய தொடைங்க மொதல்ல.’’
டியூஷன் நேரம் தவிர, சார் ஒரு  நிமிடம்கூட எங்கள் முன் நிற்கமாட்டார். கணக்கோ, இங்கிலீஷோ, அன்றைக்குப் பாடத்தை நடத்தி முடித்தவுடன் உள்ளே போய்விடுவார். அவர் உள்ளே போவதற்குக் காத்திருந்த மாதிரி டீச்சர் வருவாங்க. சார் படிப்பைத் தவிர வேறெதையும் பேச மாட்டார். டீச்சர், படிப்பைப் பற்றி பேசவே மாட்டாங்க.
‘‘ஒங்கக்கா பிரசவத்துக்கு வந்துட்டாளாடீ?’’
‘‘ஏன்டா, நேத்து சாம்பார் கேட்டு அனுப்புனா ஒந்தம்பி தீந்துபோச்சுன்னு அனுப்பிட்டான். அவ்ளோ வியாபாரமாடா ஓட்டல்ல?’’
‘‘இன்னும் பீஸு கொடுக்கல நீ. 25 ரூபா பீஸுக்கு நாலு வாட்டி கேட்கணும். மத்த வாத்யார்லாம் ஒரு சப்ஜக்ட்டுக்கு 50 ரூபா பீஸு வாங்கறாங்க தெரியுமா?’’
‘‘ஒங்க வூட்லயா ராத்திரி தெனமும் ரசம் வப்பாங்க? படிக்கற பசங்க ரசஞ் சோறு சாப்ட்டுட்டு எப்டி படிக்கிறது?’
‘‘இந்தப் பாவாடய இனிமே போடாத. முட்டிக்கி மேல ஏறிக்கிச்சி பாரு!’’
‘‘பாய்ஸ் ஸ்கூல்ல வேற பசங்க யாரும் டியூஷன் வர்றேன்னு சொல்லலயாடா?’’
டீச்சர் ஒரே கேள்வியை தினம் கேட்பாங்க. ஆனால், சார் ஒரு வார்த்தைகூட பேச மாட்டார். பாடம் நடத்த வருவார். நடத்துவார். உள்ளே போவார். பள்ளிக் கூடத்திலேயும் அவர் பக்கத்தில் கூட யாரும் போக மாட்டார்கள். கிரவுண்ட்ல அவர் வந்து நின்னாப் போதும்... பசங்க எல்லாம் பறந்து போயிடும். சார், யாரிடமும் டியூஷன் பீஸ் கேட்க மாட்டார். வந்து கேட்கிறர்களுக்கு எவ்வளவுன்னு கூட சொல்லமாட்டார். சைகையிலேயே உள்ளே கை காட்டுவார். அவர் ஓர் ஆளை டியூஷனுக்குச் சேர்த்துக் கொண்டால், கட்டாயம் பாஸாயிடுவாங்க. அதனால சுமாரா படிக்கிற பசங்க, தேறவே தேறாதுன்ற பசங்க எல்லாம் சாரிடம்தான் வருவாங்க. லீவு நாட்களில் செட் செட்டா டியூஷன் நடக்கும்.

நாங்கள் நல்லா படிக்கிற செட். காலையில் முதல் டியூஷன் எங்களுக்குத்தான். எங்ககூட நிறைய நேரம் இருப்பார். நாங்கள் ஹாலில் உட்காருவோம். சுமாரா படிக்கிற பசங்க வராண்டாவில். அவர்களுக்குத் திரும்ப திரும்ப டெஸ்ட்தான். சாரின் பெரிய பொண்ணு, ‘விமலா அக்கா’தான் அவர்களைப் பார்த்துக் கொள்ளும். சில நேரங்களில் சாராக மாறி காதைத் திருகும். ஸ்கேலால் உள்ளங்கையில் அடிக்கும். மனப்பாடப் பாட்டு எழுதும்போது கமா, கொட்டேஷன் போடவில்லையென்றால் ‘டங்’ன்னு மண்டையில் கொட்டுகிற சத்தம் கேட்கும்.
மைக்கா பையை பிரித்து, கணக்குப் புத்தகத்தைத் தட்டி விட்டு தனியே எடுத்தார். பையை உதறி, படிக்கட்டு மேல் வைத்தார்... ஹால் ஈரமாகாமல்.
‘‘பரவாயில்ல, புக் நனையல, நீங்க ரெண்டு பேரும் நனஞ்ச கோழியா வந்திருக்கீங்க.’’
‘‘டீச்சரு எல்லாம் ஊருக்குப் போயிக்கிறாங்க. காலயிலேயே வர்றன்னாங்க. மழயால இன்னும் காணும்’’
‘‘சாப்டீங்களா, இல்லயா? சரி, உள்ள வாங்க’’
சார் சுடு தண்ணீர் கேட்டால் மட்டும் உள்ளே போய் வாங்கி வருவோம். சார் சத்தமில்லாமல் பேசுவார். அவர் கூப்பிட்டு உள்ளே இருக்கிற டீச்சருக்குக் கேட்கவில்லையென்றால், நாங்கள் யாராவது உள்ளே போய் கூப்பிடுவோம். எந்த நேரம் போனாலும் லேசாக இருட்டாக இருக்கும். நடு வாசலைச் சுற்றி எங்கள் வீடு இருப்பதால், ராத்திரியில் கூட நிலா, பகல் மாதிரி ரூமுக்குள் காயும்.  அதனால் எனக்கு சார் வீடு பார்த்தால் ஒரு மாதிரி இருக்கும். மட்ட மதியத்தில் லைட்டு போட்டுக் கொள்வார்கள்.

சார் எங்களுக்கு டியூஷன் நடத்தும் ஹால் தாண்டி, உள் ஹாலுக்குப் போனால். டேபிள் மேல் பிஸ்கெட் டப்பா இருந்தது. திறந்து என்னிடம் இரண்டு கொடுத்தார். மகேஸிடம் இரண்டு கொடுத்தார். பிஸ்கெட்டில் ஏலக்காய் வாசனை வந்தது. சார் வீட்டு டீ இஞ்சி வாசனை வரும். டியூசனுக்கு நடுவில் டம்பளருக்குள் மூடுகிற மாதிரி சின்னத்தட்டுப் போட்டு டீச்சர் டீ தருவாங்க. சார் நடத்திக்கிட்டு இருக்கிறதை முடித்துவிட்டு குடிக்க எடுப்பார். தட்டைத் திறந்தவுடன் லேசாக இஞ்சி வாசனை வரும். அந்நேரம் டீ குடிக்க ஆசையாக வரும்.
‘‘மழைக்கு டீ குடிக்கலாமா? ரெண்டு பேர்ல யாரு டீ போடுவீங்க? நானும் டீச்சர் இல்லாததால டீ குடிக்கல.’’
‘‘மகேஸு போடுவா சார்.’’
‘‘எனக்கு ஸ்டவ்வு பத்த வைக்கத் தெரியாது சார்’’ என்றாள் மகேஸ்.
‘‘வா, நான் சொல்றேன்.’’
சார் ஸ்டவ் பற்ற வைத்துக் கொடுத்துவிட்டு வெளியே சென்றார்.

‘டீத்தூளே டீச்சர் வூட்ல வாசனையா இருக்குடீ. மோந்து பாரேன்’’
‘‘வாணாம்பா, சாரு வந்துடப் போறாரு. சீக்கிரம் எறக்கு!’’
‘‘எங்கூட்ல ஏழு பேருக்குக் கணக்காப் போடுவேன். இப்ப மூணு பேருக்கு எவ்ளோ சக்கர போடறதுன்னு தெரியல...’’
‘‘பாதி போடு, பாத்துக்கலாம்!’’    
‘‘ஒரு டீய ரெண்டு பேருமா போட்றீங்க? பிருந்தா இங்க வா!’’
பிஸ்கெட் கொடுத்த இடத்தில் சார் இல்லை. சுற்றுமுற்றும் பார்த்தேன். குரல் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. யோசித்தபடி நின்றேன்.
‘‘ரூமுக்குள்ள வா!’’
இருட்டில் ரூம் கதவே தெரியவில்லை. போகலாமா? சார்தானே..! இருட்டைப் பற்றி பயப்படாமல் சார் இருக்கும் தைரியத்தில் லேசாகக் கதவைத் திறந்தேன். பாதி திறந்த கதவின் வழியே, சார் வேகமாக என் கையைப் பிடித்திழுத்தார். கதவில் கை இடித்தது.
கதவு மறைவில் நின்றிருந்த சார், வேகமாக இழுத்துக் கட்டிப்பிடித்தார்.
‘‘தல தொடச்சி விடட்டா?’’
தலைமுடியைப் பிடித்து பின்னுக்குச் சாய்த்து, உதட்டைப் பிடித்துக் கடித்தார். கை, கால் நடுங்கியது. மூச்சுத் திணறியது. நெஞ்சிலும், தோளிலும் வேகமாகக் கடித்தார். ‘‘ஒனக்கு மட்டும் இந்த ரூமுக்குள்ள டியூஷன் வச்சுக்கலாமா?’’ என்றார்.

நெஞ்சடைத்து திமிறினேன். கையை வைத்துத் தள்ளிவிட பயமாய் இருந்தது. சார் ஏன் இப்படி பண்ணணும்? எங்க இரண்டு பேரையும் நாலாவது, ஐந்தாவது பொண்ணுங்க என்பாரே? விமலா அக்காவுக்கும் இப்படி உதட்டைக் கடித்து முத்தம் குடுப்பாரா?
‘‘மகேஸு டீ போட்டுட்டியா?’’
‘‘இந்தா வடிகட்றன் சார்!’’
‘‘போய் துண்டு எடுத்து தலை துவட்டிக்கோ’’ கலைந்த தலையை சரி செய்தார்.
‘‘நாளக்கிக் காலயில டியூஷன் வர்ணும், சரியா? டீச்சர் வந்தா ஒண்ணும் சொல்லக்கூடாது...’’
இருள் கிடந்த வராண்டாவை ஓடிக் கடந்தேன்.
மகேஸு டீ வடிகட்டிக் கொண்டிருந்தாள்.
‘‘எங்கடீ போயிட்ட?’’ என்றபடி டம்ளரக் கழுவினாள்.
எனக்குப் பேசவே வாய் வரவில்லை. மூச்சடைப்பது போல இருந்தது.
‘‘என்னடி செய்றீங்க அடுப்பங்கரையில?’’
சமையலறை வாசலில் டீச்சர் நனைந்தபடி நின்றிருந்தார்.