பாத்திரங்களும் பாத்திரங்களும்





‘‘எப்போதும் ஒரு படைப்புதான் பேசப்படணும். அதைப் படைக்கிறவனைப் பத்திப் பேச எதுவுமில்லை. மற்ற எல்லாரையும் போல அவனும் வாழ்ந்து முடிஞ்சு போற ஜீவன். ஆனா படைப்புக்கு அழிவில்லை. உணர்வுக்கு விரோதமில்லாம உருவாக்கப்பட்ட எந்தப் படைப்பும் காலக் கரையானால் அரிக்கப்படாம நீடிச்சு நிற்கும்...’’

- வார்த்தைகளுக்கு வலிக்காமல் மென்மையான அழகுதமிழ் பேசுகிறார் ந.ஜயபாஸ்கரன். சிந்தனைச் சுழிப்பும், பூடகமுமாக, வழமையான கருத்தமைவுகளை ஊடறுக்கும் கவித்தன்மை குலையாத எழுத்து ஜயபாஸ்கரனுடையது. மௌனமும், தனிமையும் ஊடாடும் இவரது கவிதைகள் சொற்பமே என்றாலும் தமிழின் ஆகிருதியான நவீன கவிதை இலக்கியத்தின் வேராக விரவி நிற்கின்றன. ‘அர்த்தநாரி அவன் அவள்’ என்ற கவிதைத்தொகுப்பின் வழியாக பெரிதும் கவனம்பெற்ற இந்தப் படைப்பாளி, மதுரை நகரின் வெங்கலக்கடைத் தெருவில் பாத்திரக்கடை வைத்திருக்கிறார்.

‘‘இதுவரைக்கும் யாரும் செய்யாத எதையும் நான் செஞ்சிடலே. மொழியார்வம் பொங்கித் ததும்பின ஒரு காலகட்டத்துல பிறந்து, விருப்பத்தைக் குலைக்காம வாழ அனுமதிக்கிற ஒரு குடும்பத்துல வளர்ந்து, அற்புதமான ஆசிரியர்கள்கிட்ட படிச்ச எல்லோரும் செய்யக்கூடிய ஒண்ணையே நானும் செஞ்சிருக்கேன். பாத்திரம் விக்கிறதுக்காக எல்லோரும் என்னை பாராட்டணும்னு நினைக்கிறது எப்படி அபத்தமோ, அதைப் போலவே நான் கவிதை எழுதுறதுக்காக என்னைப் பாராட்டணும்னு நினைக்கிறதும்!

அப்பாவுக்குப் பூர்வீகம் அவினாசி. நாங்க பிறக்குறதுக்கு முன்னாடியே மதுரைக்கு வந்துட்டாங்க. பாத்திரத்தொழில்தான் பாரம்பரியம். அப்பா ரொம்ப நேர்த்தியான மனிதர். பிள்ளைகள் மேல எந்த முடிவையும் திணிக்காதவர். எந்த வேலையையும் திருத்தமா பண்ணுவார். அண்மையில அவர் எழுதின பழைய பேரேடுகளை எடுத்துப் பாத்தேன். சின்ன அடித்தல், திருத்தல் கூட இல்லாம முத்துப் பதித்தது போல எழுதியிருக்கார். அந்த ஒழுங்குதான் இன்னைக்கு எங்க வாழ்க்கையை வழிநடத்துது.

அம்மாவுக்கு இப்போ 90 வயது. இன்னைக்கு வரைக்கும் அவங்க வேலையை அவங்களே பாத்துக்கிறாங்க. நிறைய படிப்பாங்க. இப்பவும் ‘காலச்சுவடு’ல இருந்து ‘கலைமகள்’ வரைக்கும் எல்லாப் பத்திரிகைகளையும் கண்ணாடி கூட இல்லாம வாசிக்கிறாங்க. அவங்க மூலமாவே எங்களுக்கு வாசிப்புப்பழக்கம் வந்திருக்கணும்.



நான் ஒரு தனிமை விரும்பி. வாசிப்பும் எழுத்தும்தான் என் தனிமைக்குத் துணை. பள்ளிக்கூடக் காலங்கள்லயே எழுதத் தொடங்கிட்டேன். சிறுவர்களுக்காக வந்துக்கிட்டிருந்த ‘கண்ணன்’ இதழ்ல என் கவிதைகள் பிரசுரமாகியிருக்கு. சென்னை விவேகானந்தா கல்லூரியில பியூசி படிக்கும்போது, ஐயா வை.மு.கோ எனக்கு ஆசிரியர். எழுத்தில எனக்கு உத்வேகத்தை உருவாக்கினவங்கள்ல அய்யாவும் முக்கியமானவர். அண்ணன் எஞ்சினியருக்குப் படிச்சார். என்னை டாக்டராக்கணும்னு அப்பாவுக்கு ஆசை. பியூசி முடிச்சுட்டு அதே கல்லூரியில தாவரவியல் சேந்தேன். ஆனா, அந்தப் படிப்பு என் இயல்புக்கு சரியா வரலே. டிஸ்கன்டினியூ பண்ணிட்டு மதுரை தியாகராஜர் கல்லூரியில தமிழ் இலக்கியம் சேந்துட்டேன். அப்பா என்னோட முடிவை ஒரு புன்சிரிப்போட சகிச்சுக்கிட்டார்.
கல்லூரி நூலகத்துல ‘எழுத்து’ பத்திரிகை கிடைச்சுச்சு. பரந்துபட்ட எழுத்துலகம் அறிமுகமாச்சு. ‘மௌனம்’ங்கிற தலைப்புல நான் எழுதின முதல் கவிதை ‘எழுத்து’ல வெளிவந்துச்சு. தொடர்ச்சியா எழுதுற ஆர்வம் அதிகமாச்சு. அவ்வை துரைசாமி பிள்ளை, அவ்வை நடராஜன், கண.சிற்சபேசன், தமிழண்ணல், சுப.அண்ணாமலை மாதிரி தமிழில் ஆழங்கால்பட்ட பெரியவர்கள் எனக்கு பேராசிரியர்களா கிடைச்சதும் பெரிய வாய்ப்பு.    

கல்லூரி நேரம் போக, மற்ற நேரங்கள்ல பாத்திரக்கடைதான். பேரேடுகள் எழுத, வியாபாரம் பார்க்க, அப்பாவுக்கு உதவி செய்வேன். எம்.ஏ முடிச்சபிறகு, தியாகராஜர் கல்லூரியிலயே டியூட்டர் வேலை கிடைச்சுச்சு. ஒரு வருடம் வேலை செஞ்சேன். இடையில அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு. யாராவது ஒருத்தர் கடை நிர்வாகத்தைக் கவனிக்கணும்ங்கிற நிலை வந்தப்போ, கல்லூரி வேலையை விட்டுட்டு பாத்திரக்கடைக்கு வந்துட்டேன்..

எஸ்.ராமகிருஷ்ணன் உலக இலக்கியங்கள்ல ஆழங்கால் பட்டவர். வாரா வாரம், சனி, ஞாயிறுகள்ல உலக இலக்கியங்கள் பற்றி வகுப்பெடுத்தார். என் சகோதரியோட கணவர் ராஜரத்தினம் அந்த வகுப்பைப் பற்றிச் சொன்னார். நானும் போனேன். அங்கதான் ஏராளமான மேலைநாட்டுப் படைப்பாளிகள் அறிமுகமானாங்க. அதில் என்னைப் பெரிதும் பாதித்த படைப்பாளி எமிலி டிக்கின்ஸன். காரணம், என்னோட இயல்பும், எமிலியோட இயல்பும் ஒண்ணுதான். தனிமையும், மௌனமுமே அவளோட மொழி. 56 வருடங்கள் வாழ்ந்த எமிலி 1565 கவிதைகள் எழுதியிருக்கா. பிரசுரமானவை ஐந்தோ, ஆறோ மட்டும்தான். எதனோடும் ஒட்டி வாழ விரும்பாத அந்தப் பெண்னோட படைப்புகள் இன்னைக்கு உலக இலக்கியங்களில் முதன்மை வரிசையில இருக்கு. பிரதியை உருவாக்கினவனை விட பிரதியே பிரதானமானதுங்கிற முடிவுக்கு வர எமிலிதான் ஆதாரம். அதுக்குப்பிறகு நான் எமிலியோட பாதையிலேயே நடக்கத் தொடங்குனேன். எழுத்து, தீபம், கணையாழி பத்திரிகைகள்ல தொடர்ந்து என் படைப்புகள் வந்துச்சு.

கலாப்ரியா போன்ற என் சககாலத்துப் படைப்பாளிகள் குறைந்த காலத்திலேயே மிக எளிதா அவங்களுக்கான வடிவத்தை அடைஞ்சுட்டாங்க. ஆனா எனக்கு அப்படியொரு வடிவம் கிடைக்க ரொம்ப காலமாச்சு. என் தனிமை ஒரு காரணமா இருக்கலாம்.

இப்போ எனக்கு 63 வயசு. எழுத்து பற்றி எந்தத் திட்டமும் வச்சுக்கிறதில்லை. அதுக்காக நேரம் ஒதுக்கி சிந்திக்கறதும் இல்லை. பேரேடுகள்ல பற்று வரவு எழுதுறபோது, திடீர்னு ஒரு கவிதை தோணும். ஒரு காகிதத்துல எழுதிக்குவேன். பொதுவா வியாபாரிக்கு சொல்லுல கவனம் இருக்கணும். கவிதைக்கும் சொல்தான் பிரதானம். நான் வியாபாரியா இருக்கிறது கவிதை எழுதவும் வசதியா இருக்கு.    

பாத்திர வியாபாரம் பாரம்பரியத்தோட தொடர்புடைய தொழில். இன்னைக்கு தொழிலோட செய்நேர்த்தி குறைஞ்சு போச்சு. நிலக்கோட்டை அங்கணப் பத்தர்னு ஒருத்தர். அவ்வளவு திருத்தமா மாடவிளக்கு செய்வார். அவர் இறந்தபிறகு அந்த விளக்கே வழக்கொழிஞ்சு போச்சு. மானாமதுரை சுப்பிரமணிய ஆசாரி, அரியக்குடி வேலு ஆசாரி செய்யிற வெங்கலப்படி அவ்வளவு அற்புதமா இருக்கும். அவங்களுக்குப் பிறகு எடுத்துச் செய்ய ஆளில்லாம படியே இல்லாமப் போச்சு. சில நேரங்கள்ல தொழிலுக்கும் எனக்கும் சின்னதா ஒரு பொருந்தாமை தோன்றும். நொடிப்பொழுதுல அதிலிருந்து வெளியில வந்துடுவேன்.  

எனக்குத் தெரியும்... இதுவரைக்கும் நான் பெரிசா எதுவும் எழுதலே. ஆனா, என் உணர்வுக்கு நான் உண்மையா இருக்கேன். நான் வாழ்ந்து பாக்காத, உணர்ந்து பாக்காத எதையும் நான் சொல்லமாட்டேன். அவ்வளவுதான்..!’’
படங்கள்: ஜி.டி.மணி