எம்.ஜி.ஆர் கூட இருந்ததே பெரிய சொத்து!







இன்றைக்கும் சினிமா ரசிகர்கள் மந்திரமாக உச்சரிக்கும் மூன்றெழுத்து, எம்.ஜி.ஆர். டிசம்பர் 24 அன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, எம்.ஜி.ஆருடன் சினிமாவிலும் அரசியல் வாழ்விலும் கூடவே பயணித்த ராமகிருஷ்ணனை சந்தித்தோம். எம்.ஜி.ஆர் இரட்டை வேடமிட்ட படங்களில் டூப் எம்.ஜி.ஆராக நடித்த ராமகிருஷ்ணன், அவர் முதல்வரான பிறகும் பாதுகாவலராக அருகில் இருந்தவர்.

‘‘1945ல இருந்து எம்.ஜி.ஆரை எனக்குத் தெரியும். அப்போ நான் சௌகார்பேட்டையில பால் கடையில் வேலை செய்துகிட்டிருந்தேன். சைனா பஜார்ல எம்.ஜி.ஆர் குடும்பத்தோட தங்கி, சின்னச் சின்ன வேஷத்துல நடிச்சிட்டிருந்தார். பால்கடைக்கு வரும்போது பழக்கமானார். ஒரு பொங்கல் அன்னிக்கு அவர் வீட்டுக்குப் போயிருக்கேன். அவங்க அம்மாவைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். எம்.ஜி.ஆரை விட நல்ல சிவப்பு சத்யா அம்மா. எனக்கு பொங்கல் கொடுத்து உபசரிச்சு, கையில நாலணா கொடுத்து அனுப்பி வச்சாங்க.

1949ல் பி.யூ.சின்னப்பா நடித்த ‘மங்கையர்க்கரசி’ படத்துல பயில்வானா நடிக்கப் போயிருந்தேன். சின்னப்பாவை பார்க்க எம்.ஜி.ஆர் வந்திருந்தார். சின்னப்பா என் பக்கம் திரும்பி, ‘இவரை நல்லா பழக்கம் புடிச்சி வச்சுக்கோ... பின்னால பெரிய ஹீரோவா வருவாரு’ன்னு எம்.ஜி.ஆரைக் காட்டி சொன்னார். அவர் சொன்ன மாதிரியே எம்.ஜி.ஆர் பெரிய ஹீரோவான பிறகு, அவர் படங்கள்ல ஸ்டன்ட் நடிகரா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ‘சிரித்து வாழவேண்டும்’, ‘ஆசை முகம்’, ‘நினைத்ததை முடிப்பவன்’, ‘நீரும் நெருப்பும்’னு சில இரட்டை வேடப் படங்கள்ல முகம் காட்டாத எம்.ஜி.ஆராவும் என்னை நடிக்க வச்சார். அவரோட கடைசி படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரை அவருக்காக டூப் போட்டு நடிச்சிருக்கேன். ‘நினைத்ததை முடிப்பவன்’ படம் க்ளைமாக்ஸ்ல ரெண்டு எம்.ஜி.ஆரும் கத்தி சண்டை போடுற சீன்ல இன்னொரு எம்.ஜி.ஆரா அவர்கூட கத்திச் சண்டை போட்டேன். கத்திச் சண்டையில உடம்பை ரோலிங் செய்யிறது ரொம்ப சிரமம். எம்.ஜி.ஆர் அதில் கில்லாடி. நானும் அப்படிச் செய்ததைப் பார்த்துட்டு ஸ்பாட்லயே ஆயிரம் ரூபாய் கொடுத்துப் பாராட்டினார்’’ என்ற ராமகிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் உணவுப் பழக்கங்களை பட்டியலிட்டார்.

‘‘தலைவர் தங்க பஸ்பம் சாப்பிடுவார்னு சொல்றதெல்லாம் சுத்த பொய். தங்கம் மாதிரி ஜொலிக்கிறவருக்கு தங்க பஸ்பம் எதுக்கு? அதே போல ஆப்பிள் பழத்துல போதை மருத்து கலந்து சாப்பிடுவார்னும் சொல்வாங்க. அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. கேரளாவிலிருந்து நங்கி கருவாடை வரவழைச்சு, அதை வறுத்துப் பொடியாக்கி சோத்துல பிசைஞ்சு சாப்பிடுவார். அதுல அவருக்கு அலாதி பிரியம். அப்புறம், மத்தி மீன் சாப்பிடுவார். காலையிலேயே இட்லிக்கு கோழி குருமா வச்சு சாப்பிடுவார். மதியத்துக்கும் கறிக் குழம்புதான். முருங்கை கீரையை ப்ரியமா சாப்பிடுவார். அடிக்கடி கோதுமை பாயசம் செய்து தரச் சொல்லி குடிப்பார்.



வாய்க்கு ருசியா தான் மட்டும் சாப்பிடுற ஆளு இல்லை அவர். அரசியலுக்கு வந்த பிறகு, ராமாவரம் தோட்டத்துல மனு கொடுக்க வர்றவங்களைக் கூட வெறும் வயித்தோட அனுப்ப மாட்டார். அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி சந்தோஷப்படுறதுல தலைவர் ஒரு தனிப்பிறவி.

என்.டி.ஆர் கட்சி ஆரம்பிக்கும்போது முதல்ல ‘தெலுங்கு ராஜ்ஜியம்’னு கட்சிக்குக் பெயர் வச்சார். தலைவர்தான் ‘தெலுங்கு தேசம்’னு மாத்தச் சொன்னார். அவர் சொன்னபடியே செய்த என்.டி.ஆர், ஆட்சியைப் பிடிச்சு முதல்ல தலைவரைத்தான் பார்த்துட்டுப் போனார். அப்போ கர்நாடக முதல்வரா இருந்த குண்டுராவுக்கும் தலைவர் மேல ரொம்பப் பாசம். அவரோட பிறந்தநாளுக்கு ஒரு தடவை தலைவரைக் கூப்பிட்டு விருந்து வச்சார். பெங்களூர்ல இருந்து திரும்பி வந்துக்கிட்டிருந்தப்போ, வெயில்ல செருப்பில்லாம் நடந்து போன ஒரு பாட்டிக்கு ஜானகி அம்மாளோட செருப்பைக் கழட்டிக் கொடுத்த வள்ளல்தான் எம்.ஜி.ஆர்.

1979ல ஒரு தடவை காமராஜர் பிறந்த நாள் விழாவுல கலந்துக்கறதுக்காக தலைவர் போய்க்கிட்டிருந்தார். ராணி சீதை ஹால் கிட்ட கார் போகும்போது ரோட்டுல ஒருத்தர் காக்கா வலிப்பால துடிக்கிறதைப் பார்த்துட்டு காரை நிறுத்தச் சொன்னவர், அந்த ஆளை போலீஸ் வண்டியிலயே ஏத்தி ஹாஸ்பிடல் கொண்டு போகச் சொன்னார். சினிமால எப்படி ஹீரோவா ஓடிப் போய் உதவி செய்வாரோ, அதே மாதிரி நிஜ வாழ்க்கையிலும் கடைசிவரை ஹீரோவா இருந்தவர் தலைவர்.

தலைவர் கூட இருந்தவங்க எல்லாம் இப்ப எங்கயோ இருக்காங்க. ‘எம்.ஜி.ஆர் கூட இருந்துட்டு நீங்க மட்டும் ஏன் கஷ்டப்படுறீங்க’ன்னு என்னைப் பார்க்க வர்றவங்கல்லாம் கேப்பாங்க. அவர் கூட இருந்ததையே பெரிய சொத்தா நினைச்சதால அப்போ எனக்கு எதையும் கேட்க தோணல. ஆனா, கேட்டிருக்கலாமோன்னு இப்போ தோணுது’’ என்று ஐந்துக்கு எட்டு அடி அறையில் அமர்ந்தபடி கலங்கும் ராமகிருஷ்ணனை எம்.ஜி.ஆரின் ஆத்மாவும் பார்த்துக்கொண்டுதானே இருக்கும்!
- அமலன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்