கேள்வி





இதோ மேடையில் நிற்கிறாரே சுதாகர்... இவர் ஒரு அஷ்டாவதானி. அதாவது, ஒரே நேரத்தில் நீங்கள் எட்டு விதமான சப்ஜெக்டுகளில் எட்டு கேள்விகள் கேட்டாலும், யார் எதைக் கேட்டார்கள் என்று ஞாபகம் வைத்து, அதற்கு சரியாக பதில் சொல்லும் அளவுக்குத் திறமைசாலி. நீங்களே இவரை சோதித்துப் பார்க்கலாம்!’’ - நிகழ்ச்சி அறிவிப்பாளர் சொல்லி முடித்ததும் கேள்விகள் பறந்தன.

‘‘நயாகரா நீர்வீழ்ச்சி எங்கே இருக்கு... அமெரிக்காவின் உள்துறை அமைச்சர் யார்... முதலாம் பானிபட் போர் எந்த ஆண்டு நடந்தது... நியூட்டன் முதலாவது விதி என்ன...’’ இப்படிக் கேட்கப்பட்ட எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்லி தனது அஷ்டாவதானத் திறமையை நிரூபித்தான் சுதாகர். பலத்த கைதட்டல்... பாராட்டும் பரிசும் குவிந்தன.
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பினான் சுதாகர். அங்கு நிலைமை சரி இல்லை... ‘மாமியாருக்கும், மருமகளுக்கும் என்ன சண்டையோ’ என பயந்தபடி உள்ளே நுழைந்தவன் முன் புயலாக வந்து நின்றாள் அவன் மனைவி.

‘‘இங்க பாருங்க... உங்க அம்மா கூட இனிமேலும் என்னால குப்பை கொட்ட முடியாது. ஒண்ணு, இந்த வீட்ல நான் இருக்கணும்... இல்ல, அவங்க இருக்கணும். யார் இருக்கணும்னு சொல்லுங்க?’’ - அந்த ஒரு கேள்விக்கு பல வருடங்களாக பதில் சொல்ல இயலவில்லை அந்த அஷ்டாவதானியால்!