இசையை மலினப்படுத்தும் சபாக்கள்!





மார்கழி பிறந்தாலே சென்னை இசையால் நிரம்பி வழியத் தொடங்கிவிடும். எல்லா திசைகளிலும் பிரமாண்ட படங்களோடு இசை நிகழ்ச்சி சுவரொட்டிகள். புதிது புதிதாக பாடகர்கள்... புதிது புதிதாக சபாக்கள்... புதிது புதிதாக பட்டங்கள்... ஆண்டுக்கு ஆண்டு நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ‘‘தகுதியற்ற பாடகர்களாலும், சபாக்களின் லாப நோக்கத்தாலும் மார்கழி இசைவிழாவே மலினப்பட்டு விட்டது’’ எனக் குமுறுகிறார் பிரபல கர்நாடக இசைப் பாடகி சாருலதா மணி. சந்தியாவந்தனம் சீனிவாசராவ், கல்கத்தா கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மரபில் வந்த சாருலதா மணி, எளியோரும் ரசிக்கும் வகையில் ‘இசைப்பயணம்’ என்ற பெயரில் கர்நாடக இசை நிகழ்ச்சியை வடிவமைத்து நடத்தி வருகிறார்.

‘‘மார்கழி இசைவிழாக்களுக்கு ஏகப்பட்ட நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய முன்வருகின்றன. அதைக் குறிவைத்து, ஆளாளுக்கு சபாக்களைத் தொடங்குகிறார்கள். சென்னையில் மட்டும் ஐம்பது முதல் 60 சபாக்கள் உள்ளன. கல்யாண மண்டபங்களைக்கூட வாடகைக்கு எடுத்து சபாவாக்கி விட்டார்கள். இதில் நாலைந்து சபாக்கள் தவிர பிறவற்றில் சரியான ஆடியோ சிஸ்டம் கூட இல்லை.
பல சபாக்களில் மெயின் ஸ்லாட்டுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். எவ்வளவு கலெக்ஷன் ஆகிறது என்று யாருக்கும் தெரியாது. ஸ்பான்சர், நுழைவுக்கட்டணம் என்று பலவிதங்களில் பணம் பார்க்கும் சபாக்கள், இசைக் கலைஞர்களுக்கு தருவது சொற்பமான பணம்.

தகுதியான பல கலைஞர்களுக்கு வாய்ப்பே கிடைப்பதில்லை. வெளிநாடுகளில் உயிரைக் கொடுத்து இசையைக் கற்றுக்கொண்டு இங்கே வருகிற திறமையான பலருக்கு சபாக்களில் வாய்ப்புக் கிடைப்பதில்லை. ஆனால், சபா நிர்வாகிகளுக்கு உறவினராகவோ, தெரிந்தவராகவோ இருந்தால் போதும்... யார் வேண்டுமானாலும் மேடை ஏறிவிடலாம். அண்மையில் ஒரு கச்சேரிக்குப் போனேன். கண்ணீரே வந்துவிட்டது. கரகரவென்று குரல் காதைக் கிழிக்கிறது. இசையின் தரமே குலைந்துவிட்டது.

குரலைப் பயன்படுத்துவதற்கு என்று சில மரபுகள் உண்டு. அதையெல்லாம் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. சில பெரிய பாடகர்களே தவறு செய்கிறார்கள். 15, 20 கச்சேரிகளை ஒத்துக்கொண்டு கிடைக்கும் சபாக்களில் எல்லாம் பாடுகிறார்கள். குரலைக் கேட்கவே முடியவில்லை. அந்த அளவுக்குக் குலைந்து போய்விடுகிறது. உச்சஸ்தாயியில் பாடவேண்டிய ராகங்களை பலர் தொடுவதே இல்லை. ஒரு பிரபலமான பாடகரின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். காம்போதி ராகத்தைத் தொட்டுவிட்டு பஞ்சமத்தோடு முடித்து விட்டார். சுதி வளைந்து, குரல் கரகரத்து மிகப்பெரிய தடுமாற்றம். காரணம், கிடைத்த மேடைகளில் எல்லாம் பாடித் தீர்த்து விடுகிற வேகம். இது சங்கீதத்துக்கே செய்கிற துரோகம்.



இது ஒருவித கூத்தென்றால், பட்டங்கள் என்ற பெயரில் வாரிவழங்குவது இன்னொரு கூத்து. நேற்று கற்றுக்கொண்டு இன்று மேடையேறியவர்களுக்கு எல்லாம் பட்டங்கள். தகுதியைத் தீர்மானிப்பது யார் என்றே தெரியவில்லை.

இன்னொரு முக்கியமான பிரச்னையும் இருக்கிறது. மார்கழி இசைவிழா என்பது பொதுமக்களுக்குத் தொடர்பில்லாத, ஒருசிலருக்கு மட்டுமே பாத்தியப்பட்ட விழாவாக மாறிவருகிறது. பல சபாக்களில் வெறும் பத்து பார்வையாளர்களை வைத்தெல்லாம் பாடிக்கொண்டிருக்கிறார்கள். எம்.எஸ் அம்மா, பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள் போன்ற மேதைகள் எல்லாம் இசையை அடித்தட்டு மக்களிடம் எடுத்துச் சென்றார்கள். எம்.எஸ் அம்மா ஒருமுறை ரயிலில் போய்க்கொண்டிருந்தாராம். அவரை அடையாளம் கண்டுகொண்டு பயணிகள் எல்லோரும் பாடச்சொன்னார்கள். சிறிதும் சங்கோஜம் இல்லாமல் ஒரு கச்சேரியை நடத்தியிருக்கிறார். அப்படிப்பட்ட மேதைகளைக் கொண்ட இசை பாரம்பரியம் நம்முடையது. மக்களை சபாக்களுக்கு ஈர்ப்பதற்கான எந்த ஏற்பாட்டையும் சபாக்கள் செய்வதில்லை.

கீர்த்தனைகளை என்னதான் காது இனிக்க பாடினாலும் அதன் பொருள் புரியவேண்டாமா..? ஒவ்வொரு பாடலுக்கு இடையிலும் அந்த கீர்த்தனையின் பொருளைச் சொன்னால் என்ன? இதைச் சொன்னால் ‘ஞானமில்லை’ என்று கேலி செய்வார்கள். இசையைக் கேட்க ஞானம் தேவையில்லை. காது இருந்தால் போதும். அண்மையில் மும்பையில் ஒரு கச்சேரி செய்தேன். ஒரு பாடலைப் பாடி முடித்ததும் பார்வையாளர்கள் மத்தியில் ஒரே சத்தம். ‘நீங்கள் பாடிய பாட்டின் அர்த்தத்தைச் சொல்லுங்கள்’ என்றார்கள். அர்த்தம் சொன்னதும், எல்லோரும் ஆரவாரம் செய்தார்கள். அதை ஏன் தமிழகத்தில் செய்யக்கூடாது? என்ன பாடுகிறார்கள் என்று தெரியாததால்தான், பலரும் கேன்டீனில் நேரத்தைக் கழித்துவிட்டு எழுந்து செல்கிறார்கள்.

அதேநேரம் அருணா சாய்ராமுக்கும், சுதா ரகுநாதனுக்கும் அரங்கம் நிறைகிறது. காரணம்... தரம், எளிமை. அண்மையில் சுதா ரகுநாதன் புழல் சிறையில் கைதிகளுக்காக ஒரு கச்சேரி நடத்தியிருக்கிறார். அதுதான் இசையின் வெற்றி. சிறையில் அடைந்து கிடக்கிற கைதிகளுக்கு மனவிடுதலை தந்திருக்கிறது இசை. இதைப் போலவே கர்நாடக இசையை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தால்தான் இசைவிழாக்களுக்கு ஆதரவு கிடைக்கும்.

இதைப் பற்றிப் பேசுவதால், அடுத்த ஆண்டுகளில் எனக்கு வாய்ப்புகூட பறிபோகலாம். இதற்கு நான் அஞ்சவில்லை. பாரம்பரியமும், திறமையும் கொண்ட பல இசைக்கலைஞர்கள் இதை வெளியில் சொல்ல முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது குரலாகவே இதைப் பேசுகிறேன். எல்லாவற்றையும் ராகதேவதை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அதை மறக்கக்கூடாது’’ என்று எச்சரிக்கிறார் சாருலதா.
புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி..!
- வெ.நீலகண்டன்