2012 டாப் பிரச்சனைகள்





ஒவ்வொரு விடியலும் சில பிரச்னைகளையும் சில தீர்வுகளையும் சுமந்து வருகிறது. பேசித் தீர்க்க முடியாத பிரச்னைகள் கிடையாது என்ற நம்பிக்கையில்தான், போர்முனையில் கூட துப்பாக்கிகளுக்கு ஓய்வுகொடுத்துவிட்டு கொஞ்சம் பேசிப் பார்க்கிறார்கள். ஆனால் தமிழகம் எதிர்கொள்ளும் சில பிரச்னைகள், நம்பிக்கை முனையிலிருந்து நகர்ந்து வெகு நாட்களாகின்றன. 3013ம் ஆண்டிலும்கூட தீராத சில பிரச்னைகளை சுமக்க வேண்டிய சூழ்நிலை தமிழனுக்கு! இந்த ஆண்டில் நிலம் புயலாக நிலைகுலைய வைத்த விஷயங்கள்...

முல்லைப் பெரியாறு

உரிமையை மீட்பதற்காக அலை அலையாக தமிழர்கள் திரண்டு கேரள எல்லையில் அணிவகுத்த காட்சியோடு நமக்கு 2012ம் ஆண்டு பிறந்தது. முல்லைப்பெரியாறு அணை மீதான தமிழகத்தின் உரிமையை நீண்டகாலமாக மறுத்து வரும் கேரளா, அணையை அகற்றிவிட்டு 300 மீட்டர் தூரத்தில் புதிய அணை கட்ட தீர்மானித்தது. நீதிபதி ஆனந்த் தலைமையில் உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு, ‘அணை உறுதியாக இருப்பதால் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம்’ என்று 2011 நவம்பரில் அறிக்கை அளித்தது. இதையடுத்து கேரளாவில் போராட்டம் வெடித்தது. தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். மண்வெட்டி, கடப்பாறைகளோடு கேரள அரசியல்வாதிகள் அணைப்பகுதிக்குள் நுழைந்தார்கள். தமிழக விவசாயிகள் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டம் நடத்த, கேரளா அமைதியானது. ‘புதிய அணை கட்டுவோம்’ என்ற குரல் மட்டும் அவ்வப்போது அங்கு ஒலித்து, தமிழக விவசாயிகளை தூக்கம் இழக்கச் செய்கிறது. புதிய ஆண்டு எப்படி விடியும்?

என்கவுன்டர்
சென்னையில் இரண்டு வங்கிக் கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ஐந்து வடமாநில இளைஞர்களை வேளச்சேரியில் போட்டுத் தள்ளி தனது என்கவுன்டர் கணக்கைத் துவக்கியது தமிழக போலீஸ். போலீஸ் எஸ்.ஐ ஆல்வின் சுதன் கொலை வழக்கில் தொடர்புடைய பாரதியும் பிரபுவும் சுட்டுக்கொல்லப்பட்ட புகை இன்னும் அடங்கவில்லை. இந்த ஆண்டு 9 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளார்கள். 2011ல் முற்றிலுமாக மௌனித்திருந்த காவல்துறையின் துப்பாக்கி, 2012ல் கட்டற்ற சுதந்திரத்துடன் களமாடியது. 2013ல் யார் யார் இலக்கோ..?

கூலிப்படை
தொழில் தகராறு, நிலத்தகராறு, அரசியல் பகை, கடன்பிரச்னை, குடும்பப் பிரச்னை என எல்லாவற்றையும் ‘தீர்த்து’ வைக்கும் அளவுக்கு கூலிப்படைகள் வலிமையாகி விட்டன. இந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கூலிப்படையின் கொலைவெறிக்கு இரையாகி இருக்கிறார்கள். பல கொலைகள் இன்னும் அவிழாத புதிர் முடிச்சுகளாக இருக்கின்றன. செங்கல்பட்டு நகர்மன்றத் துணைத்தலைவர் ரவிபிரகாஷ், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனர் பசுபதி பாண்டியன், செங்கல்பட்டு தேமுதிக நிர்வாகி சுரேஷ், திருச்சி ராமஜெயம், சிவகங்கை கதிரேசன், வேலூர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, காஞ்சிபுரம் அம்பேத்வளவன் உள்பட பல அரசியல் பிரபலங்களும் இதில் அடக்கம். பல கொலைத் திட்டங்கள் சிறைச்சாலைகளுக்கு உள்ளேயே உருவானவை என்பதே விபரீதம். ரத்தம் தோயாத தெருக்கள் 2013லாவது சாத்தியமாகுமா..?



கூடங்குளம்
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம், டிசம்பர் 27ம் தேதி 500வது நாளை எட்டுகிறது. ஆரம்பத்தில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக இருந்த அதிமுக அரசு, மார்ச் 18ல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு எதிர்நிலை எடுத்தது. அணு உலையில் எரிபொருள் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து, செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் காவல்துறை நடத்திய தடியடி மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. இப்போதும் கடல் முற்றுகை, உண்ணாவிரதம் என்று போராட்டம் தொய்வின்றி நீடிக்கிறது. அதேநேரம், அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணி முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன. அணு உலைக்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறது.


பவர்கட்

இந்த ஆண்டில் இருண்ட கண்டமானது தமிழகம். மின்
தேவைக்கும் உற்பத்திக்குமான இடைவெளி விரிந்ததில், 2 மணி நேரமாக இருந்த மின்தடை படிப்படியாக அதிகரித்து 18 மணி நேரமானது. கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் தொழில்கள் முடங்கின. டெல்டா பகுதியில் விவசாய நிலங்கள் கருகின. பல தொழிற்சாலைகள் குஜராத்துக்கும், கேரளாவுக்கும் இடம் பெயர்ந்தன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேறு மாநிலங்களுக்குச் சென்று பிழைக்க வேண்டிய நிலை. உள்நாட்டு தொழில்கள் முடங்கிக் கிடக்கும் நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் 24 மணி நேர தடையில்லா மின்சாரத்தை அனுபவிக்கின்றன. மின்தடையால் ஒரு ஆண்டில் ஏற்பட்ட இழப்பு 10,000 கோடி ரூபாய். புதிதாக அறிவிக்கப்பட்ட மின்திட்டங்கள் ஏட்டளவிலேயே இருப்பதால் 2017வரை பிரச்னை தீராது என்கிறார்கள்.

காவிரி

எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெரும் நெருக்கடியைச் சந்தித்தார்கள் டெல்டா விவசாயிகள். திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. வழக்கமாக 3.05 லட்சம் ஏக்கரில் நடக்கும் குறுவை சாகுபடி பொய்த்தது. மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலையில், உச்ச நீதிமன்றத்தை அணுகியது தமிழக அரசு. உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றியதில் 5 நாட்களுக்கு தண்ணீர் வந்தது. ஆனால், அது கால்வாய்களை நனைக்கக்கூட போதுமானதாக இல்லை. காவிரியும் பொய்த்து, மின்சாரமும் போதிய அளவு கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். நாகை மகிழி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ், கீழ்வேலூரைச் சேர்ந்த ராஜாங்கம் என விவசாயிகள் தற்கொலைகள் சோகப் புள்ளிவிவரங்கள் ஆகின்றன.

டெங்கு
ஜூன் மாதம் திருநெல்வேலி யில் தனது இன்னிங்ஸை தொடங்கிய டெங்கு, அப்படியே தமிழகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. அரசு உரிய நேரத்தில் விழிப்புணர்வை உருவாக்காததால் டெங்குவை விட வேகமாக அதுபற்றிய வதந்திகள் பரவின. மக்கள் உச்சபட்ச பதற்றத்துக்கு உள்ளாயினர். ‘பரவுவது டெங்கு காய்ச்சலே அல்ல’ என்று பூசணிக்காய் மூட்டையை சோற்றில் மறைத்த அரசு, ‘மர்மக்காய்ச்சல்’ என்று அதற்குப் பெயர் வைத்தது. அரசு மருத்துவமனைகளில் டெங்குவை உறுதிப்படுத்தும் ஆய்வு வசதிகள் இல்லாததால் மக்கள் தனியார் லேப்களையும், தனியார் மருத்துவமனைகளையும் நாடவேண்டியிருந்தது. காற்றுள்ளபோதே தனியார் மருத்துவமனைகள் தூற்றிக்கொண்டன. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். டெங்கு இப்போது ஆடுவது மூன்றாவது இன்னிங்ஸ். தஞ்சாவூர், மதுரை, வேலூர், திருநெல்வேலி பகுதிகளில் இதன் தீவிரம் இப்போதும் தொடர்கதை.

மீனவர் சோகம்

வலைகளை அறுப்பது, அடித்துக் காயப்படுத்தி குற்றுயிரும் குலையுயிருமாக விரட்டுவது, படகு களை சேதப்படுத்துவது என தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவத்தின் வன்மம் இன்னும் தீர்ந்தபாடில்லை. எல்லை தாண்டுகிறார்கள்Õ, ரெட்டைமடி வலை பயன்படுத்தி கடல்வளத்தை அழிக்கிறார்கள், போதைப்பொருள் கடத்துகிறார்கள்Õ என காரணங்களைச் சொல்லி வதைக்கிறார்கள். 2011 நவம்பரில் பொய் வழக்கிட்டு கைது செய்யப்பட்ட எமர்சன், வின்சன், ஜான்சன், அகஸ்டஸ், லெங்கெட் உள்ளிட்ட 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இன்னும் இலங்கை சிறையில்! ராமேஸ்வரம், நாகப்பட்டினம் பகுதி மீனவர்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் கடலுக்குள் இறங்குகிறார்கள். பலர் தொழிலை விட்டு விலகிவிட்டார்கள். என்று வரும் இவர்களுக்கு விடியல்?

மோசடி
கொங்கு மண்டலத்துக்கு போதாத ஆண்டு 2012. விதவிதமான மோசடிகள் அரங்கேறியுள்ளன. முதன்மையானது, ஈமு கோழி மோசடி. இறகு முதல் முட்டை வரை எல்லாமே காசென்று ஆசை காட்டினார்கள். விவசாயம் பொய்த்துப்போன நிலையில் வாழ்வாதாரம் தேடி அலைந்த அப்பாவிகள் இருந்த மிச்சமீதியை விற்று முதலீடு செய்தார்கள். ஒரு கட்டத்தில், ஈமு கோழிகளையும், முதலீட்டார்களையும் அம்போ என்று விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்கள்.

ஈமு கோழி நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்களின் எண்ணிக்கை 2030. இதுதவிர, அகர்லிக் மரம் வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, தேங்காய் கொப்பரைத் தொழில் என்ற பெயர்களிலும் விவசாயிகளை குறிவைத்து புதுவிதமான மோசடிகள் அரங்கேறியுள்ளன. இவற்றில் 1400 பேர் முதலீடு செய்து பல கோடிகளை இழந்துள்ளனர். ஆன்லைன் டிரேடிங் செய்து லாபம் தருவதாக பணம் வசூலித்துவிட்டு எஸ்கேப்பான ரிச் இண்டியா என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை 2418. புத்தாண்டில் வேறெந்த பூதம் கிளம்பப் போகிறதோ..?

குழந்தை கடத்தல்
இந்த ஆண்டு இந்தியாவில் 1 லட்சத்துக்கு 26 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளார்கள். உத்தரப் பிரதேசம், பீகார் வரிசையில் தமிழகத்திலும் கடத்தல் அதிகரித்து வருகிறது. சமீப நாட்களில் சென்னையில் மட்டும் ஏழு குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளன. ஆண் குழந்தைகளுக்கு ஒரு லட்சம், பெண் குழந்தைகளுக்கு 20 ஆயிரம் விலை. கடத்தல் சம்பவங்களில் பலவும் அரசு மருத்துவமனைகளிலேயே நடந்துள்ளன. பெரும்பாலும் பெண்களே கடத்தலில் ஈடுபடுவது பேரதிர்ச்சி.
- வெ.நீலகண்டன்