டிசைனர் மெழுகுவத்தியில் வாழ்க்கையும் ஒளிரும்





கிறிஸ்துமஸ், புத்தாண்டு என வெளிச்சத் திருவிழாக்கள் வரிசை கட்டி நிற்கும் நேரமிது. வீடுகளை வண்ண விளக்குகளால் அழகுபடுத்த நினைப்போருக்கு லட்சுமி கிருஷ்ணமூர்த்தி செய்கிற டிசைனர் மெழுகுவர்த்திகள் நிச்சயம் பிடிக்கும். பூக்கள்... பொம்மைகள்... கடவுள் உருவங்கள்... இன்னும் இப்படி விதம்விதமான டிசைன்கள். அத்தனையும் மெழுகுவர்த்திகள் என்றால் நம்ப முடியவில்லை.
‘‘சாதாரண மெழுகுவர்த்திகளுக்கு இப்போ பெரிய வரவேற்பில்லை. கரன்ட் போற நேரங்கள்ல மட்டும் உபயோகிக்கத்தான் அவை பயன்படும். அலங்காரமா ஏத்தி வைக்கவோ, அழகுக்காக வைக்கவோ டிசைனர் கேண்டில்தான் பெஸ்ட். ரோஜா, செம்பருத்தி, சூரியகாந்தின்னு விதம்விதமான பூ வடிவங்கள், டெடிபியர், மிக்கி மவுஸ்னு கார்ட்டூன் வடிவங்கள், பிள்ளையார் மாதிரி சாமி உருவங்கள், பந்து வடிவங்கள்னு என்ன டிசைன்ல வேணாலும் பண்ணலாம். பூக்கள் வடிவ மெழுகுவர்த்திகளை ஏத்தி வச்சு தண்ணீர்ல மிதக்க விடலாம். 5 மணி நேரத்துக்கு அணையாம எரியும். சாதாரண மெழுகுவர்த்தி எரியும்போது, உருகி வழிஞ்சு வீணாகும். ஆனா இந்த டிசைனர் மெழுகு வர்த்திகள்ல உருகி வழியறதை, திரும்பவும் நாம உபயோகிக்கலாம்.

ஒரே ஒரு ஸ்டவ், பட்டன் வாக்ஸ் சிப்ஸ், திரிக்கான நூல், அலுமினிய பாத்திரம், விருப்பமான வாக்ஸ் கலர், மோல்டு... இவ்வளவுதான் தேவையான பொருட்கள். வெறும் 4 மணி நேரத்துல 200 மெழுகுவர்த்திகள் பண்ணிடலாம். 20 நிமிடங்கள்ல செட் ஆயிடும். உடனே எடுத்து பேக் பண்ணி, விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். மஞ்சள், பச்சை, ஆரஞ்சு, நீலம், ஃப்ளோரசன்ட், பளபளக்கும் கிளிட்டர் கலர்களுக்கு நிறைய வரவேற்பு இருக்கு.
குட்டிக் குட்டி கப் மெழுகுவர்த்திகளை 2 ரூபாய்லேருந்தும், மெகா சைஸ் மெழுகுவர்த்திகளை 150 ரூபாய்  வரைக்கும் விற்கலாம். பூஜைக்கான பொருள்கள் விற்கற கடைகள், கோயில், சர்ச் பக்கத்துல உள்ள சின்னச் சின்ன கடைகள், ஃபேன்சி கடைகள்ல விற்பனைக்குக் கொடுக்கலாம். வருஷத்துல எல்லா நாட்களும் பிசினஸ் இருக்கும். பண்டிகை, புத்தாண்டு சீசன்ல விற்பனை அதிகமாகும். குறைஞ்ச மூலதனம் மற்றும் உழைப்புல பெரிய காசு பார்க்க நினைக்கிறவங்களுக்கு இது ரைட் பிசினஸ்’’ என்கிறார் லட்சுமி.
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்