கவிதைக்காரர்கள் வீதி




 காகிதத்தின் மீது கடல்


சிறுமி காகிதத்தின் மீது
ஏழு கடலின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்.
அதில் ஏழு மீன்களை நீந்தவிடுகிறாள்
ஏழு மலைகளின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதன் முகடுகளில்
ஏழு பஞ்சு மேகங்களை மிதக்க விடுகிறாள்
ஏழு மேகங்களிலிருந்து
சில மழைத் துளிகளை உதிர்த்து விடுகிறாள்
மழைத் துளிகள் விழுமிடத்தில்
ஒரு பூவின் சித்திரத்தைத் தீட்டுகிறாள்
அதனடியில் தன் பெயரை எழுதுகிறாள்
இனி அவளை காண்பதென்றால்
ஏழு கடல், ஏழு மலைகளைத் தாண்டி
பயணிக்க வேண்டியிருக்கும் நாம்.

பறவையின் இறகு

வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தில்
67ம் பக்க எண் அடையாளமாக
ஒரு பறவையின் இறகை
செருகி இருந்தேன்.
மீண்டும் வாசிக்க எடுத்தபோது
83ம் பக்கத்தில்
பறவையின் இறகு இருந்தது.
இப்பொழுது
பறவையின் இறகை
கையில் வைத்துக்கொண்டு
கற்க ஆரம்பித்திருக்கிறேன்
67ம் பக்கத்திலிருந்து
83ம் பக்கத்திற்கு
எப்படி பறப்பதென்று?