நீதானே என் பொன்வசந்தம்





பள்ளிப் பருவத்தில் முளைக்கும் காதல், பதின் பருவத்தைக் கடந்து கல்யாணம் வரை வருவதும், அதன் சில சுவாரஸ்யமான பக்கங்களுமே கதைக்களன். கௌதம் மேனனுக்கு என்றே அவதரித்த இன்னொரு காதல் படம்.

ஒரு கல்லூரி விழாவில் சமந்தாவை சந்திக்கிறார் ஜீவா. பள்ளி நாட்களிலேயே இருவருக்குள்ளும் பரஸ்பரம் பற்றிக்கொண்ட காதல்தான், இடையில் சமந்தா வீடு மாறி போவதால் ‘நடுவுல சில பக்கங்கள்’ காணாமல் போய், மீண்டும் அடுத்த அத்தியாயத்திற்குள் நுழைய வைக்கும் சந்திப்பு அது. சில தயக்கங்கள் ப்ளஸ் மயக்கங்களுக்குப் பிறகு, காதலை கல்யாணத்திற்கு மாற்றத் துடிக்கும் போராட்டம், உளவியல் துயரம், ஊடல்... எல்லாம் கடந்து கல்யாணம் முடிந்ததா என்பதுதான் ஆரம்பத்திலிருந்து நாம் பார்க்கத் துடிக்கும் க்ளைமாக்ஸ்.

ஜீவா, சமந்தா என்ற இரண்டு தண்டவாளங்கள் இடையே ஓடும் அழகான காதல் ரயில்தான் கதை. ஆனால் அதை கூட்ஸ் வண்டி வேகத்திற்குக் கொண்டு போவதுதான் பொறுமையை சோதிக்கிறது. இருவருக்கும் இடையேயான புரிதல் இன்மையை மட்டுமே கதையின் வில்லனாகக் கொண்டிருக்கும் கௌதம் மேனனின் புதிய அப்ரோச்சை பாராட்டலாம். பேசுகிறார்கள், பிரிகிறார்கள், மீண்டும் சேர்கிறார்கள், மறுபடியும் வெட்டிக்கொள்கிறார்கள். இதுவே மாறி மாறி வருவதுதான் அலுப்பை ஏற்படுத்துகிறது. வசனம் எழுதுவதற்காக வாங்கிய பேப்பர் செலவுதான் பட்ஜெட்டின் பெரும் பகுதியாக இருந்திருக்குமோ!

ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போகும் காலகட்டம் என எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருத்தமான தோற்றத்தில் ஜீவா, சமந்தா இருவரையும் நம்ப முடிகிறது. அதிலும் சமந்தா, வாவ்! உதடுகளை கடித்துக்கொண்டே ஜீவாவை திரும்பித் திரும்பி பார்க்கும் தவிப்பும், பின்புறமாக உட்கார்ந்திருக்கும் ஜீவாவை நேர்த்தியாக திரும்பிப் பார்க்கும் கெத்தும், 15 வருடங்களுக்கு முன்னால் படம் பிடித்தது போல் அச்சு அசல் மாணவியாக இருக்கும் அழகும், ஜீவாவை ரசித்துக் கொண்டே வாயை திறந்தபடி ஆச்சரியப்படும் விடலை வெட்கமும், எங்கேயோ போயிட்டீங்க சமந்தா! ஒவ்வொரு ஊடலின் முடிவிலும் ஜீவா கையைப் பிடித்துக்கொள்ளும் காதல் ஏக்கம், கிறக்கம், பலப்பல சூடுபறக்கும் முத்தங்கள்... நடிப்பில் டீன்-ஏஜ் மிளிர்கிறது! ஜீவாவிடமும் குறைவில்லை. அழகாக ஈடுகொடுத்து ஈர்க்கிறார். கடும் பசியில் இருப்பவனுக்கு அளவு சாப்பாடு போடுவதுபோல் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாமே என ஏங்க வைக்கிறார் சந்தானம்.

விடிந்தால் ஜீவாவுக்கு வேறொரு பெண்ணுடன் கல்யாணம். ஆனால், நள்ளிரவில் சமந்தாவுடன் ஊரைச் சுற்றுவதும், ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப பேசிக்கொள்வதும் லாஜிக்கிலும் மனசிலும் ஒட்டவில்லை. எம்.எஸ்.பிரபு - ஓம்பிரகாஷ் கேமரா அருமை. இரண்டு கேரக்டர்களை மறைந்து நின்று கவனிப்பது போன்ற லைவ் ஃபீலிங்கை அவர்கள் கொடுத்திருப்பது அழகு. மொட்டை மாடி சீன் மாதிரி நீ....ளமான பல இடங்களில் கத்திரி கொஞ்சம் ஓவர் டைம் பார்த்திருக்க வேண்டும்!

இளையராஜாவின் இசை செமத்தியாக ஸ்கோர் செய்கிறது. முக்கியமான இடங்களில் மௌனத்தை பேச விட்டு காட்சிகளில் அழுத்தம் சேர்க்கிறார். ‘சாய்ந்து சாய்ந்து...’, ‘என்னோட வா வா...’, ‘சற்று முன்பு பார்த்த காதல்’ என நா.முத்துக்குமாரின் பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம்.
நீள நீள காட்சிகளையும், உரையாடலையும் குறைத்திருந்தால், ‘நீதானே என் பொன்வசந்தம்’ என நாமே சொல்லியிருக்கலாம்.
- குங்குமம் விமர்சனக் குழு