நியூஸ்வே





* அனேகமாக 2013ம் வருஷம் வடிவேலு திரைக்கு வந்துவிடுவார். மூன்று படங்களில் அவரை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

* ஹாட்ரிக் அடித்திருக்கிறார் நரேந்திர மோடி. ஒரு பக்கம் காங்கிரஸ்; இன்னொரு பக்கம் குஜராத் பரிவர்தன் கட்சி என இரண்டு எதிர்ப்புகளையும் சமாளித்துக் கரையேறிவிட்டார். கடந்த 2007 தேர்தலில் பா.ஜ.க. 117 எம்.எல்.ஏக்களைப் பெற்றிருந்தது. இம்முறை 3 அதிகம். இந்தத் தேர்தலில் மண்ணைக் கவ்வினால் மோடியின் பிரதமர் கனவு கரைந்துவிடும் என உள்கட்சி எதிரிகள் நினைத்திருந்தனர். ஆனால் மோடியின் பிம்பம் பிரமாண்டமாகி இருக்கிறது. இமாசலப் பிரதேச வெற்றி காங்கிரஸுக்குக் கிடைத்த ஆறுதல் பரிசு!

* பாகிஸ்தான் அணுசக்தி விஞ்ஞானியும், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு அணு ஆயுத ரகசியங்களைக் கொடுத்து சர்ச்சையில் சிக்கியவருமான ஏ.க்யூ.கான் இப்போது அரசியல்வாதி ஆகிவிட்டார். தன் புதிய கட்சிக்கு அவர் கேட்டிருக்கும் சின்னம், ‘ஏவுகணை’!

* பிரபல ஹாலிவுட் நடிகைகளின் இமெயில் முகவரியை ‘ஹேக்’ செய்து அவர்களின் ரகசியங்களைத் திருடிய கிறிஸ்டோபர் செனி என்ற நபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்திருக்கிறது அமெரிக்க நீதிமன்றம். கிட்டத்தட்ட 50 பிரபலங்களின் ரகசிய ஏரியாவுக்குள் நுழைந்து, அனைத்தையும் ‘பப்ளிக்’ ஆக்கியவர் செனி. குறிப்பாக நடிகை ஸ்கார்லெட் ஜோஹான்ஸன், தனது அரை நிர்வாணப் படம் வெளியானதும் அழுதே விட்டார். இப்போது ஸ்கார்லெட்டிடம் ‘ஸாரி’ கேட்டிருக்கிறார் செனி.

இந்த ஆண்டு ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்றிருக்கிறார் அமெரிக்காவின் ஒலிவியா கல்போ. ரோட்ஸ் தீவுவாசியான இந்த 20 வயதுப் பெண், ஒரு இசைக் குடும்ப வாரிசு. அப்பா இத்தாலி; அம்மா அயர்லாந்து வம்சாவளி என அமெரிக்க அடையாளங்கள் அதிகமில்லாத பெண். கிடார் மாதிரி இருக்கும் ‘செல்லோ’ என்ற வாத்தியம் இசைப்பதில் நிபுணி. ஆனாலும் நடிகை ஆவதுதான் இவரது லட்சியமாம்!

* காதலரான யு டி.வி. தலைமை செயல் அதிகாரி சித்தார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை மணந்தார் வித்யா பாலன். அவர் பஞ்சாபி; இவர் தமிழர். திருமணம் இரண்டு சம்பிரதாயங்களின் கலவையாக நடந்தது. வித்யாவின் புடவை தமிழ்நாடு ஸ்டைலில் பட்டு; வளையல் பஞ்சாபி ஸ்டைல். திருமண விருந்து தமிழ்நாடு ஸ்டைல். சிம்பிளாக இரு தரப்பு சொந்தங்களும் மட்டும் வந்திருக்க, மும்பையில் ஒரு மாளிகையில் நடந்தது திருமணம்.