வேலைக்குப் போகாதீர்கள்! : உங்களைத் தேடி வேலை வரும்





ஏராளமான பேர் வேலை பார்க்கும் பெரிய நிறுவனத்தில், ஏதோ ஒரு சாதாரண வேலையில் சேர்வது என்பது, எக்ஸ்பிரஸ் ரயிலில் சீட் ரிசர்வ் செய்து பயணிப்பது போன்றது. நீங்கள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் போகிறீர்களா... அல்லது நீங்கள் சும்மா உட்கார்ந்திருக்க, ரயில் 80 கி.மீ வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறதா என்பது புரியாமலே வாழ்க்கை முடிந்துவிடும்!
- பால் கெய்ட்டி
    
பணி இடத்தில் உங்களிடம் மேனேஜரோ, அல்லது நிறுவனத்தின் உரிமையாளரோ, ஏதோ ஒரு தகவல் கேட்கிறார்கள். உங்களுக்குத் தெரியவில்லை எனில், அந்த உண்மையை அப்படியே ஒப்புக்கொள்வதே நல்லது. ‘‘இது கூடத் தெரியாதா?’’ என்ற திட்டுகளுக்கு பயந்து, தெரிந்த அரைகுறை தகவல்கள் கொஞ்சம் + குத்துமதிப்பான தகவல்கள் கொஞ்சம்... என்றெல்லாம் சொல்லி சமாளிக்க முயற்சி செய்ய வேண்டாம். ஒருவேளை உண்மையான பதில் கேள்வி கேட்பவருக்கு ஏற்கனவே தெரிந்திருந்து, உங்களை சோதிப்பதற்காக கேள்வி கேட்கப்பட்டிருந்தால்..? பெருத்த அவமானம்!

தெரியாததை ‘தெரியாது’ என்று ஒப்புக்கொள்வதில் அவமானம் இருக்கக் கூடும். ஆனால் அது இதைவிடக் குறைவாகவே இருக்கும். மேலும், இப்படி வெளிப்படையாக ஒப்புக்கொள்வது, நமக்குத் தெரியாத அந்தத் தகவலை அறிந்து கொள்ளத் தூண்டும் நேர்மையான செயலாகும். அதைவிட்டு, சமாளிக்கும் முயற்சியில் பொய்த் தகவல்களை அளித்தீர்கள் என்றால்... ஒருவேளை அதை நம்பி, அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால்... அதனால் இறுதியில் விளையப் போகும் முழு அபத்தத்திற்கு நீங்கள்தான் தண்டிக்கப்படுவீர்கள்! தேவையான தகவலைத் தெரிந்து வைத்திருக்காதது முதல் குற்றம், தவறான தகவலை அளித்தது இரண்டாவது குற்றம், அதை நம்பி அனைவரும் செயல்படுவதை வேடிக்கை பார்த்தது பெருங்குற்றம்... ஆக, எத்தனை குற்றங்கள்!

‘தெரியாது’ என்று சொல்வதில் உங்களது தைரியம் மட்டுமல்ல, நேர்மையும் வெளிப்படுகிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் உங்களுக்கு லாபம்தான்.

இதெல்லாம் பணி சார்ந்த விஷயங்கள். ஆனால், வேலை பார்க்கும் இடத்தில் நிகழக்கூடிய பணிக்குத் தொடர்பற்ற பிற விஷயங்களிலும் கூட, நீங்கள் உண்மையே பேச வேண்டும். ஏனென்றால், பொய் கூறுதல் உங்கள் கேரக்டரையே சிதைத்துவிடும்.

உண்மையைச் சொல்வதில் உள்ள மிகப்பெரிய நன்மை என்னவென்றால், நீங்கள் அதை நினைவு வைத்திருக்க வேண்டியதில்லை. எளிய உதாரணமாக, ‘‘நீ ஏன் லேட்டாக வந்தாய்?’’ என ஆபீஸர் கேட்கிறார்.

உண்மையான பதில் ‘‘நேற்று கொஞ்சம் டயர்டாக இருந்தேன். எழுந்திருக்க நேரமாகிவிட்டது. எனவே, வீட்டை விட்டுக் கிளம்பவும் லேட்டாகிவிட்டது.’’

இது உண்மையாகவே நடந்தது என்பதால், எத்தனை வருடங்கள் ஆனாலும், உங்களுக்கு நினைவு இருக்கும். ஏனென்றால், உண்மை எந்தக் காலத்திலும் மாறப்போவதில்லை.

ஒருவேளை நீங்கள், ‘‘வரும் வழியில் டிராபிக் ஜாம்’’ என பதில் அளித்தீர்கள் என்று வையுங்கள்.

இரண்டு நாள் கழித்து இதே கேள்வியை வேறொருவர் கேட்டால், உங்களுக்கு முதலில் என்ன பதில் சொன்னோம் என்று நிச்சயமாக நினைவிருக்காது... ‘‘டிராபிக் ஜாமா? வயிற்று வலியா..?’’

ஏனென்றால், நீங்கள் சொன்னது கற்பனையான ஒரு சம்பவம். அது உங்கள் மனதில் நிற்கவே நிற்காது. இப்படி எத்தனை பொய்களைத்தான் உங்கள் மனம் நினைவில் வைத்துக்கொள்ளும்? ஒருவரிடம் வயிற்று வலி... இன்னொருவரிடம் தலைவலி...

திறமையான பொய்யர்கள் மேலும் இரண்டு நாட்கள் வேண்டுமானால் தாக்குப் பிடிப்பார்கள். ஒரு கட்டத்தில் அவர்களும் திணறுவார்கள். உண்மை என்பது, நீங்கள் தண்ணீர் ஊற்றாவிட்டாலும், உரம் இடா விட்டாலும் வாழும் தாவரம். பொய் நீங்கள் என்னதான் பராமரித்தாலும் மரித்துப் போகும் கற்பனைத் தாவரம். ஆனால் இந்த கற்பனைத் தாவரம், உங்களது ஆற்றலை உறிஞ்சிவிட்டுத்தான் போகும். பொய்கள் உங்களது பெயரைக் களங்கப்படுத்தியே தீரும். அந்த பாதிப்பு கடைசி வரை உங்களுடன் இருக்கும்.

இது சின்னப் பொய்தானே என்று நினைக்க வேண்டாம். பொய்களில் பெரிய பொய், சின்னப் பொய் என்று எதுவுமில்லை. தவிர, சின்னப் பொய்தான் பெரிய பொய்களுக்கு அழைத்துச் செல்கிறது.
யோசித்துப் பாருங்கள்...

திடீரென ஒரு பொறுப்பு உங்களுக்கு வழங்கப்படுகிறது. அது ஒரு சிக்கலான பணி; பிரச்னைகள் நிறைந்த பணி.



இப்போது எங்கிருந்தெல்லாமோ உங்களை பயம் காட்ட ஏராளமான பேர் வந்து விடுவார்கள். ஏற்கனவே அந்தப் பணியைத் தவிர்த்தவர்கள், அந்தப் பணியால் தவித்தது போல் நடிப்பவர்கள்தான் அவர்கள். உங்களை, ‘வசமா மாட்டிக்கிட்டீங்களா?’ என்கிற ரீதியில் விமர்சனம் செய்து, முட்டாளாக்க முயற்சி செய்வார்கள். வார்த்தையால் உங்கள் தன்னம்பிக்கையை உறிஞ்சி விடுவார்கள். ‘‘இந்தப் பணியை ஏற்கனவே மேற்கொண்டவர்கள் நெஞ்சு வலி வந்து செத்துப் போனார்கள்’’ என்றும், ‘‘வேலையினால் ஏற்பட்ட பிரஷரில் மூளை வெடித்து விட்டது’’ என்றும்கூட பேசுவார்கள்.

பணி வாழ்க்கை எப்போதும் மலர்ப்படுக்கையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். சவால் நிறைந்த வேலையைச் செய்துதான் தீர வேண்டும் என்ற சூழலில், அந்தச் சூழலோடு முதலில் ஒன்றிப் போய்விடுங்கள். முரண்டு பிடிப்பது தேவையற்ற மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும். வேலை உங்களுக்கு ஒருபோதும் பிரச்னை தராது. வேலை பற்றிய குழப்பமான, தேவையற்ற சிந்தனைகள்தான் பிரச்னைகளைக் கொண்டு வருகின்றன. எனவே, நிதானமாக ஆராயுங்கள்.

வேலை என்று வந்து விட்டால், கொடுக்கிற வேலையை செய்துதான் தீர வேண்டும்.

ஒருவருக்கு சிக்கல் வருகிற மாதிரியோ, பொறிக்குள் சிக்க வைக்கிற மாதிரியோ வேலைகள் எதுவும் எங்குமே கிடையாது. எல்லாமே அவரவர் மனநிலையைப் பொறுத்தது. ஒருவருக்கு எளிதாக இருக்கும் ஒரு வேலை, இன்னொருவருக்கும் எளிதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல, ஒருவருக்குக் கடினமாக இருக்கும் ஒரு வேலை, இன்னொருவரையும் வாட்டி எடுக்கும் என்பது உண்மையில்லை.

ஒவ்வொரு வேலையும் அந்தந்த வேலைக்குரிய சாதக, பாதக பலன்களோடுதான் இருக்கும். முற்றிலும் தீமை தரக்கூடிய வேலை என்று எதுவுமே இருக்க முடியாது. அப்படி ஏதாவது தீமை தரக்கூடிய வேலை இருந்தால் கூட, அதிலும் நன்மை தரக்கூடிய பகுதி ஒன்று நிச்சயம் இருக்கும்.

இந்த வேலையால் பிரச்னை வரக்கூடும் என்று நினைத்தால், உங்களுக்கான செய்தி - பிரச்னை இல்லாத வேலை என்று எதுவும் கிடையாது. உங்களது மேலிடம் அல்லது பாஸ் நினைத்தால் மிகவும் எளிதான, அற்பமான வேலையில் கூட தப்பு கண்டுபிடித்து, உங்களை பலிகடா ஆக்கி சிக்க வைக்க முடியும்.

எப்படியும் இதற்கு முன் இந்த வேலைகளை ஒருவர் பார்த்திருப்பார். நீங்கள் இப்போது மறுத்தால் எப்படியும் இன்னொருவர் பார்க்கத்தான் போகிறார். அவர்களால் முடியும் என்றால், ஏன் உங்களால் முடியாது?

அந்த ‘பிரச்னைக்குரிய’ வேலையை செய்து முடித்ததும் உங்கள் நிலைமை எப்படி இருக்கும்? இதை மதிப்பிட்டுப் பாருங்கள். வேலை துவங்கும் முன் இருந்த நீங்கள் வேறு... இப்போது உள்ள நீங்கள் வேறு. ‘பிரச்னை’யால் தவித்த நீங்கள், இப்போது அதைச் சமாளிக்கும் கலையைக் கற்றிருப்பீர்கள். இந்த பட்டறிவு தந்த அனுபவம் உங்களது பிற வேலைகளுக்கும் பயன்படப் போகிறது.

எனவே, என்னவென்று விஷயம் புரியாமல் வேலையைப் பார்த்து அலறிவிட வேண்டாம். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உங்களது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். ‘பாதுகாப்பு... பாதுகாப்பு...’ என்று மனம் போலிக்கூச்சல் போடும். அந்தக் குரலை அலட்சியப்படுத்தி, அறிவின் குரலைக் கேட்டவர்கள்தான் வாழ்வில் உயர்ந்திருக்கிறார்கள்.

பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், வீட்டினுள்ளேயே முடங்க வேண்டியதுதான். உலகம் உங்களைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கும்.
(வேலை வரும்...)