கர்ணனின் கவசம்





‘‘அப்பா, இவர்தான் உங்களை பார்க்கணும்னு சொன்னது...’’
மாட்டுத் தொழுவத்தை ஜன்னல் வழியே ஆராய்ந்து கொண்டிருந்த ஃபாஸ்ட், தனக்குப் பின்னால் ஒலித்த குரலைக் கேட்டு திரும்பினான். கண்களில் மலர்ச்சியுடன் சங்கர் நின்று கொண்டிருக்க, அவன் அருகில் ரவிதாசன்.

‘‘வணக்கம் மிஸ்டர் ரவிதாசன். என் பேரு ஃபாஸ்ட். கோயில் சிற்பங்கள் தொடர்பா நூல் எழுதறதுக்காக ஜெர்மனிலேர்ந்து வந்திருக்கேன். இவன், ஆனந்த். என்னோட உதவியாளன்...’’
பிசிறில்லாமல் தமிழில் பேசிய ஃபாஸ்ட்டை கண்களால் அளவிட்டபடியே கைகுலுக்கிய ரவிதாசன், ‘‘ஃபாஸ்ட்? இந்தப் பேருல உங்க நாட்டைச் சேர்ந்த கதே, ஒரு நாடகம் எழுதியிருக்கார் இல்லையா?’’ என்றான்.
‘‘யெஸ்... படிச்சிருக்கீங்களா?’’
‘‘ம்... கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் அந்த நாடகத்தைத் திரும்பத் திரும்ப கதே எழுதினதாவும், ஆனாலும் அவருக்கு திருப்தியில்லாம அதை ஓரமா போட்டு வச்சிருந்ததாவும், கடைசில அவரு இறந்த பிறகு அவரோட நண்பர்கள் அதை பிரசுரம் செஞ்சதாவும் கேள்விப்பட்டிருக்கேன். உட்காருங்க. ஆனந்த், நீங்களும்தான்...’’ என கை காட்டிவிட்டு எஞ்சியிருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தான் ரவிதாசன்.
‘‘அங்கிள், நீங்க டீ குடிப்பீங்க இல்லையா? சார்... உங்களுக்கும் ஓகேதானே? அம்மா... நாலு டீ...’’ - உள்நோக்கிக் குரல் கொடுத்த படியே ஓடினான் சங்கர்.

‘‘சொல்லுங்க ஃபாஸ்ட். என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?’’
‘‘பெருசா ஒண்ணுமில்லை ரவிதாசன். நானும் ஆனந்தும் தஞ்சை பெரிய கோயிலை பார்க்க வந்துக்கிட்டு இருந்தோம்...’’
‘‘ம்...’’
‘‘அப்ப எங்க காரை ஒரு பொம்மை விமானம் கடந்துச்சு. அதை நீங்க செஞ்சி தந்ததா சங்கர் சொன்னான்...’’
‘‘ஆமா... அதுக்கென்ன?’’
‘‘அது மாதிரி நிறைய செய்வீங்களா?’’
‘‘என் பையன் விளையாட மட்டும் செஞ்சு தருவேன். எதுக்காக கேட்கறீங்க..?’’
‘‘இல்ல... அது பார்க்க போர் விமானம் மாதிரி இருந்தது!’’
‘‘மாதிரி எல்லாம் இல்லை. போர் விமானமேதான். பரத்வாஜ மகரிஷி பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்னாடி எழுதின நூல்ல இருந்த குறிப்பை வச்சு உருவாக்கின பொம்மை அது...’’
‘‘அந்த புக் உங்ககிட்ட இருக்கா?’’
‘‘இருந்தது. ஒரு நண்பர் கேட்டார்னு அவர்கிட்ட கொடுத்திருக்கேன்...’’
‘‘அந்த நண்பர் எங்க இருக்காரு?’’
‘‘இப்ப தஞ்சாவூர்ல இல்ல...’’ என்று சிரித்த ரவிதாசன், ‘‘கோயில் சிற்பங்களைப் பத்தி புக் எழுத வந்திருக்கிற நீங்க, இப்படி போர் விமானங்கள் பக்கம் திரும்பிட்டீங்களே?’’ என்றான்.

நிமிர்ந்து உட்கார்ந்தான் ஃபாஸ்ட். எச்சரிக்கையுடன் பேச வேண்டும். ‘‘ஜஸ்ட் ஒரு ஆர்வம்தான். நாம இப்ப பயன்படுத்தற எல்லா பொருட்களைப் பத்தியும் அந்தக் காலத்துலயே எழுதி வச்சிருக்காங்கன்னு நினைக்கிறப்ப ஆச்சர்யமா இருக்கு...’’
‘‘இதுல அதிசயப்பட ஒண்ணும் இல்ல. எல்லா காலத்துலயும் எல்லா துறைகளும் வளர்ந்துக்கிட்டுத்தான் இருக்கு...’’ என முற்றுப்புள்ளி வைத்தான் ரவிதாசன்.
விடுவதாக இல்லை ஃபாஸ்ட். ‘‘அந்தக் காலத்துல நாளந்தா பல்கலைக்கழகத்துல எல்லா துறைகளைப் பத்தியும் கத்துத் தந்தாங்க இல்லையா?’’
‘‘ஆமா...’’
‘‘நாளந்தா பல்கலைக்கழகத்துக்கு முன்னாடியே தக்ஷீலானு ஒரு யுனிவர்சிட்டி இயங்கி வந்ததா சொல்றாங்களே..?’’
‘‘அப்படியா? எனக்குத் தெரியலை...’’
‘‘என்ன ரவிதாசன், இப்படி சொல்லிட்டீங்க. இன்றைய பாகிஸ்தான்ல இருக்கிற ராவல்பிண்டிக்கு பக்கத்துல கி.மு ஆயிரத்துல இந்த யுனிவர்சிட்டி இயங்கி வந்ததாவும், 68 துறைகள்ல பாடங்கள் கற்பிக்கப்பட்டதாவும் நான் படிச்சிருக்கேனே...’’
‘‘எனக்குத் தெரியலை. டீ குடிங்க...’’
சங்கர் கொடுத்த தேநீரை ரவிதாசனும், ஃபாஸ்ட்டும், ஆனந்தும் எடுத்துக் கொண்டார்கள். டிரைவரிடம் ஒரு கோப்பையை கொடுப்பதற்காக காரை நோக்கிச் சென்றான் சங்கர்.



‘‘அதே மாதிரி, தக்ஷீலாவுக்கு முன்னாடியே ஒரு பல்கலைக் கழகம் ஒடிசாவுல இருந்ததாவும் சொல்றாங்க. அது மகாபாரத காலகட்டத்தைச் சேர்ந்ததாம். சூரியனுக்குள்ள ஊடுருவற கனிமத்தைப் பத்தி தெரிஞ்சவங்க அங்க ஆசிரியர்களா இருந்தாங்களாம். புகையை ஆயுதமாக்கி மனுஷங்களை தாக்கற வித்தைலயும் அவங்க கைதேர்ந்தவங்களாம்...’’
‘‘சாரி ஃபாஸ்ட். நீங்க சொல்ற எந்த விஷயமும் எனக்கு தெரியலை... புரியலை...’’ என்று எழுந்தான் ரவிதாசன்.
விடை கொடுக்கிறான். மனதுக்குள் பொங்கிய உணர்ச்சியை அப்படியே புதைத்தபடி ஃபாஸ்ட் நிமிர்ந்து நின்றான். ‘‘தஞ்சாவூர்லதான் தங்கியிருப்பேன். அடிக்கடி உங்களை தொந்தரவு பண்ண வருவேன்...’’
‘‘ஆல்வேஸ் வெல்கம்...’’
ஆனந்த் பின்தொடர காரை நோக்கிச் சென்ற ஃபாஸ்ட், திரும்பி ரவிதாசனின் வீட்டையும், அருகிலிருந்த மாட்டுத் தொழுவத்தையும் பார்த்தான். புரியாத பல விஷயங்கள் புரிவது போல் இருந்தன. சங்கரிடம் விடை பெற்றபடி காரில் ஏறினான். கண்ணாடியை இறக்கிவிட்டு புன்னகையுடன் ரவிதாசனுக்குக் கேட்கும்விதமாக குரலை உயர்த்தினான்.

‘‘ஒடிசாவுல இருந்த பல்கலைக்கழகத்தோட முகப்பு, உங்க வீடு மாதிரியேதான் இருக்கும்...’’
ஒடிசா செல்வதற்காக பேக்கிங் வேலையை முடித்த தாரா, விமலானந்தர் தன் கையில் திணித்த காகிதத்தை மீண்டும் படித்தாள். கிருஷ்ணருக்கான ஸ்லோகம். அதற்கு விளக்கமாக சில எண்கள். அதுவும் ஒரு வட்டத்தின் சுற்றளவு விகிதத்தினை, விட்டத்தின் வழியாகக் கணக்கிட முடியும் என்ற குறிப்பு வேறு. விட்டால், சூரியனும் வட்டம்தான். அதன் விட்டத்தையும் இப்படி கணக்கிட முடியும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது. இருந்தாலும் இந்த ‘மந்திரக் கணக்கு’ சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.
மனநிலை பிறழ்ந்த மனிதராக இப்போது விமலானந்தரைக் கருத முடியவில்லை. மும்பைக்கு தான் வந்த விஷயமே அவருக்குத் தெரியாது. ஹாஸ்டல் விலாசம் தெரிந்திருக்க சான்ஸே இல்லை. அப்படியிருந்தும் தன்னைத் தேடி வந்திருக்கிறார். மதுரைக்கு ஏதோ ஆபத்து என அறிவிக்கிறார். எதற்காக இப்படி அவர் செய்ய வேண்டும்? அதுவும் சென்னை குரோம்பேட்டையில் சொன்னதையே திரும்பவும் மும்பை வந்து சொல்ல வேண்டும்? தனக்கும் அவருக்கும் என்ன தொடர்பு?
புருவங்கள் முடிச்சிட, பைஜாமா பாக்கெட்டில் கைவிட்டபடி அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். அனிச்சையாக டி-ஷர்ட்டை இழுத்து விட்டபடியே டீப்பாயின் மீதிருந்த செப்பேட்டை நோட்டமிட்டாள். முதலில் வந்த பார்சல். குருக்ஷேத்திர போரில் பங்கேற்ற பாண்டிய மன்னனின் வம்சத்தைக் காப்பாற்ற வேண்டும் என அரக்கினால் அதில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டிருந்தது. இதை அனுப்பியது, தன் அப்பா என முதலில் நினைத்தோம். அப்படியில்லை என்பது இரண்டாவது பார்சல் வந்தபோது புரிந்தது.

பரமேஸ்வர பெருந்தச்சன்...
யார் இவர்? தன் அப்பா வாங்கிய சிம் கார்டை இவர் ஏன் பயன்படுத்த வேண்டும்? ‘மகாமேரு கன்ஸ்ட்ரக்ஷ’னில் தன்னை வேலைக்கு அமர்த்த இவர் ஏன் முயற்சிக்க வேண்டும்? ஸ்படிக மகாமேருவை பரிசாகக் கொடுத்து, ‘ஒடிசாவுக்கு செல்லும்போது இதை மறக்காமல் கொண்டு போ. பூட்டைத் திறப்பதற்கான சாவி இதுதான்’ என்று ஏன் செல்போனில் அழைத்து சொல்ல வேண்டும்? அது என்ன பூட்டு? எதைப் பூட்டி வைத்திருக்கிறார்கள்? ஸ்படிக மேரு எப்படி சாவியாகும்? ஸ்படிகம் என்பதே கண்ணாடிதானே? அது உடைந்துவிடாதா? இந்த பரமேஸ்வர பெருந்தச்சனை நம்பாதே என்கிறார் விமலானந்தர். எனில், இவரை அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அப்படியானால் உண்மையில் விமலானந்தர் யார்..?
அலைபாய்ந்த கேள்விகளை நங்கூரமிட்டு நிறுத்தினாள் தாரா. சம் திங் ஃபிஷி. ஏதோ ஒன்று தன்னைச் சுற்றி நடக்கிறது. எவற்றின் நடமாடும் நிழலாகவோ தான் இருக்கிறோம். தன்னை வைத்து எதையோ சாதிக்க நினைக்கிறார்கள். அது என்ன என்று தெரியாத வரையில் இப்படி திடீர் திடீரென்று ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கும். ஒருவேளை அனைத்துக்குமான விடை ஒடிசாவில் கிடைக்கலாம். யார் கண்டது... அங்கும் விமலானந்தர் வந்து ‘‘மதுரை வெள்ளியம்பலத்துக்கு ஆபத்து வந்துடுச்சும்மா... ஈரேழு உலகத்தையும் காப்பாத்தும்மா...’’ என வலது காலை உயர்த்தி நடராஜர் போல் போஸ் கொடுத்தபடி தழுதழுக்கலாம், கதறலாம்.

உதட்டைக் கடித்தபடி அறையிலிருந்த ஏசியின் அளவை ரிமோட்டால் குறைத்துவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தாள். அப்போது -
அவளுக்கு பின்புறம் இருந்த சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஸ்பிலிட் ஏசியில் இருந்து மெல்ல மெல்ல புகை கசிய ஆரம்பித்தது. ஆனால், இறங்க ஆரம்பித்த புகை அறையை சூழவில்லை. சொல்லப்போனால் முன்னோக்கியோ, பின்னோக்கியோ நகரவில்லை. பதிலாக வளைந்து, நெளிந்து கதாயுதமாக உருவெடுத்தது. அதுவும், மகாபாரதத்தில் பீமன் பயன்படுத்திய ஆயுதம் போலவே அது இருந்தது.
அந்த புகையாலான கதாயுதம் முழுமை பெற்றதும், தாராவின் பின் மண்டையை பிளப்பதற்காக காற்றைக் கிழித்தபடி வேகமாக வர ஆரம்பித்தது.
ரவிதாசன் கொடுத்த மோரைப் பருகினான் சூ யென். பாதாள அறையிலிருந்து எந்த வழியாக தன் வீட்டுக்கு அவன் சென்றானோ, அதே வழியாகவே திரும்பியிருந்தான்.

‘‘என் பையன் ஒரு ஜெர்மானியனை கூட்டிட்டு வந்தான். பேரு ஃபாஸ்ட். உனக்கும் இவனை தெரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன்...’’
‘‘ம்... மின்னஞ்சல்ல போட்டோ வந்தது!’’
‘‘மேற்கத்திய தொன்மத்துல ஒரு அறிவாளி இருந்தான். அவன் பேரும் ஃபாஸ்ட்தான். சகல கலைகளும் அவனுக்கு அத்துப்படி. எல்லா வித்தைகளையும் கரைச்சு குடிச்சவன். ஆனா, சாத்தானோட உறவு கொண்டவன். ‘டீல் வித் த டெவில்’ங்கற வாக்கியமே அவனை வச்சுத்தான் வந்தது. அப்படிப்பட்டவனோட பேர்தான் இவனுக்கும். அதுமட்டுமில்ல... புராண ஃபாஸ்ட் மாதிரியே இவனும் புத்திசாலியா இருக்கான். கோயில் சிற்பங்களைப் பத்தி புத்தகம் எழுதறதா சொல்லிட்டு ‘தக்ஷீலா பல்கலைக்கழகம்’ பத்தியும், ‘கலிங்கத்து யுனிவர்சிட்டி’ பத்தியும் என்கிட்ட துருவித் துருவி கேட்டான். தெரியாதுன்னு சொல்லிட்டேன். நம்பினா மாதிரி தெரியலை. எப்படியும் திரும்ப வருவான். சரி, பிட்சு கொடுத்த சுவடிகளைக் கொடு...’’
தன் பையிலிருந்து ஓலைச்சுவடிகளை எடுத்து சூ யென் கொடுத்தான்.

‘‘இமயமலை பக்கத்துல கிடைச்ச இந்த சுவடிங்க, ஒடிசா... அதான் கலிங்க யுனிவர்சிட்டிக்கு சொந்தமானது’’ என்றபடியே அவற்றைப் புரட்டிய ரவிதாசனின் கண்கள் விரிந்தன. ‘‘புகையை எப்படி ஆயுதமா பயன்படுத்தணும்னு இதுல விவரிச்சிருக்காங்க...’’
‘‘தெரியும். பிட்சு சொன்னார்...’’
‘‘படிச்சாரா?’’
‘‘ஸ்கேன் செஞ்சும் வச்சிருக்கார்...’’
‘‘அதாவது, இந்த நடராஜரை நீ 3டி ஸ்கேன் செஞ்சா மாதிரி...’’
சூ யென் தலை கவிழ்ந்து அமைதியாக இருந்தான்.

‘‘இது செம்பு சிலை. மின்சாரத்தைக் கடத்தற சக்தி செம்புக்கு உண்டு. அதனாலதான் உன் லேப்டாப்புல எவனோ ஜிபிஎஸ்ஸை பொருத்தினதையும் இந்தச் சிலை கண்டுபிடிச்சுது. இப்ப நீ ஸ்கேன் செஞ்சதையும் காட்டிக் கொடுத்திருக்கு...’’ என்றபடி ரவிதாசன் சிரித்தான். அந்தப் புன்னகையில் சூ யென்னும் கலந்து கொண்டான்.
‘‘சரி, வா... போகலாம்!’’
‘‘எங்க?’’
‘‘பரமேஸ்வர பெருந்தச்சனை சந்திக்க...’’
‘‘மயிலாடிக்கா?’’
‘‘இல்ல. சோழ இளவரசனும், ராஜராஜ சோழனோட அண்ணனுமான ஆதித்ய கரிகாலன் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு...’’
விஜயலட்சுமிக்கு இருப்புக் கொள்ளவில்லை. தஞ்சை பெரிய கோயிலுக்கு அவள் வந்து அரை மணி நேரமாகிவிட்டது. புல்தரையில்தான் அமர்ந்திருக்கிறாள். ஆனால், இன்னும் ‘குந்தி’யைக் காணவில்லை. சூரியன் மறையும் நேரத்துக்கு அவள் வருவாள் என்று ருத்ரன் சொல்லியிருந்தார். சூரியன் மறைந்து இருளும் சூழ ஆரம்பித்துவிட்டது. கோயில் எங்கும் மெர்க்குரிப் பூக்களும் பூத்துவிட்டன. என்றாலும் இன்னும் யாரும் அவளைத் தேடி வரவில்லை. ஒருவேளை வேறு இடத்தில் அமர்ந்திருக்கிறார்களோ? வாய்ப்பில்லை. இதுதான் சந்திப்புக்கான இடம். அது நிச்சயம் ‘குந்தி’க்கும் தெரிந்திருக்கும்.

பரத்வாஜ மகரிஷியின் ‘விமானிகா சாஸ்த்ரா’ நூலை எப்படியோ பரமேஸ்வர பெருந்தச்சன் கைப்பற்றிவிட்டான். இதனால் நிகழ இருக்கும் விபரீதங்களைத் தடுக்க வேண்டுமானால், ஆயி களத்தில் இறங்க வேண்டும். எதைப் பாதுகாப்பதற்காக பல்லாயிரம் வருடங்களாக ரகசியமாக, அதுவும் குழுவாக இயங்கி வருகிறோமோ, அந்தப் பொக்கிஷத்தை பாதுகாக்க இப்போது அனைவரும் வெளிச்சத்துக்கு வந்தாக வேண்டும். ஒருவகையில் இது மரணத்துக்கு ஒப்பானதுதான். ரகசியம் என்பதே அடிபட்டுப் போய்விடும். என்றாலும் வேறு வழியில்லை.
‘சீக்கிரம் வா குந்தி. உனக்காகத்தான், நீ எப்படி இருப்பாய் என்றுகூட தெரியாமல் காத்திருக்கிறேன். நீ சொல்லப் போகும் அடையாள சொல்லுக்காகத்தான் வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன். உடனே வா. நிறையப் பணிகள் நமக்காகக் காத்திருக்கின்றன...’
சட்டென்று நிமிர்ந்து அமர்ந்தாள் விஜயலட்சுமி. அவளை நோக்கி வந்த உருவத்தைப் பார்த்ததும் அவளது சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. வருவது ‘குந்தி’யா? அந்த உருவம் அவள் அருகில் அமர்ந்தது. அதிர்ந்தாள் விஜயலட்சுமி. காரணம், அந்த உருவத்துக்கு எட்டு வயதுதான் இருக்கும். அத்துடன் தெளிவாக அந்த அடையாளச் சொல்லையும் சொன்னது.
‘‘கர்ணனின் கவசம்...’’
(தொடரும்)