நியூஸ் வே





*   எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’ படத்தில் முக்கியமான கேரக்டரில் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக சொன்னார்கள். கதை கேட்ட பிரகாஷ், இதில் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளரின் ‘மாதிரி’ தெரியவே... விலகிக்கொண்டார். மும்பையிலிருந்து நடிப்புப் புயல் நானா படேகர் இறக்குமதி ஆகி நடிக்கப் போகிறார்.

பக்கத்து வீட்டில் இருந்தாலும் ஷங்கரின் ஒரு படத்திலும் சூர்யா நடித்ததில்லை என்பது ஆச்சரியம். ‘நண்பனி’ல் மட்டும் சூர்யாவை நடிக்க வைப்பதற்கான பரிசீலனை வந்து கடைசி நேரத்தில் விஜய் நடித்தார். ஷங்கருக்கு முன்னால் ‘நண்பனை’ இயக்குகிற வாய்ப்பில் இருந்தவர் பார்த்திபன்தான்.

*   ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடியிருக்கிறார் பாண்டிராஜ். படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியிருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ், பாண்டிராஜ் கேட்ட சம்பளத்தால் மிரண்டு, புதிய இயக்குனரைத் தேடி வருகிறது.

*   முதல் பிரதி அடிப்படையில் லிங்குசாமிக்கு படம் செய்து கொடுக்கிறார் கமல்ஹாசன். கதை, வசனம், இயக்கம், ஹீரோ எல்லாமே அவரேதான்.

*   தெலுங்கு இயக்குநர் ராஜமௌலியின் படத்தில் நடிக்கிறார் நாசர். வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டாராம். ஐதராபாத் பறந்து விட்டார் நாசர்.

*   பிரபு சாலமன் தனியாக படக்கம்பெனி தொடங்கி விட்டார். முதல் படத்தை அவரது உதவியாளரே டைரக்ட் செய்கிறார்.

*   மிர்ச்சி சிவா, சிவகார்த்திகேயன் இருவரும் அடுத்த வருடம் ‘ஒன் சி’யை தொட்டுவிடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

*   வளர்ந்து வருகிறார் ரகுவரனின் மகன் சாய் ரிஷி. பத்தாவது படிக்கும் அவர் எதிர்காலத்தில் சினிமாவிற்கு வருவாரா என்பது நிச்சயமாகவில்லை. ரகுவரனின் அச்சு அசல் வார்ப்பில் அவரைப் பார்க்கும்பொழுது அசல் நடிகனின் ஞாபகம் வராமல் தீராது.

*   எங்கே, எத்தனை நாட்கள் ஷூட்டிங்கில் இருந்தாலும் இரண்டு வாரம் வரை தாங்குவார் விஜய். அதற்கும் மேலே ஆகிவிட்டால் சொந்த காசிலேயே ஃப்ளைட் டிக்கெட் எடுத்துவந்து, குழந்தைகளைப் பார்த்து திரும்பிவிடுவார். மகள் ரொம்ப செல்லம்.

ஹன்சிகா, ஆண்ட்ரியா, த்ரிஷா, தமன்னா போன்ற முன்னணி தமிழ் நாயகிகள் ஃபாரின் லொகேஷனுக்கு பறந்துவிட்டனர். ஷூட்டிங்கில் நடிச்ச மாதிரியும் ஆச்சு, கோடையை சமாளிச்ச மாதிரியும் ஆச்சு.



‘பார்ஃபி’ படத்தில் நல்ல பெயர் வாங்கியிருந்தாலும், இலியானாவுக்கு பாலிவுட்டில் நல்ல பிரேக் கிடைக்கவில்லை. ‘ரமணா’ ரீமேக்கில் அவர்தான் ஹீரோயின் என்றார்கள். ஆனால், ‘‘ஹீரோயின் கேரக்டரை இன்னும் கொஞ்சம் டெவலப் செய்கிறோம். அதில் இலியானா நடிக்கவில்லை’’ என்று சொல்லிவிட்டார் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என புரியாமல் திகைத்துப் போயிருக்கிறார் இலியானா.

*   ‘கும்கி’ வெற்றிவிழா சமீபத்தில் கோவையில் நடந்துள்ளது. படத்தை தயாரித்த லிங்குசாமியும் இயக்குனர் பிரபுசாலமனும் கடைசிவரை பேசிக்கொள்ளாமல் வடக்கு தெற்காக பார்த்துக்கொண்டிருந்ததாக கொங்கு செய்திகள் சொல்கின்றன.

சைலன்ஸ்
கல்யாணம் செய்துகொள்ள படாதபாடு பட்டும் கைகூடாத நடிகை, அம்மாவோடு வெளிநாட்டுக்குப் போனார். பிரியமான தாய், மகளுக்கு சேர்த்து ஒரு காட்டேஜ் புக் செய்தார்கள் யூனிட்டில். டென்ஷனான மகள், ‘எனக்கு தனியாக ஒரு அறை வேண்டும்’ என பிடிவாதமாகக் கேட்டு வாங்கிவிட்டாராம். ‘அம்மா, மகள் உறவெல்லாம் வெளியே வேடிக்கைக்குத்தானா’ என யூனிட்டில் ஒரே திகைப்பு.

எல்லா முக்கிய ஹீரோயின்களும் சேட்டைக்காரரின் வழிகாட்டுதலின்படி நடப்பதால் மற்ற ஹீரோக்கள் கடுப்பில் இருக்கிறார்கள். குறிப்பாக டாப் நடிகை, ‘‘அவர்கிட்ட ஸ்டோரி லைனை சொல்லிட்டு முடிவு சொல்றேன்’’ என வெளிப்படையாகவே சொல்கிறார். தமிழ் சினிமாவே இப்படியொரு கடலை நடிகரைக் கண்டதில்லை என்று பேசிக் கொள்வதுதான் இண்டஸ்ட்ரியில் டாப் டாபிக்!

*   ‘ஆல மொடலைண்டி...’ இது ப்ரூப் மிஸ்டேக் இல்லை. நானி - நித்யா மேனன் நடித்த தெலுங்கு படத்தின் பெயர். இந்தப் படம் தமிழில் ரீமேக்காகிறது. கௌதம் கார்த்திதான் ஹீரோ. சார் கைவசம் இப்போது மூன்று படங்கள்.

*   பாலுமகேந்திராவின் மாணவர்களில் பாலாவும், வெற்றிமாறனும் செயின் ஸ்மோக்கர்கள். வெற்றிமாறன் இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டு சுவிங்கத்திற்கு தாவிவிட, டென்ஷன் நேரங்களில் பாலாவின் உற்ற தோழனாகி விடுகிறது சிகரெட்.

*   மனைவி ஜீவா இறந்த பிறகு, அவர் இருந்த முருகேசன் தெரு வீட்டிற்கு வருவதில்லை இளையராஜா. மகன் கார்த்திக்ராஜாவுடன்தான் இருக்கிறார் ஞானி.

*   ‘குகன்’ படத்தில் வில்லனாக நடிக்கும் சுப்பு பஞ்சுவை, ‘ரஜினியும் சத்யராஜும் கலந்த கலவை’ என்று படத்தின் இயக்குனர் அழகப்பன்.சி வர்ணித்ததும் ஆடிப் போய் விட்டார் சுப்பு. ‘‘அவங்க இரும்புன்னா நான் துரும்புங்க’’ என்று அடக்கி வாசித்து தப்பித்தார்.