உதயம் NH4 : சினிமா விமர்சனம்





பெங்களூரில் படிக்கப் போன இடத்தில் பப்பும் மப்புமாக நண்பர்களுடன் ஜாலி பண்ணும் சித்தார்த்துக்கு, கர்நாடகா அரசியல் புள்ளியின் மகள் அஸ்ரிதாவுடன் காதல். மகளின் காதல் தனது கௌரவத்துக்கு உலை வைத்து விடும் என்ற பயத்தில் சித்தார்த்தை தட்டி வைக்கிறார் அமைச்சர். பதிலுக்கு அமைச்சரின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு, அவர் பெண்ணைத் தூக்கிக் கொண்டு சென்னை வருகிறார் சித்தார்த். காதலனிடமிருந்து மகளைப் பிரித்து வர என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் கே.கே.மேனனை பணிக்கிறார் அமைச்சர். தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கும் துரத்தலும் முடிவுமே ‘உதயத்தின்’ விறுவிறுப்பான கதை!

எதிர்பார்த்துப் போகாவிட்டால், முதல் பாதியில் தமிழ் சினிமாவின் பாரம்பரியக் காட்சிகளை உடைக்கிறது ‘உதயம்’. முழுமையான ‘ரோடு மூவி’ என்பது, நிச்சயமாக தமிழ் சினிமாவுக்குப் புதுசு. ஒரு அசல் மாணவனுக்கான முகவெட்டும் சிரிப்பும் வேடிக்கையும் சித்தார்த்துக்கு அட்டகாசப் பொருத்தம். நுனி நாக்கு ஆங்கிலத்தில் புகுந்து விளையாடும் மாணவர்களுக்கு மத்தியில், ‘‘எனக்கு எல்லா விஷயமும் தெரியும்... ஆனா எதுவும் முழுசா தெரியாது’’ எனத் துவங்கும் சித்தார்த்தின் அறிமுகம், அழகு. வெற்றிமாறனின் ஸ்கிரிப்ட்டுக்கு இணையாகப் படத்தைக் கொண்டு நிறுத்தியிருக்கிறார் புதியவர் மணிமாறன்.

போலீஸ் ஒரு பக்கம் வலை விரிக்க, இன்னொரு புறம் புதுப்புது ஸ்கெட்ச் போட்டு காதலியுடன் சித்தார்த் நழுவும் இடங்கள் நம் லப்டப்பை எகிற வைக்கிறது. காதலுக்கு குறுக்கே எது வந்தாலும் கவலையில்லை என்று  என்.ஹெச்சில் சித்தார்த் ஆடும் ஆட்டம் சுவாரஸ்யக் குவியல். காட்சிகளை விட்டு விலகி நிற்காத இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார் சித்தார்த்.



யாரின் சாயலும் படாமல் இறக்குமதி ஆகியிருக்கும் புது சரக்கு, என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் கே.கே.மேனன். நடிப்பில் அலட்டிக் கொள்ளாத கச்சிதம். சேஸிங்குக்கு இடையிலும் வீட்டில் மனைவியிடம், குழந்தையின் பிறந்தநாளைப் பற்றி விசாரிப்பது புது ஸ்டைல். அவ்வளவு அவசரத்திலும் அந்த விசாரிப்பு உரையாடல், படத்துக்கு கொண்டு வருவது உயிர்த் துடிப்பு.

அஸ்ரிதாவைப் பிரித்து இழுத்து வரும்போதே காதலைப் பற்றியும் சித்தார்த் பற்றியும் ஜீப்பில் அலசி ஆராய்வது படு பாந்தமான காட்சி. கடமையின் சின்னமாக போலீஸைக் கொண்டு நிறுத்தாமல், பலவீனங்களையும் சாடியிருப்பது துணிச்சல்.

முதல் பாதியில், எப்படிக் கடத்தப் போகிறார்கள், எந்த வழியாகத் தப்பிப்பார்கள் என எதிர்பார்ப்பு ஆக்ஸிலேட்டரை முடுக்கிவிடும் இயக்குனர், பிற்பகுதியில் சற்றே சோர்ந்திருக்கிறார். சித்தார்த்தின் பரபரப்புக்கும் சாமர்த்தியமான நடிப்புக்கும் இன்னும் அஸ்ரிதா ஈடு கொடுத்திருக்கலாம். செல்போனை கையில் வைத்திருப்பது தனிமையில் இருப்பதாகவும் ஒளிந்து கொண்டதாகவும் ஆகாது என்பதை வகை வகையாகக் காட்டியிருப்பது படத்திற்கு பெரும் ப்ளஸ்.

திரைக்கதையைப் புரிந்துகொண்டு உழைப்பு காட்டியிருக்கிறார் கேமராமேன் வேல்ராஜ். பதைபதைப்பு, கேள்வி, அவசரம், திகில், திருப்பம் என அனைத்தையும் காட்சிகள் வழி தருகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையில் ‘யாரோ இவன்’ கிட்டத்தட்ட தாலாட்டு. புது தம்பதிகளாகப் போகும் ஜி.வி பிரகாஷும் சைந்தவியும் உயிரோடு உருகி இருக்கிறார்கள்.
இந்தக் கோடைக்கு இந்த உதயம் என்.எச். 4 ரோட்டில் பயணிக்கலாம்.
- குங்குமம் விமர்சனக் குழு