கர்ணனின் கவசம்16





களைத்துப் போய் மரக் கட்டிலில் படுத்திருந்த சங்கரையே பார்த்துக் கொண்டிருந்தாள் ராஜி. அடிவயிறு எரிந்தது. ஆசை ஆசையாக பெற்ற மகன். வயதுக்கு மீறிய அறிவுடன் வளைய வந்த பாலகன். சிற்ப சாஸ்திர ரகசியங்களைக் கசடறக் கற்றுக் கொண்ட வாரிசு. தங்கள் காலத்தில் முடியாவிட்டாலும், தன் காலத்தில் நிச்சயம் பழி வாங்குவான் என்று நம்பிக்கை அளித்த நட்சத்திரம்.

எல்லாம் பழங்கதையாகி இப்போது சக்கையாக பிழியப்பட்டு படுத்திருக்கிறான். பிழைப்பானா? தெரியாது. ஒருவேளை கண்விழித்தாலும் முன்பு போல் புத்திசாலித்தனத்துடன் இருப்பானா? சொல்வதற்கில்லை. எதுவும் நடக்கலாம். நடப்பது நடக்கட்டும். முன்வைத்த காலை பின் வைப்பதாக இல்லை. யுத்தத்தில் யார் உயிருடன் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பிழைப்பது முக்கியமல்ல. வெற்றியே நிரந்தரம். அதுவே ஆயிரமாண்டு கால பழி உணர்ச்சியைத் துடைக்கும் மாமருந்து.

வழக்கத்தை விட அதிகமாக உப்பைக் கலந்து தயாரிக்கப்பட்ட உணவை சங்கருக்கு புகட்டினாள். மாற்று மருந்தை நீரில் கலந்து குடிக்க வைத்தாள். யாரோ அழைக்கும் சப்தம் கேட்டது. பக்கத்து வீட்டுப் பெண். மர நாற்காலியில் இருந்து இறங்கினாள். பாதத்தை நனைத்தபடி குளிர்ந்த நீர் ஓடிக் கொண்டிருந்தது. நல்லவேளையாக பாதாள அறையில் சங்கரை படுக்க வைத்திருக்கிறோம். இல்லாவிட்டால் அநாவசியமான கேள்விகள் எழும்.

வந்தவளை சந்திப்பதற்காக சென்ற ராஜியின் மனதில், ரவிதாசனின் உருவம் எழுந்தது. எதற்காக சென்றாரோ, அந்த வேலையை அவர் கச்சிதமாக முடித்திருக்க வேண்டுமே என்ற கவலை எழுந்தது.

அலைபாயும் உள்ளத்துடன் அவள் சென்றதும்  அந்த மாற்றம் நிகழ ஆரம்பித்தது.
 பாதாள அறையின் நடுவில் இருந்த பீடமும், பீடத்தின் மீதிருந்த செம்பினாலான நடராஜர் சிலையும் அசைந்தன. சுவர்களில் இருந்த சிந்து சமவெளி, மாயன், சீன, மெசபடோமிய நாகரிகங்களின் வரைபடங்கள் ஒன்று சேர்ந்து மகாபாரத காலகட்டத்து நிலப்பரப்பின் வடிவத்துடன் கலந்தன. பின்னர் அந்த வரைபடங்களின் கோடுகள் அப்படியே வளைந்து, நெளிந்து ஒரு உருவமாக மாறின. மாறிய அந்த உருவத்தின் இமைகள் திறந்தன. கட்டிலில் படுத்திருந்த சங்கரின் மீது அதன் பார்வை படிந்தது.

 சில நொடிகள்தான். பிறகு ஒரு முடிவுடன் சுவரை விட்டு அந்த உருவம் இறங்கி, சங்கரை நெருங்கியது. தன் இரு கைகளாலும் அவனை அப்படியே அள்ளிக்கொண்டு வந்த வழியில் திரும்பியது. சுவருடன் சுவராக மறைந்தது. இதனையடுத்து, உருவமாக மாறிய கோடுகள் பழையபடி வரைபடங்களாகின. அசைந்த நடராஜரும் அமைதியானார்.

சுவரில் தோன்றிய அந்த உருவம், வேறு யாருமல்ல. யாரைக் கொலை செய்த குற்றத்துக்காக ரவிதாசனின் வம்சம் நாடு கடத்தப்பட்டதோ, அந்த ஆதித்த கரிகாலனின் தமக்கையும், ராஜராஜ சோழனின் சகோதரியுமான குந்தவை நாச்சியார்தான்.

‘‘வாங்க... வாங்க...’’  ஆயியை வரவேற்ற விஜயலட்சுமி, வாசல் என்றும் பாராமல் அவளை நமஸ்கரித்தாள். ‘‘இந்த நேரத்துல உங்களை எதிர்பார்க்கவேயில்லை...’’ விஜியின் குரலில் மட்டுமல்ல, உடம்பிலும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
‘‘வர வேண்டிய நேரம்... வந்துட்டேன்...’’ என்றபடி விஜியை அலசிய ஆயியின் கண்களில் திருப்தி நிலவியது. ‘‘ருத்ரன் திரும்பி வந்ததுல உனக்கு சந்தோஷம்தானே?’’
சங்கடத்துடன் நெளிந்த விஜயலட்சுமி, ‘‘குந்தியை நீங்க அனுப்பினதுல கூட மகிழ்ச்சிதாம்மா...’’ என்றாள்.
‘‘பாலாவை சொல்றியா?’’
‘‘பாலா?’’
‘‘ம்... குந்தி தேசத்து இளவரசி பேரு பாலா திரிபுரசுந்தரி...’’
விஜியின் கண்கள் மின்னின. ‘‘பேருக்கு ஏத்தா மாதிரியே இருக்காம்மா...’’
‘‘குணம் கூட அப்படித்தான். அதனாலதான் உன்கிட்ட அவளை அனுப்பியிருக்கேன்...’’ என்ற ஆயியின் கண்கள் வீட்டை ஆராய்ந்தன. ‘‘எங்க பாலாவை காணும்?’’
‘‘மேல படுத்துட்டு இருக்காம்மா..?’’
‘‘ஆரோக்கியமா இருக்காளா..?’’
‘‘உங்க ஆசீர்வாதம் இருக்கிறப்ப அவளுக்கு ஒரு குறையும் வராதுமா... நல்லூர் சிவன் கோயிலுக்கு போயிருந்தோம். அந்த சோர்வுல கண் அசந்திருக்கா...’’

விஜியை உற்றுப் பார்த்து தலையசைத்த ஆயி, நேராக பூஜையறைக்குச் சென்றாள். சாம்பிராணியும் ஊதுவத்தியும் கலந்த மணம் அவளை வரவேற்றது. நேராக மகாமேரு இருந்த இடத்துக்கு சென்றவள், கூடையில் இருந்த பூவை அள்ளி அதன் மீது தூவினாள். நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்து வணங்கினாள். பயபக்தியுடன் மரப்பெட்டியின் அருகில் சென்றவள், அதைத் திறந்தாள். ஜன்னல் வழியே விழுந்த சூரிய ஒளியில் விஜயாலய சோழனின் வாள் பளபளத்தது. அதை கையில் எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டாள். பிறகு அதை தன் கையில் இறுகப் பிடித்து உயர்த்தினாள்.

‘‘இந்த வாளை பயன்படுத்த வேண்டிய நேரம் நெருங்கியாச்சு...’’ என்றபடி விஜயலட்சுமியை ஏறிட்டவள், ‘‘மணப்பாடு நாகநாத சுவாமி கோயில்லேந்து ருத்ரன் வர தாமதமாகும். அதுக்குள்ள நாம செய்ய வேண்டிய வேலையை முடிச்சிடலாம்...’’ என்றவள், பதிலை எதிர்பார்க்காமல் அந்த வாளை மீண்டும் மரப்பெட்டியிலேயே வைத்தாள். பின்னோக்கி நடந்தபடியே பூஜையறையை விட்டு வெளியே வந்த ஆயியின் நெற்றியில் வியர்வை பூக்க ஆரம்பித்தது. கைக்குட்டையால் அதை துடைத்தவள், பக்கவாட்டில் இருந்த மாடிப் படிக்கட்டில் நிதானமாக ஏற ஆரம்பித்தாள்.
பின்தொடர்ந்த விஜயலட்சுமி, ‘‘அம்மா... சில சம்பவங்கள் நடந்துடுச்சும்மா...’’ என்றாள் தயக்கத்துடன்.

‘‘என்ன... நல்லூர் சிவன் கோயில் குளத்துல இருந்த மகாபாரத குந்தி சிலையையும், சுரங்க நூலகத்துல இருந்த பரத்வாஜ மகரிஷி எழுதின ‘விமானிகா சாஸ்த்ரா’ நூலையும் காணோம்... அதுதானே?’’
பதில் சொல்லாமல் தலையைக் குனிந்தாள் விஜயலட்சுமி.
‘‘இரண்டையும் நான் பார்த்துக்கறேன்... கவலைப்படாத...’’ என்ற ஆயி, படுக்கையறையின் முன்னால் வந்து நின்றாள். கதவு மூடியிருந்தது. திரும்பிப் பார்க்காமலேயே ‘‘திற...’’ என கட்டளையிட்டாள்.

முன்னோக்கி வந்த விஜயலட்சுமி, கதவின் பிடியைப் பிடித்து திறந்தாள். உள்ளே
கட்டில் இருந்தது. தலையணை இருந்தது. போர்வை விரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் மீது படுத்திருந்த பாலாவைத்தான் காணவில்லை.
‘‘இங்கதாம்மா படுத்திருந்தா...’’ நடுக்கத்துடன் சொன்ன விஜயலட்சுமியைத் தாண்டி ஜன்னலோரம் சென்றாள் ஆயி. கண்ணாடி ஜன்னல் அகலமாகத் திறந்திருந்தது. அதன் வழியே வெளியே பார்த்தவளின் உதடுகளில் புன்முறுவல் பூத்தது.
தொலைவில் மயங்கிய நிலையில் இருந்த பாலாவை தன் தோளில் சுமந்தபடி ஒரு மனிதன் சென்று கொண்டிருந்தான்.
அவன், ரவிதாசன்.

‘‘இந்த இடம்தானா?’’ சுற்றிலும் பார்த்தபடியே கேட்டான் குள்ள மனிதன்.
‘‘வரலாற்றுக் குறிப்பு அப்படித்தான் சொல்லுது...’’ என்றபடி உயரமாக இருந்த அந்த மனிதன், மடமடவென்று கட்டளைகளைப் பிறப்பிக்க ஆரம்பித்தான்.
‘‘மறைந்து போன சரஸ்வதி நதியைக் கண்டுபிடிக்கிற பொறுப்பை நம்ம ஒன்பது பேர்கிட்டயும் ஆயி ஒப்படைச்சிருக்காங்க. அவங்க எப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவங்கனு நம்ம எல்லாருக்குமே தெரியும். அப்படிப்பட்டவங்களுக்கு உதவ வேண்டியது நம்ம கடமை. அதுதான் நம்ம முன்னோர்களுக்கு நாம செலுத்தற மரியாதையும் கூட...’’ என்று நிறுத்தியவன், அனைவரது கண்களையும் பார்த்த படியே தொடர்ந்தான்.

‘‘இன்றைய குஜராத்  அரியானா மாநிலங்கள் வழியாதான் அப்ப சரஸ்வதி நதி பாய்ந்ததா ஒரு நம்பிக்கை இருக்கு. கிடைத்த ஆதாரங்களும் அந்த நம்பிக்கைக்குத்தான் வலு சேர்க்குது. அதேபோல மகாபாரத காலகட்டத்துல சரஸ்வதி நதி, திடீர்னு பாலைவனமா மாறினதாகவும், கொஞ்சம் தள்ளி திரும்பவும் நதியா ஓடியதாகவும் குறிப்பு இருக்கு. மதுரா, துவாரகாவைத் தொட்டு அந்த நதி கடல்ல கலந்திருக்கு. பரசுராமரும், கிருஷ்ணரும் அந்த நதில விளையாடியிருக்காங்க. இதனோட தெற்குப் பகுதிலதான் குருக்ஷேத்திரப் போர் நடந்திருக்கு. இதையெல்லாம் வச்சுத்தான், இதோ இந்த தார் பாலைவனத்துக்கு வந்திருக்கோம்...’’

‘‘புரியுது... இங்கேந்து நம்ம வேலையை ஆரம்பிக்கப் போறோம் இல்லையா...?’’ மத்திம உயரத்தில் இருந்த அந்த மனிதன் வாயைத் திறந்தான்.

‘‘ஆமா... ஒருவேளை இங்க நமக்கு சரியான துப்பு கிடைக்கலைனா, அடுத்து நாம இமயமலைக்குப் போகணும். சரஸ்வதியோட பிறப்பு அந்தப் புனித மலைதான்...’’ என்று நிறுத்திய உயரமான மனிதன், சில நொடிகள் அமைதியாக இருந்துவிட்டு பிறகு தொடர்ந்தான். ‘‘ஆனா, நம்ம தேடல் இந்தப் பாலைவனத்துல ரொம்ப சுலபமா இருக்கும்னு நினைக்க வேண்டாம். பெரிய பெரிய ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்...’’ என்றான்.

‘‘எப்படிப்பட்ட ஆபத்தையும் சந்திக்கிற சக்தி நமக்கு இருக்கு...’’ என்று குள்ள மனிதன் சொல்லி முடிக்கவும், அவர்கள் நின்றிருந்த இடம் அசையவும் சரியாக இருந்தது.
ஒன்பது பேரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ஏதோ ஆபத்து என்று அவர்களது உள்ளுணர்வு சொன்னது. என்றாலும் யார் முகத்திலும் பயத்தின் சாயல் ஊடுருவவில்லை. அப்படியே நின்றார்கள். அசைந்த பூமி, நொடியில் இயல்புக்கு வந்தது. இதனையடுத்து ‘உஷ்...’ என்ற சப்தத்துடன் காற்று வீச ஆரம்பித்தது.

பாலைவனத்தில் காற்று வீசுவது சகஜம். எனவே ஒன்பது பேரும் அதை பெரிதுபடுத்தவில்லை. ஆனால், காற்றின் வேகம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியபோது அவர்களது புருவங்கள் முடிச்சிட்டன. உயரமான மனிதன் தன் பார்வையால் மற்றவர்களுக்கு செய்கை செய்தான். அவன் சுட்டிக்காட்டிய இடத்தை அனைவரும் பார்த்தார்கள்.

மூன்றாள் உயரத்தில் புழுதிப் படலம் ஒன்று எழுந்து அவர்களைக் குறி பார்த்து வேகமாக வந்தது. அசையாமல் நின்றார்கள். இமைக்கும் பொழுதில் அந்தப் படலம் அவர்களைச் சூழ்ந்தது. அனைவரும் தங்கள் கைகளால் முகத்தை மூடினார்கள். கண்களில் மணல் துகள்கள் விழாமல் பார்த்துக் கொண்டார்கள்.

மணல் கற்கள், அவர்களது உடலைத் துளைத்தன. குத்தின. குப்புறத் தள்ள முயன்றன. பாதங்களை அழுத்தமாக ஊன்றியபடி ஒன்பது பேரும் அசையாமல் நின்றார்கள். கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு இது நீடித்தது. பிறகு அந்தப் புழுதிப் படலம் அவர்களைக் கடந்து சென்றது.

ஒன்பது பேரும் கைகளை விலக்கினார்கள். அனைவரது உடலிலும் மணல் புழுதி. அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் நார் நாராகக் கிழிந்து தொங்கின. வெற்றுடம்பில் புள்ளி புள்ளியாக ரத்தம் ஊற்றெடுத்தது.

‘‘முதல் ஆபத்தைக் கடந்துட்டோம்...’’ என்றான் உயரமான மனிதன்.
‘‘இல்ல... அங்க பார்...’’ என்றான் குள்ளமான மனிதன்.
அவன் சுட்டிக்காட்டிய திசையை நோக்கிய பதினாறு கண்களும் அதிர்ச்சியில் உறைந்தன.
அவர்கள் உடலை சல்லடையாகத் துளைத்த புழுதிக் காற்று, நகராமல் சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்தது. ஆம், நின்று கொண்டிருந்தது. ஆனால், அஃறிணையாக அல்ல. உயிரிணையாக.

கண்கள் தெறித்து விழும் வகையில் இமைகளை விரித்து ஒன்பது பேரும் அந்த உருவத்தைப் பார்த்தார்கள். வானத்துக்கும் பூமிக்குமாக ஆஜானுபாகுவான மணல் மனிதன் நின்றுக்கொண்டிருந்தான். ஒன்பது பேரும் தன்னைப் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததும், அந்த மணல் மனிதனின் முகத்தில் புன்னகை அரும்பியது.
நிதானமாக அவர்களை நோக்கி அடியெடுத்து வைத்தான்.
(தொடரும்)