தமிழர்களை கிண்டல் செய்கிறேனா? ஷாக் ஷாருக்!





சிறு தூறல் குளிப்பாட்ட, குளிர் காற்று தலை துவட்ட, மும்பையின் ‘தாஜ் லேண்ட்ஸ் எண்ட்’ ஓட்டலில் இருக்கிறார் ஷாருக். இந்தி சினிமாவின் கரன்ட் தல, தளபதி, சூப்பர் ஸ்டார்... எதைச் சொன்னாலும் பொருந்திக்கொள்வார். கூடவே தீபிகா படுகோன். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ஷூட்டிங் முடிந்து திரைக்கு வர நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதையொட்டிய சந்திப்புதான் இது... ‘ஹலோ’ என நீண்ட (இவ்வளவு நீளமா) விரல்களை பற்றிக் குலுக்கினால், ‘‘ஆயியே... ஆப் கைஸே ஹை?’’ எனக் குறும்பாக நலம் விசாரிக்கிறார். இருந்தும் நம் குல வழக்கப்படி தீபிகாவிடமே திரும்பினோம்...

‘‘ஆச்சரியமா இருக்கு. இவ்வளவு அழகா சேலை கட்டத் தெரியுமா உங்களுக்கு...’’
‘‘ ‘சென்னை எக்ஸ்பிரஸ்’தான் எனக்கு சேலை கட்ட கற்றுக்கொடுத்தது. சௌத் இண்டியன் பெண்கள் ரொம்ப அழகு. சேலையில வந்தா, எந்த இடத்திலும் அவங்கதான் அழகில் முதல் இடத்தில் நிற்பாங்க. பேன்ட், ஷார்ட்ஸ், சுடிதார்னு பழகிட்டு சேலை கட்டிக்கிட்டே நடிக்கிறதும், நடக்கறதும், ஆடறதும் பெரிய வேலையாப் போச்சு. பெங்களூரு பொண்ணுன்னாலும் இந்தப் பக்கம் வந்துட்டு தமிழை அதிகம் மறந்திருந்தேன். சத்யராஜ் சார் வேற இருந்தாரா... அதனால் தமிழும் ஓரளவு வந்துடுச்சு!’’

‘‘அஞ்சு வருஷத்திற்குப் பிறகு ஷாருக்கோட ஜோடி... எப்படி ஃபீலீங்?’’
‘‘நாங்க ‘டச்’லதான் இருக்கோம். ஷாருக் எனக்கு ரொம்ப முக்கியமானவர். என்னை அப்படிப் பார்த்துக்குவார். அவருக்குக் கிடைக்கிற எல்லா வசதியும் எனக்கும் கிடைக்கணும் என்பதில் உறுதியா இருப்பார். அவர் பெரிய ஹீரோ, அவரை மொத்த இந்தியாவே திரும்பிப் பார்த்துக்கிட்டு இருக்குன்னு அவருக்குத் தெரியாது. பெர்ஃபெக்ஷனிஸ்ட். வேலையில் சீரியஸ்... முடிஞ்சிட்டா ஜாலி.’’

‘‘எப்பவும் அழகா இருக்கீங்களே, எப்படி?’’
‘‘சந்தோஷம்தான் முக்கியம். நமக்கு கிடைக்கிறதுதான் கிடைக்கும். கொடுத்தால்தான் வரும். போதும்னு சொன்னால்தான் கிடைக்கும்னு நம்புறவ நான். அதனால் மனசு ஃப்ரீயா இருக்கும். அப்படித்தானே உடம்பும் இருக்கும். அதெல்லாம் சரி... உங்களை ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேன். ஸாரி!’’
தீபியை ஷாருக் சீண்டிக்கொண்டே இருக்க, ‘‘சரி, நீங்களே பேசுங்க...’’ என செல்லக் கோபத்தில் வழிவிட்டார் தீபிகா. இனி ஷாருக்...

‘‘எனக்கு தமிழ் சினிமாவின் மீது அக்கறை உண்டு. நிறைய கவனிப்பேன். என்ன நடந்தாலும், பளிச்னு ஒரு புதுப்படம் வந்தாலும் என் பார்வைக்கு வந்திடும். அதனாலதான் கமல் சார், ‘ ‘ஹே ராம்’ல் நடிங்க...’னு சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடி ‘எஸ்’ சொன்னேன். ‘ரா ஒன்’னில் தமிழ் கேரக்டரில் நடிச்சேன். இப்போ ‘சென்னை எக்ஸ்பிரஸி’ல் தமிழ்ப் பெண்ணை காதலிக்கிறேன். என்னவோ தெரியலை, நான் தமிழ்ப் படங்களை கிண்டல் செய்றேன்னு ஒரு செய்தி பலவிதங்களில் நெட்டில் பரவிக்கிட்டே இருக்கு. அதெல்லாம் சுத்தப் பொய்... இங்கே மும்பையில் தமிழர்களும், மராத்திகளும், இந்தி பேசும் மற்றவர்களும் அண்ணன்  தம்பி மாதிரி இருக்காங்க. இங்கே ஒருவரை ஒருவர் தீண்டியே ஆக வேண்டும். ஒருத்தர் இன்றி இன்னொருத்தர் வாழ முடியாது. நான் தமிழர்களை கிண்டல் செய்கிறேன் என யாரும் எழுதினால் சிரிச்சு வையுங்க!’’



‘‘ரொம்ப நாளைக்குப் பிறகு ஆக்ஷன் பண்றீங்க... நீங்க காதலுக்குத்தான் சரியானவர் இல்லையா?’’
‘‘அப்படி எந்த கருத்தும் நான் வச்சுக்கறதில்லை. குறிப்பா, என்னைப் பெண்களுக்குப் பிடிக்கும். எனக்கே கொஞ்சம் பெண் தன்மை உண்டு. இதைச் சொல்வதில் எனக்கு வெட்கம் இல்லை. எனக்கு பொண்ணுங்கன்னா ரொம்பப் பிடிக்கும். ‘இனி என் படங்களில் ஹீரோயின் பெயர்தான் டைட்டிலில் முதலில் வரும்’னு நான் சொன்னது இதனால்தான். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே அம்மா, அக்கா, அத்தைகள்னு பெண்கள் மத்தியில்தான். அவங்க பேச்சுக்குரல், சிரிப்பு, அழுகை எல்லாமே எங்க வீடு முழுக்க நிறைஞ்சு கிடக்கு.’’
‘‘உங்களுக்கு இவ்வளவு செல்வாக்கு இருக்கு... ஏன் அரசியலுக்கு வரணும்னு தோணலை?’’

‘‘இந்திப் படங்கள் போகிற ஏரியா பெரிசு. தமிழ்நாட்டில் அரசியலில் இருந்தவங்க, இருக்கிறவங்க எல்லாரும் அந்த மண்ணின் மைந்தர்கள். நான் டெல்லியில் பிறந்து வளர்ந்தவன். ஆனா, மும்பையில வேணுங்கிற அளவுக்கு என்னைக் கொண்டாடுறாங்க. அதைப் பயன்படுத்தி என்னால் எதையும் செஞ்சுட முடியாது. எனக்கு இங்கே சொந்த ஊர் அடையாளம் இல்லை. நம்மளை இங்கே ஏத்துக்கிட்டுத் தாங்குறதுக்கே நன்றி சொல்லணும். இதுல அரசியல் வேறயா?’’
‘‘ஷாருக் கானுக்கும் வயசாகுமா..?’’
‘‘நான் சின்னப்பசங்க மாதிரி பண்றதில்லை. இப்ப வெற்றியடைஞ்ச நிறைய படங்களில் முதலில் என்னைத்தான் தேடி வந்தாங்க. போயிட்டு வாங்கன்னு சொல்லியிருக்கேன். இந்த விஷயத்தில் ரசிகர்கள் கேட்கிறதுக்கு முன்னாடி நானே ரெடியாகிட்டேன். அவங்க சொல்லிக் காட்டி நான் திருந்தக்கூடாது. வயசுக்கேத்த மாதிரி பண்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கும்போது எனக்கு ஏன் பதட்டம்? 47 வயது காதலிக்கிற வயதில்லையா... உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே!’’
 நா.கதிர்வேலன்