கிளிக்கூண்டு வாழ்க்கை





‘‘எங்க சமூகத்துல பெண் பிள்ளை பொறந்தா மத்தவங்கள மாதிரி வருத்தப்பட மாட்டாங்க. ரொம்ப சந்தோஷப்படுவாங்க. நாலஞ்சு வயசுலயே விரதம் இருந்து, காப்புக் கட்டி, எட்டயபுரம் ஜக்கம்மா கோயிலுக்குக் கூட்டிப் போயி, நாக்குல விபூதி வச்சு, மந்திரப் பெரம்பு வாங்கிட்டு வந்திருவாங்க. அப்பவே அந்த பொண்ணு நாக்குல ஜக்கம்மா குடிவந்திருவா. ஓரளவுக்கு வெவரம் தெரிஞ்ச பெறகு, அந்தப் பொண்ணு குறி சொல்ல ஆரம்பிச்சிருவா...’’

 சந்தனக்கலர் சேலை, பெரிய குங்குமப் பொட்டு, இரு கை விரல்களிலும் மின்னும் மோதிரங்கள், அகன்ற முகத்தில் மின்னும் மூக்குத்திகள், கைநிறைந்த வளையல்கள் என அசல் தெக்கத்தி ஆத்மாவாக காட்சியளிக்கிற ஆத்தியம்மாவின் உதடுகளிலிருந்து பாட்டும் பேச்சுமாக வந்து விழுகிறது.

‘‘எந்த வாத்தியார்கிட்டயும் பாடம் படிச்சுட்டு இந்தத் தொழிலுக்கு வரலே... அனுபவம்தான் பாடம். எங்களுக்கு ஜக்கம்மா கொடுத்த கொடுப்பினை இது. ஆளைக்கூட முழுசாப் பாக்க மாட்டோம். கைரேகையோட தன்மையை பாத்தமுண்ணா, மனசுக்குள்ள பாட்டு வந்து முட்டும். அப்படியே பாடி முடிச்சிருவோம்.



நாங்க வேடர் சமூகத்தைச் சேந்தவங்க. எங்க தலைமுறை வரைக்கும் ஆம்புள, பொம்புளங்க யாரும் பள்ளிக்கூடம் போனதில்லை. இன்னைக்கு நிலைமை மாறிப் போச்சு. எங்க புள்ளைகளும் படிக்குதுங்க. ஜோசியம்தான் எங்க தொழிலு. ஆம்பளைங்க பத்து, பதினோரு வயசுல கிளிப் பெட்டிய தூக்கிருவாங்க. நாங்க கைரேகை பாக்க கிளம்பிருவோம். எட்டயபுரம் பக்கத்துல மலைப்பட்டின்னு ஒரு கிராமம்... அதுதான் எங்களுக்குப் பூர்வீகம். சென்னையில கிளி ஜோசியம், கைரேகை பாக்குற எல்லாருமே எங்காளுங்கதான். தாம்பரம், கே.கே நகர், ரெட்ஹில்ஸ்... இந்த மூணு ஏரியாவுலயும் எங்க ஜனங்க இருக்காங்க’’ என்கிற ஆத்தியம்மாவின் தொழில்தளம், மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயில் குளக்கரை.

‘‘இங்க வந்து முப்பது வருஷமாச்சு. வீட்டுக்காரர் கிளி ஜோசியம் பாக்குறார். சொந்தத்துக்குள்ளதான் கொடுக்கல், வாங்கல்... வரதட்சணை எல்லாம் கிடையாது. பொண்ணு ஜக்கம்மா வாக்கு வாங்கியிருந்தா போதும்... ஜோசியம் பாத்து காலம் முழுசும் புருஷன் வீட்டுக்கு உழைச்சுப் போடப் போகுது. பெறகெதுக்கு வரதட்சணை? 12 வயசுல பெரம்பைத் தொட்டவ நான். 10 வருஷமா இந்த இடத்துல உக்காந்திருக்கேன். கைரேகை, பேர் ராசி, சோழி போட்டுப் பாப்பேன். ஒரு நாளைப் போல தொழில் இருக்காது. சனி, ஞாயிறுன்னா நூறம்பது கிடைக்கும். மத்த நாட்கள்ல சும்மாகூட எந்திருச்சுப் போவேன்’’ என்கிறார்.

மெரினா கடற்கரையில், கண்ணகி சிலைக்குப் பின்புறம் மணலில் கால் மடக்கி அமர்ந்திருக்கிறார் தங்கராஜ். எதிர்பார்ப்போடு அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறது கூண்டுக்குள் இருக்கும் மீனாட்சி. ‘இன்னைக்கு ஏதாவது ஃபிகரு மடியுமான்னு ஜோசியம் பாத்துச் சொல்லுண்ணா’’ என்று கலாய்க்கிற இளைஞனை விரக்தியாகப் பார்த்துச் சிரிக்கிற தங்கராஜ், மீனாட்சிக்கு நெல் மணிகளை அள்ளிப்போடுகிறார்.

‘‘ஜக்கம்மா புண்ணியத்துல 4 புள்ளைங்க. ஒருத்தன் பி.இ முடிச்சுட்டு வேலைக்குப் போறான். 11 வயசுல நடக்க ஆரம்பிச்ச காலு... நாற்பது வருஷமா ஓயலை. படிக்க வச்சது, கல்யாணம் பண்ணி வச்சதுன்னு 2 லட்சத்துக்கு மேல கடன் ஏறிப் போச்சு. பையன் வருமானத்துல வட்டிகூட கட்ட முடியலே. அதான் இன்னமும் கிளிப்பெட்டியை தூக்கிக்கிட்டு அலையுறேன்.

திருவொற்றியூர்ல வீடு. சனி, ஞாயிறு மட்டும் கடக்கரைக்கு வருவேன். மதியம் 2 மணிக்கு வந்தா சாயங்காலம் 7 மணிக்கு கிளம்பிருவேன். நல்லா தொழில் நடந்தா 150 ரூபா நிக்கும். மத்த நாட்கள்ல தெருக்கள்ல சுத்துவேன். ஒருகாலத்துல இந்தத் தொழிலுக்கு மரியாதை இருந்துச்சு. வீடுகள்ல உக்கார வச்சுப் பேசுவாங்க. இன்னைக்கு, ‘ஏய் கிளிஜோசியம்’னுதான் கூப்பிடுறாங்க. அஞ்சு ரூபா கேட்டா ரெண்டு ரூபா தர்றேம்பாங்க. கடக்கரையில ஓரளவுக்கு தொழில் ஓடும். லவ்வர்ஸ் வருவாங்க. அவங்களைக் குஷிப்படுத்துற மாதிரி ஜோசியம் சொல்லணும். பத்துக்கு இருபதா கொடுப்பாங்க. ஆளப் பாத்துப் பேசுற சாமர்த்தியமும், பொறுமையும் இருந்தாதான் இந்தத் தொழிலை செய்ய முடியும். சொல்றதுல நூத்துல பத்து வார்த்தை பலிக்கும். சாமிய நம்புறவங்க சாஸ்திரத்தை நம்புவாங்க. மத்தபடி சூட்சுமமெல்லாம் எதுவுமில்லை’’ என்கிறார் தங்கராஜ்.



எம்.ஜி.ஆர் நினைவிடத்தை ஒட்டி இருள்சூழ்ந்த பகுதியில் தனித்து அமர்ந்திருக்கிற சின்னதுரை, அருப்புக்கோட்டைக்காரர். அருகில் தகிக்கிற பெட்ரோமாக்ஸ் லைட், சின்னதுரையின் வயோதிகத்தை இரட்டிப்பாக்குகிறது. கூண்டடைந்த இரு கிளிகளும் கடற்காற்றில் சிலிர்த்து சிறகு விரிக்க முயன்று தோற்கின்றன.

‘‘சென்னைக்கு வந்து 50 வருஷமாவுது. எம்.ஜி.ஆர் நகர்ல வாடகைக்குக் குடியிருக்கேன். 3 பசங்க. எல்லாரும் கல்யாணமாகி தனியாப் போயிட்டானுங்க. நானும் மனைவியும் மட்டும்தான். ஆரம்பத்துல எனக்கு இந்தத் தொழில்ல விருப்பமில்ல. ஒரு டைலர்கிட்ட வேலைக்குச் சேந்துட்டேன். முழுசா கத்துக்குறதுக்கு முன்னாடி அப்பா இறந்துட்டாரு. வேற வழியில்லாம கிளிப்பெட்டியைத் தூக்க வேண்டியதாயிருச்சு.

சீட்டுக்குள்ள சில நல்ல சாமிங்க இருக்கும். பாம்பு, பல்லி மாதிரி சில கெட்ட விஷயங்கள் இருக்கும். பெரும்பாலும், ஏதாவது பிரச்னை இருந்தாதான் ஜோசியம் பாக்க வருவாங்க. அவங்க மனசைப் புரிஞ்சுக்கிட்டு அந்தமாதிரி ஒரு சீட்டை எடுக்க வைக்கணும். சில சாஸ்திரப் புத்தகங்கள் இருக்கு. சீட்டுல என்ன நம்பர் போட்டுருக்கோ, புத்தகத்துல அந்தப் பக்கத்தை எடுத்து படிப்போம். எல்லாமே மனப்பாடமாயிப் போச்சு. கடகடன்னு வந்து விழும். முன்ன தெருவில சுத்தித்தான் தொழில் செஞ்சேன். வயசு எழுபத்தி ரெண்டாயிருச்சு. நாலு எட்டு ஒண்ணா அடியெடுத்து வைக்கமுடியல. அதான் இங்கே வந்து உக்காந்துட்டேன். சாயங்காலம் மூணு மணிக்கு வீட்டுல இருந்து கிளம்புவேன். அஞ்சு மணிக்கெல்லாம் வந்து கடையப் போட்டுருவேன். பெட்ரோமாக்ஸ் லைட்டுக்கு வாடகை 30 ரூபா. பஸ் செலவு 20. டீச்செலவு போக நூறு மிஞ்சுனா அதிர்ஷ்டம்’’ என்கிறார் சின்னதுரை.

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில், கபாலீஸ்வரர் கோயில் நிழலில் அமர்ந்திருக்கிற ரகுபதி, தாம்பரத்தில் குடியிருக்கிறார். இவருக்கு கஸ்டமர்கள் அதிகமாம். ‘‘ஜக்கம்மா புண்ணியத்துல கிளி ஜோசியம் மட்டுமில்லாம கைரேகை, ஜாதகம், பேர் ராசியும் பாப்பேன். சனி, ஞாயிறு, புதன்... மூணு நாள்தான் இங்கே வருவேன். மத்த நாட்கள்ல ஜாதகம் பாக்க வீடுகளுக்குப் போயிருவேன். கிளி ஜோசியத்துக்கு 20 ரூவா, கைரேகைக்கு 100, ஜாதகத்துக்கு 250... காலம், நேரம், யோகம், ராசி எல்லாம் விரிவா பாத்துச் சொல்லுவேன்.

12 வயசுல தொழிலுக்கு வந்துட்டேன். எங்க அப்பா பிரபலமான ஜோசியக்காரரு. ஜக்கம்மாவப் பத்தி பாட்டுப் படிச்சாருன்னா எல்லாரும் கூடி நின்னு கேப்பாங்க. அவர்கிட்ட கத்துக்கிட்ட தொழில்தான் இது. அடிபட்டு, உதைபட்டு, கால் வலிக்க நடந்து போயி அன்னைக்கு தொழிலக் கத்துக்கிட்டோம். இன்னைக்கு நாமளே கத்துக்கொடுத்தாலும் புள்ளைங்க கத்துக்க மாட்டேங்குதுங்க. இந்தப் பொழப்பு உங்களோட போகட்டுங்குதுங்க...’’ என்று வருந்துகிறார் ரகுபதி.

ரகுபதி செய்துகொண்டது காதல் திருமணம். 5 பிள்ளைகளில் மூத்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. கடைசிப் பையன் யு.கே.ஜி படிக்கிறான். ‘‘இந்தத் தொழிலை வச்சுத்தான் பல தலைமுறைகள் வாழ்ந்திருக்காங்க. இன்னைக்கு இதுக்கு மரியாதை குறைஞ்சிருக்கலாம். ஆனா, தொழிலுக்கு என்னைக்கும் அழிவில்லை. ஏதோ ஒரு துயரத்தோட எங்ககிட்ட வர்றவங்களுக்கு, ஜக்கம்மா பேர்ல நல்லதா நாலு வார்த்தை சொல்லி தைரியப்படுத்தி அனுப்புறோம். இதுல வருமானம் கம்மியா இருக்கலாம். ஆனா, திருப்தி இருக்கு’’ என்கிறார் ரகுபதி.

மற்றவர்களுக்கு நல்ல காலம் பிறக்க நாள் குறித்து அனுப்புகிற இந்த சாலையோர ஜோசியக்காரர்களுக்கு, தங்களுக்கு எப்போது நல்ல நேரம் பிறக்கும் என்ற கேள்விக்கு மட்டும் பதில் தெரியவில்லை.
 வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்