நிழல்களோடு பேசுவோம் : மனுஷ்ய புத்திரன்



அறிவு ஜீவித்தனம் என்றால் என்ன?



நவீன தமிழ்ச் சமூகத்திற்குள் அறிவு சார்ந்த ஒரு மரபு இருக்கிறதா என்கிற கேள்வியை எனக்கு நானே அடிக்கடி கேட்டுக்கொள்வேன். உண்மையில் அறிவு என்பதை நாம் எப்படி வரையறுத்திருக்கிறோம் என்பதுகூட மிகவும் குழப்பமானது. நிறைய பேர் பொது அறிவைத்தான் அறிவு என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள். திரும்பிய இடமெல்லாம் தகவல்கள் கிடைக்கின்றன. யாரும் எதையும் எப்போதும் நுனிப்புல் மேயலாம்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒரு புத்தகத்திற்காக எனது பதினெட்டாம் வயதிலிருந்து 23ம் வயது வரை ஐந்து வருடங்கள் காத்திருந்திருக்கிறேன். எங்கேயோ கேள்விப்பட்ட அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று தெரியாமல் ஏங்கியிருக்கிறேன். இன்று நீங்கள் அப்படிக் காத்திருக்க வேண்டியதில்லை. உங்கள் கையில் இருக்கும் செல்போன் மூலமாக இணையத்தில் அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்று ஒரு நொடியில் தேடி விடலாம். உடனடியாக பணம் அனுப்பி வாங்கலாம். சில சமயம் அந்தப் புத்தகமே இலவசமாக இணையத்தில் கிடைக்கவும் செய்கிறது. நீங்கள் அந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்றுகூட அவசியம் இல்லை. அது பற்றிய ஏதேனும் ஒரு குறிப்பையோ மதிப்புரையையோ படித்துவிட்டு, அந்தப் புத்தகத்தைப் பற்றி இணையத்தில் எங்காவது எழுதலாம். அந்தப் புத்தகத்தைப் படித்த அல்லது படிக்காத சிலர் உங்களோடு மிகத் தீவிரமாக விவாதத்தில் ஈடுபடலாம்.

இன்று ஒருவர் ஒரு பத்து நிமிடத்திற்கு எந்தத் துறையிலும் தன்னை மிகப் பெரிய விற்பன்னராகக் காட்டிக்கொள்ள முடியும். இணையமும், 24 மணி நேர தொலைக்காட்சி ஒளிபரப்புகளும் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக நூற்றுக்கணக்கான தற்காலிக வல்லுநர்களை உருவாக்கிய வண்ணம் இருக்கின்றன. இன்று நீங்கள் ஒரு இசைப்பிரியராக இருக்கலாம். ஆனால் நீங்கள் விரும்பினால் சிறிது நேரத்திற்கு ஒரு விஞ்ஞானியாக மாற முடியும். நீங்கள் ஒரு பொறியாளராக இருக்கலாம். சிறு பொழுதுக்கு நீங்கள் ஒரு உலக சினிமா விமர்சகராக மாற முடியும். நீங்கள் ஒரு ரயிலில் டிக்கெட் பரிசோதகராக இருக்கலாம். ஆனால் ஊடகங்கள் விரும்பினால், அல்லது நீங்கள் விரும்பினால், ஒரு மானுடவியல் ஆய்வாளராக மாறி சிறிது நேரம் ஆதிவாசிகளையும் பழங்குடி மக்களையும் பற்றிப் பேசலாம். நீங்கள் எந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்க விரும்பினாலும் அதற்கான முகமூடிகள் கிடைப்பது இன்று மிகவும் சுலபம். அது முகமூடி என்பதைப் பற்றி யாருக்கும் எந்த கவலையும் இல்லை. ஏனென்றால் இன்று ஒவ்வொருவருமே எந்தக் கணமும், சிறிது நேரத்திற்கு புகழ்பெற இப்படி ஒரு விற்பன்னராக மாறும் சாத்தியத்தில் இருந்துகொண்டிருக்கிறார்கள்.

தகவல்தொழில்நுட்பப் புரட்சி நிகழ்ந்தபோது, அதை அறிவுப் புரட்சியாக நம்பியவர்களில் நானும் ஒருவன். மனிதன் அறிவைத் தேடிச்செல்வதில் இருந்த தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டுவிட்டன என்று நம்பினேன்; இப்போதும் அப்படித்தான் நம்ப விரும்புகிறேன். ஆனால் இந்த தகவல் பெருக்கமும் விரிவாக்கமும் ஒரு அறிவுசார் சமூகத்தை உருவாக்குவதற்கு பதிலாக, அதை ஒரு கேலிப்பொருளாக மாற்றிவிட்டதோ என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

ஒருவர் ஒரு துறை சார்ந்து தன்னை முன்னிறுத்திக்கொள்வதற்கு அவருக்கு அந்தத் துறையில் ஒரு குறைந்தபட்ச பயிற்சியும் படிப்பும் தேவை. அல்லது இதற்குமுன் அவருக்கு அதில் மனோரீதியான ஈடுபாடாவது இருந்திருக்க வேண்டும். ஆனால் இது எதுவுமே இல்லாமல், யார் வேண்டுமானாலும் எதன்மீது வேண்டுமானாலும் எங்கோ பெற்ற இரவல் சொற்கள் மூலம் போலி அபிப்ராயங்களை உருவாக்கிக்கொள்வது அறிவுலக நடவடிக்கைகளின் மீதான ஒட்டுமொத்த மதிப்பையுமே சீர்குலைத்துவிட்டது. தற்காலிக அறிவுஜீவிகள், போலி அறிவுஜீவிகள், சில உடனடி தேவைகள் சார்ந்து உருவாக்கப்படும் அறிவுஜீவிகள் என முகமூடி மனிதர்களின் பெரும் நடமாட்டத்திற்கு நடுவே அறிவுசார் நடவடிக்கைகள் பெரும் குழப்பத்திற்குள் சிக்கிக்கொண்டிருக்கின்றன.



இது இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவதாக ஏராளமானவர்களிடம் இது ஒரு அறிவு சார்ந்த போலித்தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு அறிவுசார் பாசாங்கு என்பது இன்று மிகவும் எளிதான ஒரு கலையாக மாறிவிட்டது. அந்தப் பாசாங்கு தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளவும் பிறரை ஏமாற்றவும் எண்ணற்ற உபாயங்களை தருகிறது. உங்களது நடிப்புத்திறன் எவ்வளவுக்கு எவ்வளவு சிறப்பாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் ஜொலிக்கலாம். இந்த அறிவுஜீவி பாசாங்கு என்பது மூடத்தனத்தைவிட ஆபத்தானது. ஏனென்றால் மூடத்தனத்திலிருந்து உங்களுக்கு ஒரு மீட்சி உண்டு. ஆனால் இந்தப் பாசாங்கிலிருந்து ஒருநாளும் மீட்சி கிடையாது. தானே உருவாக்கிய இந்த சிலந்தி வலையில் சிக்கிக்கொண்டு உலவும் எண்ணற்ற அப்பாவிப் பூச்சிகளை எல்லா இடத்திலும் காணலாம். ஒரு துறையில் அறிவு என்பது மனக்கிளர்ச்சியூட்டும் ஒரு விளையாட்டு. நிறைய பேர் அந்த விளையாட்டு மைதானத்தின் வாசலிலேயே நின்று விடுகிறார்கள்.

இரண்டாவதாக, அறிவு என்பது எல்லா இடங்களிலும் வழிந்தோடும் மழைநீர் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டிருப்பதால், அதன்மீது ஒரு பெரும் அலட்சியம் உருவாகியிருக்கிறது. உண்மையான அறிவையும் போலி அறிவுஜீவித்தனத்தையும் பிரித்தறியும் இடத்திலிருந்து மக்கள் விலகிச் செல்கிறார்கள். எல்லா அறிவுசார்ந்த ஈடுபாடுமே வீணானது, தனக்குத் தேவையில்லாதது என்கிற ஒரு எதிரான மனோபாவம் இன்று இளைஞர்களிடையே பரவலாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் சிந்தனையையும் சமூகப் பொறுப்பையும் எள்ளி நகையாடுகிறார்கள். நம்முடைய கேளிக்கை கலாசாரம், அறிவை ஒரு சுமையாகப் பார்க்கிறது. நுனிப்புல் மேய்வதற்கு அப்பால் எதையும் ஆழ்ந்து கற்பதை அனாவசியம் என்று கருதுகிறது. ‘‘ஒரு புத்தகத்தின் பத்து பக்கங்களைக் கூட தொடர்ச்சியாகப் படிக்க முடியவில்லை’’ என்று சொல்லும் இளைஞர்களை நிறைய சந்திக்கிறேன். ‘‘ஏன் நீளமான வாக்கியங்களை எழுதுகிறீர்கள்’’ என்று கேட்கிறார்கள். பத்திரிகைகளில் எழுத்துகளைவிட படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டன. நுகர்வு கலாசாரமும், வெகுஜன ஊடகங்கள் தரும் கலையனுபவங்களும், அரசியலும் தவிர யாருக்கும் எதுவும் தேவைப்படவில்லை.
ஒரு சமூகம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென ஒரு கலை மரபையும் இலக்கிய மரபையும் இசை மரபையும் தத்துவ மரபையும் உருவாக்கி வளர்த்திருக்கிறது. ஆனால் அந்த மரபில் வாழும் ஒரு தலைமுறைக்கு இது எதுவுமே தேவையில்லை என்கிற அவலம் ஒரு பண்பாட்டின் பெரும் வீழ்ச்சியாகவே கருதப்பட வேண்டும். ‘‘எதுக்கு சார் இதெல்லாம். போரடிக்குது’’ என்று கேலிச்சிரிப்புடன் சொல்லும் இளைஞர்களைப் பார்க்கும்போது கோபத்தைவிட வருத்தமே மேலிடுகிறது.

அறிவுஜீவி பாசாங்கும் அறிவின் மீதான எள்ளல் மனோபாவமும் ஒரு சமூகத்தின் பண்பாட்டு வளர்ச்சியை நிர்மூலமாக்கிவிடும். அறிவின் பெயரால் அறிவை அழிக்கும் ஒரு விசித்திரமான காலத்தில் நாம் வாழ்கிறோம். மனிதர்கள் இன்று தங்கள் தலையை புதைத்துக்கொள்ளவும், தங்களுக்கு தற்காலிக போலி அடையாளங்களை உருவாக்கிக்கொள்ளவும் ஏராளமான விஷயங்கள் இலவசமாகவும் உடனடியாகவும் கிடைக்கின்றன. ஒட்டுமொத்த உலகமுமே வெற்றுக் கேளிக்கைகளின், போலி அடையாளங்களின் கூடாரமாக மாறிவிட்டது. யார் வேண்டுமானாலும் புரட்சியாளனாகவோ சர்வாதிகாரியாகவோ தங்களைக் கற்பனை செய்துகொள்ளும் இடத்தில் வேறுபாடுகளும் வித்தியாசங்களும் பெரும் பகுதி அழிந்துவிட்டன. அதனால்தான் தாலி வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றி 2013ல் நம்மால் கூச்சமில்லாமல் காரசாரமாக விவாதிக்க முடிகிறது. கலப்புத் திருமணம் வேண்டுமா, வேண்டாமா என்பதைப் பற்றி ஆவேசமாக அடித்துக்கொள்ள முடிகிறது. ஒரு சமூகம் கடந்து வந்திருக்கும் பாதை எதையும் இந்த போலி விவாதங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. நாம் மீண்டும் மீண்டும் செக்குமாடுகளைப் போல நூறு வருடங்களுக்கு முன்பு துவங்கிய அதே விவாதப் புள்ளிக்கு திரும்ப வந்துகொண்டிருக்கிறோம்.
அறிவின்மீது நம்பிக்கையற்ற ஒரு சமூகத்தில் வேறு என்னதான் நடக்க முடியும்?
(பேசலாம்...)

மனுஷ்ய புத்திரன் பதில்கள்


உண்மையிலேயே ஆமை, முயலை ஓட்டப்பந்தயத்தில் வென்றதா... அல்லது வெறும் கதையா..?
 எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.
ராஜ்ய சபா தேர்தல் முடிவை வைத்து இதற்கான பதிலை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
தந்தி சேவை நிறுத்தப்படுகிறதாமே?
 மல்லிகா அன்பழகன், சென்னை.

எந்தப் பிரச்னைன்னாலும் நமக்கு தந்தி அடிக்க கிளம்பிடறாங்க என்று பிரணாப் முகர்ஜி பண்ணின வேலை மாதிரி தெரிகிறது இது.
யானை பிச்சையெடுக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?
 இரா.கமலக்கண்ணன், சித்தோடு.
யானையை வைத்து பிச்சையெடுப்பது மனிதனின் குணம். அது யானைக்குத் தெரியாத வரை பிரச்னை இல்லை.
‘தமிழர்களைப் போல மலையாளிகள் அப்பாவிகள் அல்ல’ என்று பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் கூறியிருப்பது குறித்து...
 இரா.வளையாபதி,தோட்டக்குறிச்சி.

பொதுவாக மலையாளிகள் தமிழர்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள். அடூர் கௌரவமாக அப்பாவிகள் என்று அழைத்திருக்கிறார்.
‘சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகின் உயர்ந்த இரும்புச் சிலை அமைப்போம்’ என்று நரேந்திர மோடி கூறியிருக்கிறாரே?
 ஆர்.சுகுமார், காட்பாடி

அப்படி அமைத்தால்தானே, சீக்கிரமே அதற்குக் கீழ் தனக்கு இன்னொரு சிலையை அமைத்துக்கொள்ள முடியும்!

நெஞ்சில் நின்ற வரிகள்
ஷோபா ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதைப் போலவே தமிழ் சினிமாவில் பிரதாப் போத்தன் ஏன் தொடர்ந்து முக்கியமான இடத்தில் இல்லாமல் போனார் என்பதும் எனக்கு எப்போதும் இருந்துகொண்டிருக்கும் கேள்வி. இந்தப் பாடலில் ஷோபாவை பார்க்கும்போதெல்லாம், நம் வீட்டிலிருந்த ஒரு பெண் இல்லாமல் போனதுபோன்ற ஒரு துக்கம் நெஞ்சை அடைக்கிறது. பிரதாப் போத்தன் ஒரு மனிதனின் அதீத மனநிலைகளை மிக அற்புதமாக திரையில் வெளிப்படுத்தியவர். ‘மூடுபனி’யில் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடலில் ஒருதலைக் காதலின் தத்தளிப்பை ஷோபா - பிரதாப் போத்தன் வழியாக காட்சிப் படிமமாக மட்டுமல்ல, கங்கை அமரனின் சரளமான வரிகள், இளையராஜாவின் படிக்கட்டில் வழிந்தோடும் நீர் போன்ற இசை, ஜேசுதாஸின் நடனக் குரல் அனைத்தையும் சேர்த்து பாலுமகேந்திரா நீங்காத நினைவாகவே மாற்றிவிட்டார்.
பொன் மாலை நேரங்களே, என் இன்ப ராகங்களே
பூவான கோலங்களே
தென் காற்றின் இன்பங்களே, தேன் ஆடும் ரோஜாக்களே
என்னென்ன ஜாலங்களே

எழுதிச் செல்லும் இணையத்தின் கைகள் : நெல்சன் சேவியர்



இளம் தலைமுறை ஊடகவியலாளர்களில் மிகவும் கவனம் பெற்று வருபவர் இவர். சன் நியூசில் விவாத நிகழ்ச்சிகளில் மிகக் கூர்மையான சமூக, அரசியல் பார்வைகளை முன்வைத்து ஒருங்கிணைத்து வருகிறார். அவருடைய ஃபேஸ்புக் பதிவுகள், சமகால சமூக அவலங்களின்மீது நேரடியான கோபத்தை வெளிப்படுத்தியிருக்கின்றன. இந்தப் பதிவு ஒரு பத்திரிகையாளனாக அவரது ஒரு அழகிய நினைவை முன்வைக்கிறது. 

‘திருவிளையாடல்’ படத்தில் ஆணவக் கலைஞர் பாலையாவிற்கு பாலமுரளி கிருஷ்ணாவும், சிவபெருமான் சிவாஜி கணேசனுக்கு டி.எம்.எஸ்ஸும் பின்னணி பாடி இருப்பார்கள். அப்போது பாடகர் பாலமுரளி கிருஷ்ணா கர்நாடக இசையில் உச்சத்தில் இருந்த நேரம். கதைப்படி சிவாஜியின் குரலுக்கு முன்பாக பாலையா தோற்க வேண்டும். அதாவது டி.எம்.எஸ் குரலுக்கு முன்பாக பாலமுரளி குரல் தோற்கவேண்டும். அப்போது டி.எம்.எஸ் வளர்ந்து வரும் பாடகர்தான்.

பாலமுரளியை பேட்டி எடுக்கச் சென்றபோது தயக்கத்துடன் கேட்டேன், ‘‘உங்கள் கலைப் பயணத்தின் உச்ச காலங்களில், ஒரு போட்டியில் உங்கள் குரல் தோற்பது போன்ற ஒரு படத்தில் பாட எப்படி சம்மதித்தீர்கள்?’’
அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்... ‘‘அதில் ஒன்றும் தவறில்லையே. இந்த பாலமுரளிகிருஷ்ணாவின் குரலைத் தோற்கடிக்க வேண்டும் என்றால், அந்த சிவபெருமானே வந்தால்தான் முடியும் என்றுதானே அதற்கு அர்த்தம்!’’
அதுதான் எத்தகைய விமர்சனத்தையும் எதிர்கொள்ளும் கலைஞனின் பார்வை!
https://www.facebook.com/nelsonxavier08?fref=ts