நம்பிக்கை : மலர்மதி





அன்றைக்குத்தான் புதிதாக வீட்டு வேலைக்குச் சேர்ந்திருந்தாள் அன்னம்மாள். அலுவலகத்துக்குக் கிளம்பும் அவசரத்தில் இருந்த அழகேசன், வேண்டுமென்றே ஓர் இருபது ரூபாய்த் தாளை நழுவவிட்டுப் போனான்.

மாலையில் வீடு திரும்பியபோது, ‘‘இந்தாங்க சார்! இது உங்க ரூம் பெருக்கறப்ப கிடைச்சது.’’ என்று இருபது ரூபாயைக் கொடுத்து விட்டாள் அன்னம்மாள்.
ஒரு மாதம் ஓடிய பிறகு ஒருநாள் கட்டிலில் நூறு ரூபாய்த் தாளை வைத்துவிட்டுப் போனான்.
‘‘என்ன சார்! பணத்தை அஜாக்கிரதையா வச்சிட்டுப் போறீங்க! உஷாரா இருங்க...’’ என்ற எச்சரிக்கையுடன் அன்னம்மாள் அதை எடுத்துக் கொடுத்தாள்.

இன்னொரு நாள் பாத்ரூம் குழாயில் தங்க செயினை மாட்டிவிட்டு வந்தான். அவன் எதிர்பார்த்தது
போலவே அன்னம்மாள் அதை எடுத்து அவன் மனைவியிடம்  ஒப்படைத்திருந்தாள்.
‘‘அன்னம்மாள் நேர்மையானவள்தான்னு நிரூபிச்சுட்டாள். இனி இவளை முழுசா நம்பலாம்’’ என்று அழகேசன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்த அதே சமயம்...
‘‘என்னடி, அன்னம்! புதுசா வேலைக்குச் சேர்ந்தியே... இடம் எப்படி?’’ என்று கேட்டாள் அவள் தோழி.

‘‘கொஞ்சம் கொஞ்சமா என்னை டெஸ்ட் பண்றான் அந்த ஆளு. நானும் நல்லவ மாதிரி நடிச்சுக்கிட்டிருக்கேன். இப்பதான் நம்ப ஆரம்பிச்சிருக்காங்க. சமயம் கிடைக்கட்டும், சுருட்டிக்கிட்டு ஓடிட வேண்டியதுதான்’’  வில்லி சிரிப்போடு சொன்னாள்
அன்னம்மாள்.